மத்திய பட்ஜெட்: கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள்; மெய் நிகர் சொத்துக்களுக்கு வரி

By செய்திப்பிரிவு

மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிரிப்டோகரன்சி வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரையில் தனிநபர்களுக்கான வருமான வரியில் செய்யக்கூடிய மாற்றங்கள் எப்போதும் பெரிதும் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்தவகையில் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலும் இதே எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் எதுவுமே இடம் பெறவில்லை. தனிநபர்களுக்கான வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதேசமயம் மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர், ஊனமுற்ற குழந்தைகளிடமிருந்து காப்பீடு செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

இதுபோலவே தனிநபர்கள் அல்லாமல் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வருமான வரி அல்லது கார்பரேட் வரி என அழைக்கப்படும் இந்த வருமான வரியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வருமாறு:

கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச வரியே விதிக்கப்படுகின்றன. இனி கூட்டுறவு நிறுவனமும் 15% மட்டுமே செலுத்த வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்பில் செயல்படும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி, 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

மேலும் 1 முதல் 10 கோடிரூபாய் வருமானம் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கான சர்ஜார்ஜ் எனப்படும் கூடுதல் வரி 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரியை பொறுத்தவரையில் பலன் பெறும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீத கார்ப்பரேட் வரி விகிதத்தை அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இது இப்போது 2024, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரிச் சலுகைகளைப் பெறுவதற்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கால அவகாசமும் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கலின்போது பிழையைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் வரி செலுத்துவோர் புதுப்பிக்கப்பட்ட வருமானத்தைத் தாக்கல் செய்யலாம்.

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10-லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இதன்படி கிரிப்டோகரன்சி வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும்.

நீண்டகால முதலீட்டு லாபம் மீதான கூடுதல் வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE