தொழில் கலாச்சாரம்: சோழ மன்னர் வென்ற நாட்டில் தொழில் வாய்ப்புகள்

By எஸ்.எல்.வி மூர்த்தி

சில அந்நிய நாடுகளை நாம் வெளி நாடுகள் என்றே நினைக்கமாட்டோம். நம் மண்ணாக, அந்தக் குடிமக்களை நம் சகோதர சகோதரிகளாகக் கருது வோம். தலைமுறைகள் தலைமுறைகளாக இரு தேசங்களுக்கும் இருக்கும் பந்தங்கள் காரணம். மலேசியா அப்படிப்பட்ட சகோதர தேசம்.

பூகோள அமைப்பு

தென்கிழக்கு ஆசிய நாடு. கிழக்கு மலேசியா, மேற்கு மலேசியா என்னும் இரு பிரிவுகள். கிழக்கு மலேசியா, போர்னியோ தீவில் இருக்கும் சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் குறிக்கும். மேற்கு மலேசியாவைத் தீபகற்ப மலேசியா என்றும் அழைப்பார்கள். கிழக்கு, மேற்கு மலேசியாக்களைத் தென்சீனக் கடல் பிரிக்கிறது. அண்டைய நாடுகள் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை.

நிலப்பரப்பு 3,29,847 சதுரக் கிலோமீட்டர்கள். 62 சதவீதம் காடுகள். பல காட்டுப்பகுதிகள் பாமாயில் தயாரிப்புக்கான பனைகள் வளர்க்கும் தோட்டங்களாக உருமாறி வருகின்றன. பெட்ரோலியம், தகரம், செம்பு, பாக்சைட், இரும்பு, ரப்பர், மரங்கள், பனை ஆகியவை முக்கிய இயற்கைச் செல்வங்கள்.

தலைநகரம் கோலாலம்பூர். அரசின் நிர்வாக மையம் புத்ராஜெயா என்னும் இடத்தில் இருக்கிறது.

சுருக்க வரலாறு

சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகரிக வளர்ச்சி இருந் ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்களாக இருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது.

கி.மு. முதல் நூற்றாண்டின் முதற் பகுதியில் இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும், பிறரும் வந்து குடியேறத் தொடங்கினார்கள். பிற்பகுதியில் விஜயப் பேரரசு என்னும் மலேயப் பேரரசின் ஆட்சி வந்தது. 11 ஆம் நூற்றாண்டில் தமிழகத்து ராஜேந்திரச் சோழர் மலாயாவிலிருந்த கடாரம் என்னும் இடத்தைப் போரில் வென்றதற்கான ஆதாரங்கள் உள்ளன.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து, பல்வேறு உள்ளூர்ச் சுல்தான்கள் ஆட்சி செய்தார்கள். விஜயப் பேரரசின் இளவரசரான பரமேஸ்வரன் மலாய்த் தீபகற்பத்தின் முதல் சுதந்திர ராஜ்ஜியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியம் நிறுவினார். இவர் முஸ்லிமாக மதம் மாறினார். நாட்டிலும் இஸ்லாமியம் வேகமாகப் பரவியது.

15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு தொடங்கியது. 1511 இல், மலாக்கா பகுதி போர்த்துக்கீசியர் வசமானது. 1641 இல், டச்சுக்காரர்களிடமும், 1786 இல், பிரிட்டிஷாரிடமும் கை மாறியது. 1826 இல் பிரிட்டிஷ் காலனியானது.

1943 முதல் 1945 வரை ஜப்பானால் பிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்தபின், மறுபடியும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பித்தன. 1957 இல் விடுதலை பெற்றது. 1963 இல், சிங்கப்பூருடன் இணைந்த மலேசியக் குடியரசானது. ஆனால், 1965 இல், சிங்கப்பூர் உறவு மனக்கசப்போடு முறிந்தது.

மக்கள் தொகை

3 கோடி 5 லட்சம். 61 சதவீதம் இஸ்லாமியர்கள். புத்த மதத்தினர் 20 சதவீதம், கிறிஸ்தவர்கள் 9 சதவீதம், இந்துக்கள் 6 சதவீதம். எஞ்சிய 4 சதவீத மக்கள் பல மதங்களையும் சார்ந்துள்ளனர். அரசியல் சட்டப்படி, மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. ஆட்சி மொழி மலாய் மொழி. கல்வியறிவு 94.6 சதவீதம். ஆண்கள் 96.2 சதவீதம், பெண்கள் 93.2 சதவீதம்.

ஆட்சிமுறை

மலேசியா 13 மாநிலங்களும், 3 கூட்டாட்சிப் பகுதிகளும் கொண்டது. இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும், ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மேற்கு மலேசியாவில் பதினொரு மாநிலங்களும், இரண்டு கூட்டாட்சிப் பகுதிகளும் உள்ளன. இவற்றுள் ஒன்பது மாநிலங்கள் மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன, பரம் பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன. இந்த ஒன்பது ஆட்சியாளர்களும், தமக்குள் ஒருவரை, மலேசியா ஆளும் அரசராக ஐந்தாண்டுப் பதவிக்காலத்துக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் கொண்ட அசெம்பிளி உண்டு.

பாராளுமன்றத்தில் இரண்டு சபைகள். மேல்சபை அங்கத்தினர்கள் 5 ஆண்டுப் பதவிக்காலத்துக்கு நியமிக்கப்படுகிறார்கள். கீழ்சபை உறுப்பினர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக் கப்படுகிறார்கள். நிர்வாகத் தலைவர் பிரதமர். 21 வயது நிரம்பிய ஆண்களுக் கும், பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு. மாநிலங்களில் அசெம்பிளி உறுப்பினர்கள் மக்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்சி நடத்துபவர் முதல் அமைச்சர்.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் சேவைத்துறையின் பங்கு 56 சதவீதம். இஸ்லாமிய நிதி மையமாக இருத்தல், வெளிநாட்டினருக்கான மருத்துவச் சிகிச்சை வசதிகள், சுற்றுலா ஆகியவை சேவைத் துறையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தொழில் துறையின் பங்கு 35 சதவீதம். 1970 களுக்குப் பின் பல்வேறு தொழில் துறைகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோலியம், ரப்பர், கார்கள், மருந்துகள், எலெக்ட்ரானிக் கருவிகள், மரச் சாமான்கள், பாமாயில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை முக்கிய தொழில்கள். விவசாயம் பொருளாதாரத்தில் 9 சதவீதப் பங்கு வகிக்கிறது.

நாணயம்

ரிங்கிட். 14 ரூபாய் 35 காசுகளுக்கு சமம்.

இந்தியாவோடு வியாபாரம்

மலேசியாவுக்கு நம் ஏற்றுமதி ரூ.35,630 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை இறைச்சி, உணவு வகைகள். நம் இறக்குமதி ரூ.68,020 கோடிகள். பாமாயில், பெட்ரோலியம், எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகள், ரசாயனம் போன்றவை இதில் முக்கியமானவை. டிசிஎஸ், ரிலையன்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கு மலேசியாவில் கிளைகள் இருக்கின்றன. குறிப்பாக டிசிஎஸ் இல் சுமார் 1,500 பேர் பணிபுரிகிறார்கள். வணிகம், இருதரப்பு முதலீடு ஆகிய இரண்டிலும் பெரும் வளர்ச்சி காணும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பயணம்

மொத்தத்தில் நம்முடையதுபோல் வெப்ப நாடு. ஆனால், வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட மாதங்களில் மழை பெய்யும். இதேபோல், விடுமுறை நாட்களும் இடத்துக்கு இடம் மாறும். இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, விசிட் காலத்தை முடிவு செய்யுங்கள்.

பிசினஸ் டிப்ஸ்

நேரம் தவறாமை மிக முக்கியம். பெரும்பாலான பிசினஸ்மேன்கள் சீனர்கள். வக்கீல்கள், ஆடிட்டர்கள் போன்றோர் இந்தியர்கள். இவர்கள் இருபாலரும் சரியான நேரத்துக்கு வருவார்கள். பெரும்பாலான அரசு அதிகாரிகள் மலாய்கள். இவர்கள் தாமதமாக வருவதுண்டு. நாம் குறிப்பிட்ட நேரத்துக்குப் போய்விடவேண்டும். சந்திப்பு நேரத்தை முன் கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.

விசிட்டிங் கார்டுகள் அவசியம். இதில் பதவியைக் குறிப்பிடுவது நல்லது.

பெரும்பாலான பிசினஸ்மேன்களுக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால், சீன பிசினஸ்மேன்களைச் சந்திப்பதாக இருந்தால், கார்டுகள் ஒருபுறம் ஆங்கிலத்திலும், மறுபுறம் சீன மொழியிலும் இருப்பது நல்லது. இரண்டு கைகளாலும் கார்டைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகத் தரவேண்டும். இரண்டு கைகளாலும் வாங்கி, படித்துப் பார்த்துவிட்டுப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். பான்ட் பின்புறப் பாக்கெட்டில் வைப்பது அவமரியாதை.

கை குலுக்கல், கை கூப்பி வணக்கம் சொல்வது ஆகியவை சாதாரண வரவேற்பு முறை. எப்போதும், முஸ்லிம் கலாச்சாரம் கொண்டவர்களோடு பழகுகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மன்னராட்சியை விமர்சிப்பது, பெண்கள் பற்றிப் பேசுவது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

உடைகள்

நம் ஊர் போலவே, பான்ட், சட்டை போதும்.

பரிசுகள் தருதல்

லஞ்சம் குற்றம். ஆகவே, விலை உயர்ந்த பரிசுகள் தரவே கூடாது. சாக்லெட், பிஸ்கெட்கள் ஆகிய பரிசுகள் தரலாம். வெள்ளை நிறம் சோக நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆகவே, பரிசுகளும், பேக்கிங் பேப்பரும் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடாது.

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்