மக்கள் தொகை ஒரு கோடி பதிமூன்று லட்சம். நாட்டில் சாக்லேட் உற்பத்தி 2,20,000 டன்கள். அதாவது, சராசரியாக ஒர் ஆளுக்கு ஆண்டுக்கு 20 கிலோ.
1,000 வகையான பீர்கள் தயாராகின்றன. சராசரிக் குடிமகன் ஒவ்வொரு ஆண்டும் குடிப்பது 150 லிட்டர். உருளைக் கிழங்கு சிப்ஸ் கண்டுபிடித்தது இந்த தேசம்தான்.
திரும்பிய பக்கமெல்லாம் அடுமனைகள். இவர்களின் சுவையான கேக், பிஸ்கெட்கள் வாங்க வரிசையில் நிற்கும் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள்.
இவை அத்தனையையும் பார்த்து, பெல்ஜியம் ஒரு சாப்பாட்டு ராமன்கள் நாடு என்று நினைத்துவிடாதீர்கள். இன்னும் மாபெரும் சிறப்புகள் பெல்ஜியத்துக்கு உண்டு.
உலகம் முழுக்க 20 கோடிப் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனை யாகியிருக்கும், குழந்தைகள் விரும்பிப் படிக்கும் டின் டின் காமிக்ஸ், ஹெர்கே என்னும் பெல்ஜியக் கார்ட்டூனிஸ்டின் படைப்பு.
ஐ.நா. சபையின் அமைப்பான யூனிசெஃப், குழந்தைகள் கல்வியில் பெல்ஜியத்துக்கு முதலிடம் தந்திருக்கிறது. பதினெட்டு வயது வரை, எல்லா ஆண்களுக்கும், பெண் களுக்கும் கல்வி கட்டாயம். 18 வயதான அனைத்து பெல்ஜிய குடிமக்களும் கட்டாயமாக ஓட்டுப் போடவேண்டும்.
பூகோள அமைப்பு
தென் ஐரோப்பாவில் இருக்கும் தேசம். அண்டைய நாடுகள் பிரான்ஸ், ஜெர்மனி, லக்ஸம்பெர்க், நெதர்லாந்து. நிலப்பரப்பு 30,528 சதுர கிலோமீட்டர்கள். கடற்கரை, சமவெளிகள், காடுகள் என மூன்று வகை நிலப்பகுதிகள் இருக்கின்றன. தலைநகரம், பிரெஸெல்ஸ்.
சுருக்க வரலாறு
ஆரம்ப நாட்களில், கால் (Gaul) என்னும் தேசத்தின் பகுதியாக இருந்தது. பெல்கே என்னும் பழங்குடி மக்கள் வசித்தார்கள். நாட்டுக்குப் பெல்ஜியம் என்னும் பெயர் வரக் காரணம் இவர்கள்தாம். கி.மு. 53 - இல், ரோமாபுரியின் ஜீலியஸ் சீஸர் படையெடுத்து வந்தார். வெற்றி கண்டு, ரோம சாம்ராஜ்ஜியத்தின் கீழ்க் கொண்டுவந்தார். இதற்குப் பின், ஆஸ்திரியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய பல நாடுகளின் ஆட்சி வந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின், 1815 - இல், நெதர்லாந்து நாட்டின் பகுதியானது. 1830 - இல், விடுதலைப் போராட்டம் தொடங்கியது. பெல்ஜியம் நெதர்லாந்திலிருந்து சுதந்திரம் பெற்றுத் தனி நாடானது.
முதலாம் லெப்போல்ட் என்னும் மண்ணின் மைந்தரான அரசர் அரியணை ஏறினார். 1831 - இல், புதிய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, நாட்டுத் தலைவர் மன்னர்: ஆட்சி நடத்துபவர்கள், மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்.
1940 - இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியால் வெல்லப்பட்டது. அரசர் இங்கிலாந்துக்குத் தப்பியோடினார். 1944- இல், நேச நாடுகள் பெல்ஜியத்தின் சுதந்திரத்தை மீட்டுத் தந்தன.
மக்கள் தொகை
ஒரு கோடி 13 லட்சம். அனைவரும் கிறிஸ்தவர்கள். 75 சதவீதம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்: 25 சதவீதம் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். டச்சு மொழி பேசுபவர்கள் 60 சதவீதம்: பிரெஞ்சு 40 சதவீதம். கொஞ்சம் பேர் ஜெர்மன் பேசுகிறார்கள். மூன்று மொழிகளும் ஆட்சி மொழிகள்.
கட்டாயக் கல்வி இருப்பதால், கல்வியறிவு 99 சதவீதம். ஆண்கள், பெண்கள் இருபாலரும் கல்வியறிவு மிக்கவர்கள்.
ஆட்சிமுறை
அரசர் தலைமை வகிக்கும் மக்களாட்சி. அரசர் வம்சாவளியில் வருகிறார். செனட் என்னும் மேல்சபை. பிரதிநிதிகள் சபை (Chamber of Representatives) என்னும் கீழ்சபை. நிர்வாகத் தலைவர் முதலமைச்சர். டச்சு, பிரெஞ்சு, ஜெர்மனியர் ஆகிய மூன்று இனத்தவருக்கும் ஆட்சியில் பங்கு கிடைக்கும்படி, அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால், எந்தத் தனிக்கட்சியும், அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கமுடியாத நிலை. 2010, 2011 - இல், கட்சிகளுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஒற்றுமை வராததால், 541 நாட்கள், அரசரே ஆட்சியை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைய ஆட்சி, ஆறு கட்சிகளின் கூட்டாட்சி!
பொருளாதாரம்
ஐரோப்பாவின் மத்திய பகுதியில் இருக்கிறது. இதனால், ஐரோப்பிய யூனியனின் தலைமையகம். ஆன்ட்வெர்ப் என்னும் முக்கிய துறைமுகம், வர்த்தக மையம். பெல்ஜியத்தின் சாலைகள் போன்ற கட்டமைப்புகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 77 சதவீதமாக விளங்க, இவை உதவுகின்றன. தொழில் துறையின் பங்கு 22 சதவீதம். கோபால்ட், ரேடியம், துத்தநாகம், ஈயம் ஆகியவற்றின் தயாரிப்பில், பெல்ஜியத்துக்குத் தனி இடம் உண்டு. பெட்ரோலியச் சுத்திகரிப்பும் முக்கியமான தொழில். விவசாயம் பொருளாதாரத்தில் ஒரு சதவீதப் பங்கு மட்டுமே வகிக்கிறது.
நாணயம்
பெல்ஜியம் ஐரோப்பிய யூனியன் அங்கத்தினர். ஆகவே, அவர்களின் பொது நாணயமான யூரோதான் கரென்சி. சுமார் 72 ரூபாய்க்கு சமம்.
இந்தியாவோடு வியாபாரம்
இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகத்தில், பெல்ஜியத்துக்கு முக்கிய இடம் இருக்கிறது. மொத்த ஏற்றுமதி, இறக்குமதிப் பரிவர்த்தனை சுமார் ஒரு லட்சம் கோடிகளை எட்டுகிறது. நம் ஏற்றுமதி 33,717 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை உலோகங்கள், கெமிக்கல்கள், இரும்பு உருக்குப் பொருட்கள், இயந்திரங்கள், ஆயத்த ஆடைகள், மீன்கள், புகையிலை ஆகியவை. நம் இறக்குமதி 65,939 கோடிகள். இயந்திரங்கள், பிளாஸ்டிக்ஸ், கெமிக்கல்கள், மருந்துகள், அலுமினியம் போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.
விசிட்
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைக்காலம். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். நவம்பர் முதல் பிப்ரவரி வரை நடுக்கும் குளிர். ஆகவே, மார்ச், ஏப்ரல், மே, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் போவது நல்லது.
பிசினஸ் டிப்ஸ்
நேரம் தவறாமை மிக முக்கியம். பெரும்பாலானோர் வருடத்துக்கு ஒரு மாதம் விடுமுறை எடுப்பர்கள். ஆகவே, முன்னதாகவே சந்திப்பை உறுதி செய்துகொள்ளுங்கள். முதல் சந்திப்பு பெரும்பாலும், ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் சந்திப்பாகத்தான் இருக்கும். பிசினஸ் டீல் உறுதியாக, இரண்டு அல்லது மூன்று சந்திப்புகள் தேவைப்படும்.
கை குலுக்கல் சாதாரண வரவேற்பு முறை. சந்திக்கும்போதும், விடை பெறும்போதும், கை குலுக்குவார்கள். பண்பாடு மிக்கவர்கள். கதவைத் தட்டிவிட்டுத்தான், அவர்கள் அறைகளுக்குள் நுழைய வேண்டும். விசிட்டிங் கார்டுகள் அவசியம். இவை ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறுபக்கம் (போகும் இடத்துக்கு ஏற்ப) டச்சு / பிரெஞ்சு மொழியிலும் இருப்பது நல்லது. தனிப்பட்ட விஷயங்கள், குடும்பம், மதம் ஆகியவை பற்றிச் சாதாரணமாக அவர்கள் பேசுவதில்லை.
பாக்கெட்டில் கைகளை வைத்துக் கொள்வது, சுட்டிக் காட்டிப் பேசுவது, கை சொடுக்கிக் கூப்பிடுவது, முதுகில் தட்டுவது, உரக்கப் பேசுவது ஆகியவை அநாகரிகமாகக் கருதப்படுகின்றன.
உடைகள்
சூட் அணிவது நல்லது. ஷூக்கள் பாலிஷ் செய்யப்பட்டுப் “பளிச்” என்று இருக்கவேண்டும்.
பரிசுகள் தருதல்
பரிசுகள் தேவையில்லை. தந்தால், விலை உயர்ந்தவையாக இருக்கக்கூடாது. பரிசோடு விசிட்டிங் கார்ட் வைக்கவே கூடாது. அவர்கள் வீடுகளுக்கு அழைத்தால், பூங்கொத்து வாங்கிக்கொண்டு போவது நல்லது. 2 எச்சரிகைகள் - பூங்கொத்துக்களில், செவ்வந்திப் பூக்கள் இருக்கக்கூடாது. இவை மரணத்தைக் குறிப்பவை. மொத்தப் பூக்களின் எண்ணிக்கை பதின்மூன்றாக இருக்கக்கூடாது.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago