மனித வளம் பற்றிய கட்டுரை வெளி வர ஆரம்பித்து மிக விரைவில் தமிழ் கூறும் நல்லுலகில் சில மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.
மனித வேலைத்திறன் பற்றிய முதல் கட்டுரையை திருநெல்வேலியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பிரதிகள் எடுத்து தன் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறார். பஞ்சாலைத் தொழிலாளர்கள் பற்றி எழுதியதை கோவை சைமா அமைப்பு அனைத்து மில் முதலாளிகளுக்கும் அனுப்பியது.
சாலையோர சிறுவனும் சி.எஸ்.ஆரும் கட்டுரை சில பிரபல நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் முன்னுரிமைகளை மாற்றின. உலக மயமும் உள்ளூர் நலனும் கட்டுரையை தீக்கதிர் மீண்டும் வெளியிட்டது.
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா என்று கேட்டபோது தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் வாழ்த்தினார்கள். சிறந்த உழைப்பைப் பெறுவது எப்படி என்ற கட்டுரையை பிரபல ஜவுளி நிறுவனம் தங்கள் உள்சுற்று பத்திரிகையில் வெளியிட்டிருந்தது. பொறியியலுக்கு அப்பால் கட்டுரை பல பெற்றோர்கள் தங்களுக்கு தெளிவைத் தந்ததாக தெரிவித்தார்கள்.
கல்லூரிகள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதியிருந்ததை சில தென்னகக் கல்லூரிகள் தங்கள் செயல் திட்டத்தில் சேர்த்ததாகத் தெரிவித்தன.
ஐ.டி பற்றி எழுதியபோது எழுத்தாளர் இரா. முருகன் அழைத்து சிலாகித்தார். இன்டராவர்ட்ஸ் கட்டுரையில் தன்னை குறிப்பிட்டதை நடிகர் விஜய் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார். ஒரு பள்ளி நிகழ்ச்சியில் என்னை சந்தித்த எழுத்தாளர் தமிழ்செல்வன் இந்த கட்டுரைகளைத் தொடர்ந்து படிப்பதாகத் தெரிவித்தார். “யாருக்கு யார் காவல்?” கட்டுரை அல்ல; நல்ல சிறுகதை என்றும், கட்டுரை விஷயங்களை அழகாக கதைப்படுத்துகிறீர்கள் என்றும் பள்ளி முதல்வர் துளசிதாசன் என் எழுத்தை “புது ஜானர்” என்றார். அது போல எஸ்.வி.வி போன்றோரின் ஊக்குவிப்பு கடிதங்களும் என் நம்பிக்கைகளுக்கு உரம் சேர்த்தன.
ஒரு தொழிலக மனித வளம் என்று மட்டும் நிற்காமல் அவர்கள் வாழ்வியிலை பதிவு செய்ய முயற்சித்தேன். அதற்கு பத்திரிகையிலிருந்து எனக்குக் கிடைத்த சுதந்திரமும் ஆதரவும் அலாதியானது. ஒரே பத்திரிகையில் வாரத்திற்கு மூன்று கட்டுரைகள் எழுதுகிறேன் என்றதும் “அங்கேயே வேலைக்கு சேர்ந்திட்டீர்களா?” என்று கேட்டவர்களும் உண்டு.
இந்த பெருமைகள் எல்லாம் தாண்டி சில பொறுப்புகளையும் உணர முடிகிறது. திணறடிக்கும் அளவிற்கு மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புகளும், சொல்லாமல் வரும் பார்வையாளர்களும் பெரிய சவால்கள். வேலை, தொழில், வாரம் தவறாத எழுத்து எனக்கு ஒரு வித ஒழுங்கைக் கற்றுத் தருகிறது.
இந்த எழுத்து கவனிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் நடை என்றால் இன்னொரு காரணம் களப்பணி என்பேன். குறிப்பாக கல்வி மற்றும் தொழில் சூழலில் எனது பல்வேறு அனுபவங்களின் தொகுப்பு என்பதால் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டது. இதனால் இரு வழிப்பாதை ஒன்று தென்பட்டது.
செயலை எழுதலாம். எழுதியதைச் செய்யலாம்.கை கொடுக்க கோடி தமிழ்க் கரங்கள் உள்ளன எனத் தெரிந்து விட்டது! எல்லா பயணங்களிலும் வாசகர்களை சந்திக்கிறேன். அவர்கள் கருத்துகளை கேட்கிறேன். நிறைய செய்யலாம் எனத் தோன்றுகிறது. ஒரு சுரங்கத்தை மேம்போக்காக சுரண்டியிருக்கிறோம் என மட்டும் தெரிகிறது.
எத்தனை இளைஞர்கள் வழிகாட்டல்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? எத்தனை பெண்கள் தங்கள் திறமைகளை காட்ட முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்? எத்தனை அறிவாளிகளும், மேதைகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள்? எத்தனை பெரியவர்கள் ஓய்வு என்ற பெயரில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்? இவர்கள் அனைவரின் சக்திகளும் வெளிக்கொணரப்பட்டால் அதன் தாக்கம் தமிழகத்தில் எத்தனை மகத்தானதாக இருக்கும்?
தொழில் நிறுவனங்களுக்கு மனித வள நிர்வாகம் செயல்படுவதைப் போல கல்வி நிறுவனங்களுக்கும் தேவை. ஏன், மாநிலங்களுக்கும் தேவை! கல்வி, பயிற்சி, வேலை வாய்ப்பு, தொழில் என பிரிந்து கிடப்பதால்தான் ஒரு ஒட்டு மொத்த மனித வள அணுகுமுறை கிட்டுவதில்லை.
அடுத்த பத்து ஆண்டுகளுக்கான செயல்பாடுகளை இன்றே திட்டமிட்டு தொடங்கலாம். அதைத் தொடங்க சரியான இடம் பள்ளிக்கூடங்கள். இன்றைக்கு நாம் பள்ளியில் நாம் உருவாக்கும் வீரிய விதைகள் தான் நாளை நம்மை பாதுகாக்கும் விருட்சங்கள். கல்லூரிகள் தொழிற்சாலைகள் எல்லாம் அவசியம் கவனிக்க வேண்டியவை. ஆனால் முன்னுரிமை அளிக்க வேண்டியவை பள்ளிக்கூடங்கள்.
ஒரு தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளோர் செய்ய வேண்டிய பணி பள்ளிக் கல்வியை சீர் செய்தல். பிள்ளைகளுக்கு வாசிக்கவும் யோசிக்கவும் கற்றுத்தருவோம். பின்னர் அவர்களே வாழ்க்கையை கற்றுக் கொள்வார்கள்.
தமிழ் படிக்கும் அத்தனை மாணவர்களையும் சந்திக்கும் பேராவல் ஒன்று என் அடுத்த நகர்வை முடிவு செய்யும். எழுத்தையும் பேச்சையும் இணைக்கும் பள்ளி சார்ந்த சமூகப் பணிகள் எண்ணியுள்ளேன். அதற்கு அனைவர் பேராதரவு தேவை. மகாசக்திக்கும் தமிழ் மக்களுக்கும் என் விண்ணப்பம் அதுதான்.
மனித வளம் மூலம் பல மனிதர்கள் கிடைத்துள்ளார்கள். மக்களை சந்திப்பது தான் நிஜ சொத்து சேர்ப்பு என்றால் எனக்கு சொத்து குவிப்பு நிறையவே நடந்திருக்கிறது. நம்பிக்கையுடன் கரம் கோர்த்த அனைவருக்கும் நன்றி.
இந்த பகுதியை இத்துடன் நிறைவு செய்வோம். சந்திப்போம்- ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு!
gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago