‘‘ஜிடிபி 8- 8.5 சதவீதமாக இருக்கும்’’- நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் ஜிடிபி எனப்படும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை (ஜன 31) தொடங்கியது. தொடக்க நாளான இன்று இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து வரும் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதால் உலகம் முழுவதும் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால், பணவீக்கம் அதிகரித்து, உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் மத்திய வங்கிகள் ரொக்கப் புழக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

நம் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, நிதி நிலைக் குறியீடுகள் மற்றும் நிதித்துறை, சுகாதாரத் துறை பண வீக்கம் ஆகியவை வரும் நிதியாண்டில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான வளர்ச்சி, அதாவது 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்துக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்புகள் விவசாய துறையைப் பெரிய அளவில் பாதிக்காத நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும். கடந்த ஆண்டு இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை உயரும் நிலையில், இறக்குமதியால் இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்படும். எனவே பணவீக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

கரோனா தொற்றில் இருந்து இந்திய வர்த்தக சந்தை மீண்டும் வரும் நிலையில், ஒமைக்ரான் பரவல் நாட்டின் வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுத்தாத நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி 11.8 சதவீதமாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேக்ரோ எகோ இண்டிகேட்டர்ஸ் 2022-23ஆம் நிதியாண்டில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவின் சேவைத் துறை 2021-22ஆம் நிதியாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி அடையும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE