மத்திய பட்ஜெட்: என்ன திட்டமிடுகிறார் நிர்மலா சீதாராமன்? 

By நெல்லை ஜெனா

புதுடெல்லி: வரும் நிதியாண்டுக்கான (2022- 2023) மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் மூலதன செலவு என்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கரோனா 2-ம் அலைக்கு பின்னர் பொருளாதார சுழற்சி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் அதனை வேகப்படுத்த வேண்டிய பெரும் தேவையும் உள்ளது. இந்த சூழலில் மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்துதுறையினர் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அரசு பங்குகள் விற்பனை

பட்ஜெட்டை ஆண்டுக்கு ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சுமார் 14% அதிகரித்து ரூ. 39.6 லட்சம் கோடியாக உயர்த்த வாய்ப்புள்ளது.

வரி விகிதங்களில் பெரிய மாற்றாமல் இல்லாமல் அதற்குப் பதிலாக அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை, நெருக்கடியில் உள்ள அரசு நிறுவனங்களின் சொத்து விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்ட திட்டமிடலாம் எனத் தெரிகிறது.

இதுமட்டுமின்றி சுமார் ரூ. 13 லட்சம் கோடி கடன் வாங்கவும் திட்டமிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்டி விகிதம்

இந்தியாவிலும் நீண்டகாலமாக வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை. எனவே மத்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அவ்வாறு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்ப தொழில்துறையினருக்கு பண சுழற்சி கிடைப்பதில் சிக்கல் எழாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி வங்கி தவிர மற்ற முதலீடுகள் குறையும் வாய்ப்பையும் தவிர்க்க வேண்டும். எனவே அதற்கான சலுகைகள், சில நிதியுதவி அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவாய்ப்புண்டு.

5 மாநில தேர்தல்

உ.பி. உட்பட 5 மாநில தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஜனரஞ்சக அறிவிப்புகளுக்கு நிதி தேவை. அதனை திரட்டுவதற்கான சூழல் தற்போது இல்லை என சில பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மூலதன ஆதாய வரி குறைப்பு?

அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மீதான மூலதன ஆதாய வரியை ரத்து செய்வது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இது சாத்தியமில்லாத சூழலில் வரி குறைப்பு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இப்படி செய்தால் எச்எஸ்பிசி ஆய்வுகளின்படி 40 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நிதி வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

மற்ற எதிர்பார்ப்பு

இந்த பட்ஜெட்டின் மிகப்பெரிய பயனாளியாக உற்பத்தித் துறை இருக்கலாம் என சிலர் கணிக்கிறார்கள். நாட்டில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வரும் சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளுக்கு பெரிய அறிவிப்புகள் இருக்கலாம் என்பது சில பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு. விவசாயிகளுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் இடம் பெறக்கூடும்.

ஏழைகள் சார்ந்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவே மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், அதிக உர மானியங்கள் மூலம் கிராமப்புறங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறலாம் என மும்பையில் உள்ள ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டின் பொருளாதார நிபுணர் கௌரா சென் குப்தா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE