‘விண்ணைத் தொடும்’ கச்சா எண்ணெய் விலை: 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை இன்று முதன்முறையாக 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு பீப்பாய் 100 டாலர் என்ற அதிகபட்ச விலையை தொட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீதுரஷ்யா இன்று தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரம்

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் இன்று 2014-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் தொடக்கத்தில் ஆசிய வர்த்தகத்தில் ஒரு பீப்பாய் 101.34 டாலராக ஆக உயர்ந்தது. இது 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு மிக அதிகமான விலையாகும். ஜிஎம்டி சந்தையில் ஒரு பீப்பாய் 101.20 டாலராக ஆக இருந்தது. அதாவது ஒரே நாளில் 4.36 டாலர் அல்லது 4.5 சதவீதம் உயர்ந்தது.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் சந்தையில் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்த அடிப்படையிலான விலை 4.22 டாலர் அல்லது 4.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்தது. ஒரு பீப்பாய் 96.32 டாலராக ஆக உயர்ந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கச்சா இந்த சந்தையில் கச்சா எண்ணெய் 96.51 டாலர்களாக விற்பனையானது. தற்போது அதற்கு நிகராக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல்- டீசல் விலை உயரும்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக அளவில் அதிகமாக பெட்ரோலிய பொருட்களை நுகரும் நாடுகளில் அதன் விலை உயரும் ஆபத்து உள்ளது.

அதுபோலவே கச்சா எண்ணெய் கையிருப்பு குறைவாக உள்ள நாடுகளிலும் உடனடியாக விலை உயரும் எனத் தெரிகிறது. இந்தியாவில் பல நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ள நிலையில் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE