பழங்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் திராட்சை

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இருந்து திராட்சை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் திராட்சை ஏற்றுமதியின் மதிப்பு 314 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. பழங்கள் பிரிவில் திராட்சை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் திராட்சை ஏற்றுமதியின் மதிப்பு 314 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதர பழங்களின் ஏற்றுமதி மதிப்பு 302 மில்லியன் அமெரிக்க டாலராகவும், மாம்பழங்களின் ஏற்றுமதி 36 மில்லியன் டாலராக உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் கொய்யா ஏற்றுமதி 260 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 0.58 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த கொய்யா ஏற்றுமதி, 2021-22ம் ஆண்டில் 2.09 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த 2020-21ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு 126.6 மில்லியன் டாலர், நெதர்லாந்துக்கு 117.56 மில்லியன் டாலர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 100.68 மில்லியன் டாலர், நேபாளத்துக்கு 33.15 மில்லியன் டாலர், ஈரானுக்கு 32.5 மில்லியன் டாலர், ரஷ்யாவுக்கு 32.2 மில்லியன் டாலர், சவுதி அரேபியாவுக்கு 24.79 மில்லியன் டாலர் மற்றும் கத்தாருக்கு 22. 31 மில்லியன் டாலர் மதிப்பில் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

முதல் 10 இடங்களில் உள்ள இந்த நாடுகளுக்கு, கடந்த 2020-21ம் ஆண்டில், இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதியில் 82 சதவீதம் சென்றுள்ளது. யோகர்ட் மற்றும் பனீர் ஏற்றுமதியும் கடந்த 2013-14ம் ஆண்டிலிருந்து 200 சதவீதம் அதிகரித்து 2021-22ம் ஆண்டில் 30 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பால் பொருட்களின் ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 181.75 மில்லியன் டாலர் அளவுக்கு பால் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்த மதிப்பு கடந்த ஆண்டின் ஏற்றுமதியை விட அதிகரிக்கவுள்ளது.

கடந்த 2020-21ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 39.34 மில்லியன் டாலருக்கும், வங்கதேசத்துக்கு 24.13 மில்லியன் டாலருக்கும், அமெரிக்காவுக்கு 22.8 மில்லியன் டாலருக்கும், பூட்டானுக்கு 22.52 மில்லியன் டாலருக்கும், சிங்கப்பூருக்கு 15.27 மில்லியன் டாலருக்கும், சவுதி அரேபியாவுக்கு 11.47 மில்லியன் டாலருக்கும், மலேசியாவுக்கு 8.67 மில்லியன் டாலருக்கும், கத்தாருக்கு 8.49 மில்லியன் டாலருக்கும், ஓமனுக்கு 7.46 மில்லியன் டாலருக்கும், இந்தோனேஷியாவுக்கு 1.06 மில்லியன் டாலருக்கும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

முதல் 10 இடங்களில் உள்ள இந்த நாடுகளுக்கு, இந்தியாவின் கடந்த 2020-21ம் ஆண்டு பால் பொருட்கள் ஏற்றுமதியில் 61 சதவீதம் சென்றுள்ளன. வெற்றிலை மற்றும் பாக்குகளின் ஏற்றுமதி 19 மில்லியன் டாலராகவும் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE