அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையை எதிர்கொள்ள ரஷ்யாவுக்கு உதவும் கிரிப்ட்டோகரன்சி?

By செய்திப்பிரிவு

நியூயார்க்: உக்ரைன் மீதான தாக்குலை தொடர்ந்து ரஷ்ய அரசு மீது மட்டுமல்லாமல் அங்குள்ள தொழிலதிபர்கள், அதிபருக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த தடையை எதிர்கொள்ள அவர்களுக்கு கிரிப்ட்டோகரன்சி கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியது.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அதன் தாக்கத்தால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. பங்குச்சந்தைகள் சரிவடைந்தன.
இதுபோலவே ரஷ்யா-உக்ரைன் போரால் கிரிப்டோகரன்சி வர்த்தகமும் கடும் சரிவை சந்தித்தது. புதின் போர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே மளமளவென சரிந்தன.

கிரிப்ட்டோகரன்சி மதிப்பு சரிவு

கிரிப்டோகரன்சிகளில் உலகளவில் பெருவாரியாக மதிக்கப்படும் பிட்காயின் மதிப்பு 10 சதவீதம் சரிந்து, 34,618 டாலராகச் சரிந்தது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின்படி, ரூ.26,04,592 ஆக வீழ்ச்சி அடைந்தது. இந்த மாதத் தொடக்கத்தில் ரூ.36 லட்சமாக இருந்தநிலையில் 20 நாட்களில் ரூ10 லட்சம் சரிந்துள்ளது.

2-வது மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான எதிரியம் மதிப்பு 10 சதவீதம் குறைந்து, 2,376 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.கிரிப்ட்டோகரன்சி மதிப்பு நேற்று கணிசமாக சரிந்தாலும் ரஷ்யா மீது அமரிக்க கூட்டணி நாடுகள் பொருளாார தடை விதிக்கும் பட்சத்தில் கிரிப்ட்டோகரன்சி மூலம் அதனை ரஷ்யா எதிர்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக வலுவான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார். ரஷ்ய அரசு மீது மட்டுமல்லாமல் அங்குள்ள தொழிலதிபர்கள், அதிபருக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் டாலர் மற்றும் பிற முக்கிய சர்வதேச நாணயங்களில் வணிகம் செய்வதற்கு தடை விதிக்கப்படும் தெரிகிறது. 1 டிரில்லியன் டாலர் சொத்துக்கள் கொண்ட ஐந்து ரஷ்ய வங்கிகளுக்கு கடுமையான தடையும், பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டால் அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. போர் தொடங்கிய பிறகு ரஷ்யா மீது ஜி7 சார்பில் மேலும் பல்வேறு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு கிரிப்ட்டோகரன்சிகள் பேருதுவியாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டிஜிட்டல் சொத்துக்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு வரும் மேத்யூ சிகால் கூறியதாவது:

கிரிப்டோகரன்சிகள் ரஷ்யாவிற்கும் அங்கு வசிக்கும் தொழிலதிபர்களுக்கும் பொருளாதார தடைகளின் தீவிர தாக்கத்தை குறைக்க உதவும்.

இரண்டு நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் வியாபாரம் செய்ய விரும்பினால், வங்கிகள் மூலம் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவர்கள் அதை கிரிப்ட்டோகரன்சி மூலம் செய்யலாம். பொருளாதாரத் தடைகள் காரணமாக தங்கள் கணக்குகள் முடக்கப்படலாம் என ரஷ்ய தொழிலதிபர் கவலைப்பட்டால், அத்தகைய நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்படுவதற்காக அவர்கள் பிட்காயினில் தங்கள் பணத்தை வைத்திருக்க முடியும்.

பியட் கரன்சிகளைப் போலல்லாமல், அவற்றைக் கண்காணிக்கும், முடக்கும் அல்லது தடுக்க அரசுகளுக்கு நேரடியாக வாய்ப்பில்லை. மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் மூலம் மட்டுமே இதனை அணுக முடியும்.

தடைகள் பாதிக்காது?

அரசின் தடைகள் அல்லது பிற கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒருவரிடமிருந்து நேரடியாக மற்றொருவருக்கு இந்த பணத்தை கிரிப்ட்டோவாக அனுப்ப முடியும் என்பதால் தொழிலதிபர்கள் கிரிப்ட்டோவில் தங்கள் சொத்துக்களை பத்திரப்படுத்தலாம் அல்லது பரிமாற்றம் செய்யலாம்.

கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகளை பல நாடுகள் எடுத்துவரும் நிலையில் டிஜிட்டல் சொத்துக்கள் ஏற்கெனவே பரவலாகச் சொந்தமான நாடுகளில் அந்தத் தடைகள் குறைவான பாதிப்பு இருக்கும்.

அமெரிக்க நேச நாடுகள் கடுமையான பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் அதனை தவிர்க்க வெனிசுலா, வட கொரியா போன்ற நாடுகள் நடுக்கடலில் கப்பலில் இருந்து கப்பலுக்கு எரிபொருளை மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் தடையை மீறி ரகசியமாக இந்த நாடுகள் பொருட்களை பெறுகின்றன.

ஆனால் அதற்கான பண பரிமாற்றம் என்பது சிக்கலாக உள்ளது. தற்போது கிரிப்டோ முறையில் பணத்தை பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு இருப்பதால் தடைக்குள்ளாகும் நாடுகளும், தனிநபர்களும் இனிமேல் இந்த பாதையை தேர்ந்தெடுக்கக் கூடும். கிரிப்ட்டோகரன்சி நெட்வொர்க்கில் எந்த தணிக்கையாளரையும், தடைகளையும் சந்திக்கும் தேவை இருக்காது.

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் தடைகள் நேரடி வர்த்தகம், செயல்பாடுகளின் மூலம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் எப்படி பரிவர்த்தனை நடைபெறுகிறது என்பது தெரியாத பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கிரிப்டோவை தடுக்க இயலாது. அபராதம் விதிக்கும் அமெரிக்காவின் மிரட்டல் எடுபடாது.

டிஜிட்டல் நாணயங்கள் அவர்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும் ரஷ்யாவிற்கு வெளியே உள்ள சொத்துக்களில் முதலீடு செய்வதற்கும் உதவக்கூடும்.
இவை அனைத்தும் பொருளாதாரத் தடைகளை கடைபிடிக்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்களைத் தவிர்த்து வெவ்வேறு வழியாகவும் செயல்பட முடியும்.

கிரிப்ட்டோ வைத்திருப்பவர்கள் பல பரிமாற்றங்களில் வெவ்வேறு முகவரிகளுடன் பண பரிவர்த்தனையை உருவாக்க முடியும். ஆதலால் தற்போதுள்ள தடை என்ற அம்சம் எந்த நடவடிக்கையையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலாது.

இதனால் ரஷ்யாவில் உள்ள தொழிலதிபர்கள் அல்லது குறிப்பிட்ட ரஷ்ய நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களைத் தேர்வு செய்யக்கூடும். அவை தடைகளை விதிக்கும் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டவை அல்ல. சர்வதேச விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை.

அதேசமயம் கிரிப்டோவில் வைத்திருக்கும் எந்த சொத்துக்களும் எளிதில் மற்ற கரன்சிகளாக மாற்றவதில் சில சிக்கல்களும் உள்ளன. எந்தப் பணத்தையும் கையில் எடுத்து செலவு செய்யும் வாய்ப்பு என்பது உடனடியாக கிடைக்காது. அதற்காக அவர்கள் காத்திருக்கும் தேவை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்