போட்டா போட்டியில் 5 மாநிலங்கள்: மஸ்க்கின் டெஸ்லா ஆலைக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

By செய்திப்பிரிவு

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை அமைக்க ஐந்து மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு மிகவும் பிரபலமானது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனம், அதன் இந்தியப் பிரிவுக்கான பெயரைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் டெஸ்லா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. அலுவலகம் அமைக்கப்பட்டுப் பணிகள் தொடங்கினாலும், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து எலெக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு வலியுறுத்தியும் வருகிறார்.

சில தினங்களுக்கு முன், பிரனாய் பத்தோல் என்ற ட்விட்டர் பயனர், எலான் மஸ்க்கைக் குறிப்பிட்டு, "டெஸ்லா இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அப்டேட் ஏதேனும் உள்ளதா? டெஸ்லா மிகவும் அற்புதமான வாகனம். மேலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கத் தகுதியான வாகனம் அது" என்று கேள்வியுடன் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "இந்திய அரசுடன் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம்" என்று மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மஸ்க்கின் இந்த அதிருப்தியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றாலும் மாநில அரசுகள் மத்தியில் டெஸ்லாவை வரவேற்பதில் போட்டி நிலவியதைக் காண முடிந்தது. கிட்டத்தட்ட இந்தியாவின் 5 மாநில அரசு பிரதிநிதிகள் டெஸ்லா ஆலையை தங்கள் மாநிலத்தில் அமைக்க ஆதரவு தெரிவித்து மஸ்க்கின் இதே ட்வீட்டில் பதிவிட்டனர்.

தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ், "இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் நான். டெஸ்லா தொழிற்சாலையை தெலங்கானா மாநிலத்தில் அமைக்க முழு ஒத்துழைப்பு தரத் தயாராக உள்ளோம். இந்தியாவில், தொழிற்துறைக்கும், புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் சிறந்த இடம் தெலங்கானா மாநிலம்" என்று பதிவிட்டார்.

அவரைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தனது பதிவில், "மகாராஷ்டிரா இந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகும். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நிலைநிறுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் மகாராஷ்டிராவில் இருந்து கிடைக்கும். மகாராஷ்டிராவில் டெஸ்லா உற்பத்தி ஆலையை நிறுவ எங்களின் அழைப்பை விடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

டாடா கார் ஆலையை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக அங்கம் வகிக்கும் குலாம் ரப்பானி என்பவரும் மஸ்க்கிற்கு தங்கள் மாநிலம் சார்பில் அழைப்பு விடுத்தார். அவர் தனது பதிவில், "மேற்கு வங்கம் வாருங்கள் மஸ்க். மேற்கு வங்கத்தில் சிறந்த உட்கட்டமைப்புடன் தொலைநோக்குப் பார்வைகொண்ட எங்கள் தலைவி மம்தா உள்ளார். வங்காளம் என்றால் வணிகம்" என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, "எங்களின் 'பஞ்சாப் மாடல்' லூதியானாவை மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரித் துறையின் மையமாக உருவாக்கும் நோக்கம் கொண்டது. பஞ்சாப்பிற்கு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் முதலீட்டிற்கான ஒற்றைச் சாளர அனுமதியுடன், பசுமை வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நடைபாதையை உருவாக்கும் நோக்கோடு 'பஞ்சாப் மாடல்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக எலான் மஸ்க்கிற்கு பஞ்சாப் அரசு சார்பில் அழைப்பு விடுக்கிறேன்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நான்கு மாநிலங்களுக்கு மத்தியில், தமிழகத்தின் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் மஸ்க்கை டெஸ்லா ஆலை தொடங்க அழைப்பு விடுத்தார். "இந்தியாவின் டெட்ராய்ட் ஆன தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் மிஸ்டர் மஸ்க். தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இங்கு தொழிற்சாலை அமைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்யும். எங்களது திறமையான இளைஞர்கள் நீங்கள் வேலையில் கவனம் செலுத்தும்போது அனைத்து சவால்களையும் சமாளிக்க உங்களுக்கு உதவுவார்கள். நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம்" என்று டிஆர்பி ராஜா டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்