தொழில் கலாச்சாரம்: பாலைவன நாட்டில் தொழில் வாய்ப்புகள்

By எஸ்.எல்.வி மூர்த்தி

துபாய் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி. எல்லா நாடுகளின் ஆடம்பரப் பொருட்களும் கொட்டிக் கிடக்கும் 1200 கடைகள் கொண்ட துபாய் மால். பேரம் பேசித் தங்கம் வாங்கும் கோல்ட் சௌக் (Gold Souk) என்னும் தங்க வியாபாரக் கடை வீதி. 830 மீட்டர் உயரத்தில் வானத்தைத் தொட்டுக் கம்பீரமாக நிற்கும் உலகத்தின் மிக உயரமான 160 மாடிகள் கொண்ட புர்ஜ் கலீஃபா கட்டடம். பார்க்கும் இடமெல்லாம் அண்ணாந்து பார்க்க வைக்கும் கட்டடங்கள். ஒவ்வொரு அங்குலத்திலும் செல்வச் செழிப்பு காட்டும் நவீன நகரம். இன்றைய துபாய்.

துபாய் நகரத்தைவிட்டு வெளியே வாருங்கள். காரில் பயணிக்கும்போது, மெள்ள மெள்ளச் சூழல் மாறுகிறது. கட்டடங்கள் மறைகின்றன. கடல்போல் பரந்து விரிந்த மணல். நடுநடுவே ஈச்ச மரங்கள். வரிசையாக அணிவகுத்துப்போகும் ஒட்டகங்கள். வானில் வட்டமிடும் கழுகுகள். மனித நடமாட்டமே இல்லாத பாலைவனம். நேற்றைய துபாய்.

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் நாட்டில் இருக்கும் ஒரு நகரம். துபாய், அபுதாபி ஆகிய நகரங்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாடே அற்புத வளர்ச்சி கண்டிருக்கிறது. நேற்றைய பாலைவனம் இன்றைய குபேரபுரி ஆகியிருப்பது எப்படி? இன்னும், இன்னும் வளர்ந்துகொண்டு, ஏராளமான இந்தியர்களுக்கும், குறிப்பாகக் கேரளத் தமிழகச் சகோதரர்களுக்கு வேலை வாய்ப்புகள் தந்து, பல்லாயிரம் குடும்பங்களில் விளக்கேற்றி வைப்பது எப்படி? இரண்டு முக்கிய காரணங்கள் 1953-இல் கண்டெடுக்கப்பட்ட பெட்ரோல், அதை மூலதனமாக வைத்து நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிட்ட ஆட்சியாளர்களின் தீர்க்க தரிசனம்.

பூகோள அமைப்பு

பாரசீக வளைகுடாவில், அரபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் இருக்கும் நாடு. இதன் எல்லைகளாகக் கிழக்கே ஓமான், தெற்கே சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன. கத்தார், ஈரான் ஆகிய நாடுகளோடு கடல் எல்லைகள் இருக்கின்றன.

அபுதாபி, அஜ்மான், துபாய், ஃபுஜைரா, ராஸ் அல்-கைமா, ஷார்ஜா, உம் அல்-குவைன் என்னும் ஏழு மாநிலங்கள் இருக்கின்றன. அரபிய மொழியில் இவை அமீரகங்கள் (Emirates) என்று அழைக்கப்படுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்டுகள் என்று நாடு அழைக்கப்படுவது இதனால்தான்.

நிலப்பரப்பு 83,600 சதுரக் கிலோ மீட்டர்கள். ஏற்றமும், இறக்கமுமான பாலைவனம். பெட்ரோல், எரிவாயு ஆகிய இரண்டும் மட்டுமே இயற்கைச் செல்வங்கள். தலைநகரம் அபுதாபி.

சுருக்க வரலாறு

கி.மு. 7000 ஆம் ஆண்டிலேயே இங்கு மக்கள் வசித்தார்கள். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் இங்கு வந்தார். ஏராளமானோர் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள். 16 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போர்த்துக்கீசியர் ஆட்சியின் கீழ் வந்தது. அடுத்து, ஒட்டோமான் பேரரசு என்னும் துருக்கியர் அமீரகங்களைத் தங்கள் கொடியின் கீழ்க் கொண்டுவந்தார்கள். இந்தப் பேரரசு சரிந்தபின், கடற்கொள்ளையர்களின் கூடாரமானது. சரக்குக் கப்பல்களைக் கொள்ளையடித்தார்கள். இதனால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து, 1820 இல், அமீரகங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டது. 1892 இல், இங்கிலாந்தின் அனுமதியில்லாமல், வெளிநாடுகளோடு உறவு வைத்துக்கொள்வதில்லை என்று அமீரகங்கள் சம்மதித்தன. பதிலாக, இந்நாடுகளின் பாதுகாப்புக்கு இங்கிலாந்து உத்தரவாதம் தந்தது.

அத்தனை அமீரகங்களும் மீன்பிடிப்பு மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட வறுமை நாடாக இருந்தது. 1953 இல் பெட்ரோல் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1962 இல் பெட்ரோல் ஏற்றுமதி தொடங்கியது. நாட்டின் தலைவிதி மாறியது. அமீர்கள் ஆட்சிக்கு வர விரும்பினார்கள். 1971 இல், பிரிட்டீஷார் வெளியேறினார்கள். அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா, ஷார்ஜா, துபாய், உம் அல்-குவைன் ஆகிய ஆறு பகுதிகளும் இணைந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிறந்தது. 1972 இல், ராஸ் அல்-கைமா சேர்ந்துகொண்டது. இன்றைய எமிரேட்டுகள் தோன்றியது.

மக்கள் தொகை

சுமார் 95 லட்சம். மண்ணின் மைந்தர் கள் 19 சதவீதம். அரபியர்கள், இரானியர் கள் 23 சதவீதம். தெற்கு ஆசியர்கள் 50 சதவீதம். பிறர் 8 சதவீதம். சுமார் 10,000 தமிழர்கள் வசிப்பதாகக் கணித் துள்ளார்கள் மத அடிப்படையில் முஸ் லிம்கள் 76 சதவீதம். கிறிஸ்தவர்கள் 9 சதவீதம். எஞ்சிய 15 சதவீதம் பல மதத் தினர். அதிகாரபூர்வ மதம் இஸ்லாம்.

ஆட்சி மொழி அரபிக். கல்வியறிவு 90 சதவீதம். ஆண்கள் 90 சதவீதம், பெண்கள் 92 சதவீதம்.

ஆட்சிமுறை

கூட்டாட்சி நடக்கிறது. ஒவ்வொரு அமீரகத்துக்கும், அதன் அரசரான அமீர் தலைவர். தங்கள் அமீரகத்தில் இவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. ஏழு பேரும் சுப்ரீம் கவுன்சில் என்னும் குழு உறுப்பினர்கள். இந்தக் கவுன்சில் சகல அதிகாரம் கொண்டது. இவர்கள் தங்களுக்குள் இருவரை ஜனாதிபதியாகவும், உதவி ஜனாதிபதியாகவும், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கிறார்கள். பிரதமரை ஜனாதிபதி நியமிக்கிறார். பெட்ரோல் வளம் கொழிக்கும் அபுதாபி அமீர் ஜனாதிபதியாகவும், துபாய் அமீர் உதவி ஜனாதிபதியாகவும் செயல்படுவது எழுதப்படாத சட்டம். தற்போது, துபாய் அமீர் உதவி ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இரு பதவிகளில் இருக்கிறார்.

40 பேர் கொண்ட ஃபெடரல் நேஷனல் கவுன்சில் என்னும் சபை உண்டு. இதன் 20 அங்கத்தினர்கள் அமீர்களால் நியமிக்கப்படுகிறார்கள்; மீதி 20 பேர் தேர்தல் கல்லூரி (Electoral College) என்னும் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசியல் கட்சிகள் தொடங்கவும், நடத்தவும் அனுமதி கிடையாது.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் சேவைத்துறையின் பங்கு 44 சதவீதம். நிதி மையமாக இருப்பது, உலக வணிகத்தின் நடுநாயகமான துறைமுகம் ஆகியவை இதில் முக்கியமானவை. தொழில் துறையின் பங்கு 55 சதவீதம். உலகின் பத்தில் ஒரு பங்கு பெட்ரோலியம் இங்குதான் கிடைக்கிறது. உலகின் நான்காம் பெரிய பெட்ரோல் பொருட்கள் தயாரிப்பாளர் எமிரேட்டுகள்தான். கட்டுமானம், கப்பல்கள் பழுது பார்த்தல், மீன் பிடித்தல், ஆடுமாடு வளர்த்தல், பேரீச்சம்பழ உற்பத்தி ஆகியவை பிற முக்கிய தொழில்கள். தொழிலாளிகளில் அதிக எண்ணிக்கை இந்தியர்கள், பாகிஸ்தானியர், வங்கதேசத்தினர், இரானியர் ஆகியோர். பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு வெறும் ஒரு சதவீதம்தான்.

நாணயம்

திராம். 18 ரூபாய் 53 காசுகளுக்கு சமம்.

இந்தியாவோடு வியாபாரம்

எமிரேட்டுகளுக்கு நம் ஏற்றுமதி ரூ.20,188 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை நகைகள், காய்கறிகள், பழங்கள், தேயிலை, இறைச்சி, உணவு வகைகள், ஆடைகள். நம் இறக்குமதி ரூ. 1,58,806 கோடிகள். பெட்ரோலியப் பொருட்கள், தங்கம், வெள்ளி, எலெக்ட்ரானிக் கருவிகள் போன்றவை இதில் முக்கியமானவை.

அசோக் லேலண்ட், டாபர், ஹெச்சிஎல், இந்தியன் ஆயில், ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லரி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா, ஷோபா குழுமம் (கட்டடங்கள்) என ஏராளமான இந்திய நிறுவனங்கள் இங்கு உள்ளன. ஆக்சிஸ், இந்தியன் ஓவர்சீஸ், கனரா, ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ என ஏகதேசம் எல்லா வங்கிகளும் எமிரேட்ஸ்களில் கிளை பரப்பியிருக்கிறார்கள். துபாயின் எம்மார் (Emmar) நிறுவனமும், இந்தியாவின் எம்ஜிஎப் கம்பெனியும் கை கோர்த்து நடத்தும் எம்மார் எம்ஜிஎஃப் (Emmar MGF Land Limited) எமிரேட்டுகளின் பிரம்மாண்டக் கட்டடங்கள் உருவாக்கிய பெருமை கொண்டது. இதேபோல், சென்னை, கொச்சி, மும்பை ஆகிய இடங்களில் இருக்கும் நவீனத் துறைமுகங்கள், துபாய் துறைமுகத்தின் உதவியோடு எழுந்தவை.

பயணம்

ஏப்ரல் முதல் அக்டோபர் முடிய வெயில் அதிகம். நாம் பார்க்காத வெயிலா?

பிசினஸ் டிப்ஸ்

பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவார்கள். உள்ளூர் பிசினஸ்களில் சாதாரணமாக அதிகாரிகள் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். ஷேக்குகள் தாமதமாக வருவதுண்டு. ஆனால், நாம் தாமதமாகப் போவதை விரும்பமாட்டார்கள்.

விசிட்டிங் கார்டுகள் அவசியம். இவை பதவியைக் குறிப்பிடுவது நல்லது.

பெரும்பாலான பிசினஸ்மேன் களுக்கு ஆங்கிலம் தெரியும். ஆனாலும், கார்டுகள் ஒரு புறம் ஆங்கிலத்திலும், மறுபுறம் அரபிக் மொழியிலும் இருப்பதை விரும்புவார்கள். வலது கையால் மட்டுமே கார்டுகளைத் தரவேண்டும், வாங்கவேண்டும்.

பாரம்பரிய முஸ்லிம் பிசினஸ் மேன்கள் “சலாம் ஆலேக்கும்” சொல்வார்கள். கை குலுக்குவது இப்போது எல்லோரும் கடைப்பிடிக்கும் வரவேற்பு முறையாகி வருகிறது.

மன்னராட்சியை விமர்சிக்காதீர்கள். அவர்களின் குடும்பம் பற்றி விசாரிக்காதீர்கள். பெண்கள் பற்றிப் பேசாதீர்கள்.

உடைகள்

பிசினஸ் மீட்டிங்களுக்கு கோட், டை அணியவேண்டும். கோட், பான்ட் அழுத்தமான நிறங்களில் இருப்பது நல்லது.

பரிசுகள் தருதல்

பரிசுகளை அவர்கள் எதிர்பார்ப்ப தில்லை. ஆனால், தருவது நல்லது. இவை விலை அதிகமானவையாக இருக்கக்கூடாது.

slvmoorthy@gmail.com



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்