நடப்பு நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும் நிலையில் பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் எதிர்பார்க்கலாம், வரி விகிதங்களில் மாற்றம் வருமா, யாருக்கு வரி, எப்படி வரி, மானியங்கள் குறைப்பா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் நமக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். இதுமட்டுமன்றி தமிழக அரசு நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில் அதன் அம்சங்கள் குறித்தும் அவர் விரிவாக பேசியுள்ளார்.
தமிழக அரசின் நிநிநிலை குறித்த வெள்ளையறிக்கையை பற்றி?
ஒரு குடிமகனாக இந்த வெள்ளையறிக்கையை வரவேற்கிறேன். தமிழகதத்தின் நிதி சார்ந்த அம்சங்கள் இதில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் வரவு, செலவு, கடன் உள்ளிட்ட புள்ளி விவரங்கள் இந்த வெள்ளையறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்த வெளிப்படை தன்மை தொடர வேண்டும். இதுமுறைப்படுத்தப்பட்டு தொடர்ந்தால் தான் மக்களிடமும் பொறுப்புணர்வு வரும். இதனை பார்க்கும்போது மக்கள் அடுத்தமுறை இலவசங்கள் வேண்டாம் என்று கூறுவார்கள். இலவசம் வேண்டாம், நீங்கள் அரசை நடத்துங்கள் என்று பெரும்பகுதி மக்கள் கூறக்கூடும். யாருக்கு தேவை இருக்கிறதோ அவர்களுக்கு இலவசம் வழங்கலாம். இதனை தமிழக நிதியமைச்சரும் கூறியுள்ளார்.
ஒரு அரசியல் கட்சி சார்ந்து இயங்கும்போது சில பிரச்சினைகள் ஏற்படும். ஓட்டு வங்கி இருப்பதால், தேர்தலை சந்திப்பதால் அரசியல்வாதிகளால் சரி என்று நினைக்கும் விஷயத்தைகூட பேச முடியாத சூழல் தான் உள்ளது. பல நாடுகளில் இது பிரச்சினையாகவே உள்ளது. இந்தியாவும், தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. புதிதாக வந்தபோது அதனை சொல்லும் வேகம் இருக்கும். பின்னர் நமது அமைப்பு இந்த வேகத்தை குறைத்து விடும்.
அந்தவகையில் அமைச்சரின் வெள்ளையறிக்கை வரவேற்க தக்கது. இது கூடுதல் பயத்தை கொடுத்துள்ளது. நமது நிலைமை சரியில்லை என்ற விவரம் தெரிகிறது. அரசுத் துறை நிறுவனங்கள் எவ்வாறு இயங்கி வருகின்றன என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது.
எனினும் இனிமேல் பஸ் கட்டணம், அல்லது மின்சார கட்டணம் சிறிய அளவில் கூட்டப்பட்டாலும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது. வெள்ளையறிக்கையால் இந்த எதிர்ப்பு என்பது குறைக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் செய்தால் அதனை பெரும் எதிர்ப்புக்கிடையே செய்யும் சூழல் இனிமேல் இருக்காது.
நாளை தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் குறித்து?
இந்த பட்ஜெட் என்பது வெறும் 7 மாதத்துக்கான பட்ஜெட் மட்டுமே. தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துள்ள சூழலில் அதனை நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தரப்படும் போன்ற வாக்குறுதிகள் உள்ளன. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற நிதி வேண்டும்.
ஏற்கெனவே அதிக கடன் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் புதிய திட்டத்துக்கு அதற்கு நிதி வேண்டும். நிதியை எப்படி உருவாக்கபோகிறார்கள். புதிய வகையில் வசூலிக்க போகிறார்களா? அல்லது ஏற்கெனவே வசூலிப்பவர்களிடம் குறிப்பிட்ட பிரிவினரிடம் கூடுதலாக வசூலிக்க போகிறர்களா? வெள்ளையறிக்கையை பார்த்தால் இரண்டாவதாக கூறியது தான் நடக்கும்போல் தெரிகிறது.
கொடுக்க கூடியவர்களிடம் கூடுதலாக வசூலிக்கலாம். பஸ் அல்லது பெட்ரோல் மூலம் இதனை செய்ய முடியாது. எல்லோரும் ஒன்றாக பயணம் செய்ய வேண்டும். அப்படியானால் மானியமாக கொடுத்து விட்டு அனைவருக்கும் உயர்த்த போகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். இதனை செய்வதற்கு ஒரு அமைப்பு வேண்டும். இதெல்லாம் ஒரு ஆண்டில் செய்ய முடியாது. எனவே நீண்டகால திட்டத்தின் தொடக்கமாக இது இருக்கும்.
விவசாயத்துக்கு நாளை மறுதினம் தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுவது பற்றி?
விவசாயத்துக்கு என தனியாக பட்ஜெட் என சொல்லப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்கெனவே இதனை செய்துள்ளன. இதுபோன்று செய்யும்போது ஒரு துறைக்கு எவ்வளவு வரவு செலவு என தெரிய வரும். அதற்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். ரயிலவே பட்ஜெட் தனியாக தாக்கலான போது முக்கியத்துவம் கிடைத்தது போல் இதற்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.
தமிழகத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் விவசாயத்தை நம்பியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களிலும் 83 சதவீதம் பேர் கடனில் உள்ளனர். எனவே விவசாயத்துக்கு என தனியாக ஒரு பட்ஜெட் என்று கூறும்போது அந்த துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
எந்த பயிரை உற்பத்தி செய்யலாம், நீருக்கு என்ன செய்யலாம் என்பது போன்று யோசிக்கலாம். மத்திய அரசின் எந்த திட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் வளர்ச்சியை உருவாக்கலாம் என்ற வழிகளில் சிந்திக்கலாம். எனவே புதிய அரசு விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நல்ல தொடக்கமாக உள்ளது.
குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்பது சாத்தியமா? தமிழகத்தில் அதிகமானோருக்கு மானியம் செல்லும் நிலையில் இதனை சரியான முறையில் செய்வது இயலுமா?
தமிழகத்தில் ஏற்கெனவே ரேஷன் அட்டைகளில் இந்த பிரிவுகள் உள்ன. அரிசி அட்டை, சிகப்பு அட்டை, வெள்ளை அட்டை என ரேஷன் அட்டை இருக்கிறது.
தமிழக நிதியமைச்சர் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற மானியங்கள் தேவையில்லை என்று கூறுகிறார். அரசு ஊழியர்களுக்கு கரோனா காலத்தில் சம்பளம் குறைக்கவில்லை, அதேசமயம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். அவர் சொல்லுவதில் நியாயம் இருப்பதை ஏற்றுக் கொள்வார்கள். தமிழக அரசிடம் புள்ளி விவரங்கள் இல்லை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் கூறுகிறார். எனவே இதுபோன்று பிரித்த சரியான முறையில் அமல் செய்ய சற்று நாளாகும்.
தேவையானவர்களுக்கு மட்டும் மானியம், உதவி கிடைப்பதை உறுதி செய்ய முடியுமா?
பேருத்தில் வேறுபாடு என்றால் குறிப்பிட்ட பேருந்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். இதில் சாதாரண மக்கள் பயணிக்க மாட்டார்கள். ஏசி பேருந்து போன்றவற்றுகான கட்டணம் கூடுதலாக இருக்கும். ஆனால் ஒரே பேருந்தில் பயணம் செய்யும் வெவ்வேறு நபர்களுக்கு, வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்க முடியாது.
இல்லையெனில் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆதார் போன்று தனியாக அடையாள அட்டை வழங்கலாம். அதன் மூலம் அவர்களுக்கு பயன் சென்றடையச் செய்ய முடியும். ஆனால் இதற்கான நடைமுறையை ஏற்படுத்த கால அவகாசம் ஏற்படலாம். பாஸ்போர்ட் சேவையை தனியார் நிறுவனம் மூலம் செய்யப்படுவதை போல தமிழகத்திலும் இதுபோன்ற பணிகளை தனியார் நிறுவனங்களை பயன்படுத்தி வேகமாக செய்து முடிக்கலாம்.
பைக், கார் என வாகனங்களின் தன்மைக்கு ஏற்பட பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய வாய்ப்புண்டா?
இதில் நிறைய குழப்பங்கள் ஏறப்படக்கூடும். ஒரு பெட்ரோல் பங்கில் எத்தனை பேர் எந்த வாகனங்களில் வந்து பெட்ரோல் போட்டனர் என்ற விவரங்களை சேகரிப்பது கடினம். இதில் நடைமுறை சிக்கலும் உள்ளது. இயல்பான முறைகேடும் நடந்து விடும் என்பதால் உண்மையான பயனாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது அல்லது போலி பயனாளிகள் உருவாக்கப்படும் சூழலும் ஏற்படும்.
வாகனங்களுக்கு சாலை வரி போடும்போது அல்லது வண்டி வாங்கும்போது விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்ய முடியும். அதன் மூலம் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் பயணிப்பவர்களை தனித்தனியாக பிரித்து வாய்ப்புள்ளவர்களிடம் கூடுதல் வரியாக பெற முடியும். இந்த நடைமுறை மூலம் பெரிய வாகனங்களுக்கு மத்திய அரசு தனியாக கூடுதல் வரி விதித்து வாகனங்கள் விலையை உயர்த்துகிறது. உரிமையாளர்களிடம் அப்போதே கூடுதல் வரி பெறப்பட்டு விடுகிறது.
மின்சார கட்டணத்தில் இதனை எப்படி செய்ய முடியும்?
மின்சாரத்தில் இதுபோன்று செய்யலாம். ஒரு வீட்டின் அளவு, அங்குள்ள மின்சாரப் பயன்பாடு, ஏசி, மும்முனை மின்சாரம் என பிரித்து அதற்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க முடியும். இதிலும் அளவிடுவது, கண்காணிப்பது மனிதர்கள் தான் என்பதால் ஏமாற்றும் செயல் நடக்கவே செய்யும். எனினும் ஒருவரின் செல்வம் மற்றும் வருமானத்துக்கு ஏற்ப பயனாளிகளை வரிசைப் படுத்த முடியும், அதற்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்க முடியும்.
தமிழகத்துக்கு கூடுதல் வருவாய் பெற புதிய நிதி ஆதாரங்களை திரட்டுவது எப்படி?
ரயில்களில் விளம்பரம் செய்வதற்கு கட்டணம் வசூலிப்பது போன்று விளம்பர போர்டு வைப்பதற்கு கட்டணம் வசூலிக்கலாம். இது சில இடங்களில் தற்போது நடைமுறை படுத்தப்படுகின்றன. இதுபோன்று வெவ்வேறு வழிகளில் நிதி ஆதாரங்களை திரட்ட வாய்ப்புகளை ஆராயலாம்.
தனியாரிடம் இருந்து பணிகளை பெற்றுச் செய்யலாம். தனியாருடன் இணைந்து சில பணிகளை செய்யலாம்.
இ-சேவை மையம் போன்றவை இதற்கு உதாரணம். இருக்கிற ஆதாரங்களை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என ஆராய வேண்டும். இந்த அரசுக்கு ஆலோசனை சொல்ல பல பொருளாதார நிபுணர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்ப்போம்.
இவ்வாறு சோம.வள்ளியப்பன் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago