முடிவெட்டும் கடை என்பதை மாற்றி யோசித்து, இந்த துறையை முறைப்படுத் தப்பட்ட ஒரு துறையாக மாற்றியதில் நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே. குமரவேலுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இன்றைக்கு இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட பார்லர்கள் இருந்தாலும் இவரது ஆரம்ப காலம் அவ்வளவு எளிதாக இல்லை. ராகா என்னும் நிறுவனம் தொடங்கி, அதில் கடன் ஏற்பட்டு, மீண்டும் பூஜ்ஜியத்துக்கு கீழே சென்று நேச்சுரல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். ஒரு காலைப் பொழுதில் அவருடனான சந்திப்பிலிருந்து…
ராகா தொடங்கப்பட்டதன் காரணம் என்ன?
ஆரம்பத்தில் சகோதரர் ராஜ்குமார் நடத்திய வெல்வெட் நிறுவனத்தில் சில காலம் வேலை செய்தேன். அங்கு நான் உற்பத்திப் பிரிவில் பணியாற்றினாலும் அவ்வப்போது மார்க்கெட்டிங் சம்பந்தமான யோசனைகளும் தெரிவித்துவந்தேன். சில யோசனைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வெளியேறி கெவின்கேர் நிறுவனத்தில் சேர்ந்தேன். இங்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததால் பல விஷயங்கள் செய்ய முடிந்தது. ஆனாலும் ஒரு கட்டத்தில் இங்கேயும் தொடரமுடியவில்லை. இனி சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன். ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு, ஒரு கிரெடிட் கார்ட் மற்றும் அதிக தன்னம்பிக்கை இவைதான் அப்போது என்னிடம் இருந்தன.
ஏற்கெனவே உங்கள் குடும்பத்தினர் இருக்கும் தொழிலிலேயே நிறுவனம் தொடங்க என்ன காரணம்?
குளிர்பானம், உள்ளிட்ட சிலவற்றை யோசித்தேன். தவிர அப்போது மீரா சிகைக்காய் பிரபலம். அதற்குப் போட்டியாக எந்த பிராண்டும் இல்லை. அதனால் தெரியாததை செய்வதை விட தெரிந்ததையே செய்யலாம் என்றுதான் ராகா தொடங்கினேன். அப்போது 5 கோடி ரூபாய் டர்ன்ஓவர் என்பதை இலக்காக வைத்தேன். பிஸினஸை மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்தினேன். மூன்று வருடங்களில் 6 கோடி ரூபாய் டர்ன் ஓவரை அடைந்துவிட்டேன்.
அப்போது எனக்கு 30 வயது. தென் இந்தியாவில் புராடெக்ட் வெற்றி அடைந்தாலும் வட இந்தியா வில் வெற்றிபெற முடியவிலை. இலக்கை அடைந்துவிட்டதால் எனக்கு வேகம் குறைந்துவிட்டது. அதன் பிறகு சில புராடெக்ட்களை சந்தையில் வெளியிட்டோம். அத்தனையும் தோல்வி.
எங்களுடைய புராடெக்ட் சரியில்லை என திருச்சியில் இருந்து ஒரு போன். நானே நேரடியாக சென்றேன். நாங்கள் பேக்கேஜ் செய்யும் போது பச்சையாக இருக்கும் பொருள், வாடிக்கையாளர்களிடம் செல்லும் போது கருப்பாக இருக்கிறது. எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. முதல் முறையாக என்ன செய்வதென்று தெரியவில்லை. கொஞ்சம் பயந்துவிட்டேன். இப்போது யோசித்தால் லேப்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்து என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடித்து ஒரு விளம்பரம் கொடுத்திருப்பேன். ஆனால் பயந்ததால் என்ன செய்வதென்று யோசிக்க முடியவில்லை. சந்தையில் நன்றாக விற்பனையாகும் பொருளை விட்டு அடுத்ததை யோசிக்க ஆரம்பித்தேன்.
பிரச்சினை அதிகமாக ஆரம்பித்ததால் அத்தனை கோயில்களுக்கும் சென்றேன். நான் சிலரைத் தவிர்த்தேன். பலர் என்னைத் தவிர்த்தார்கள். ஒரு நாள் லேண்ட்மார்க் புத்தக கடைக்குச் சென்றேன். அப்போதுதான் ஆங்கிலத்துக்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது புரிந்தது. தொழிலை விரிவுபடுத்த ஆங்கிலம் தேவை என்பது புரிந்தது. அதன் பிறகு நிறைய படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய சில சொத்துகள் நிறுவனங்களை எல்லாம் விற்ற பிறகும் ஒரு கோடி ரூபாய்க்கு கடன் இருந்தது.
எதன் அடிப்படையில் பார்லர் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தீர்கள்?
எனக்கு கெவின்கேர் நிறுவனத்தில் சில லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுக்க ரங்கநாதன் (அண்ணன்) முன்வந்தார். ஆனால் நான் வேண்டாம் என்று சொன்னவுடன் எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற முடிவுக்கு குடும்பத்தினர் வந்துவிட்டனர்.
இந்த முறை மாதம் 60,000 ரூபாய் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தோம். பன்னாட்டு நிறுவனங்கள் இல்லாத துறையாக இருக்க வேண்டும். சிறிய தொழிலாக இருக்கும் பட்சத்தில் வீணாவால் (மனைவி) எளிதில் நடத்த முடியும், அடுத்து அந்த தொழில் விரிவடையும் வாய்ப்புள்ள தொழிலாக இருக்க வேண்டும். பிரீ ஸ்கூல், பொட்டிக், சலூன், இந்த மூன்றில் சலூனை தேர்ந்தெடுத்தோம்.
ஏற்கெனவே கடனில் இருக்கும் போது முதல் பார்லருக்கு 30 லட்ச ரூபாய் எப்படி செலவு செய்தீர்கள்? அவ்வளவு நம்பிக்கையா?
சிறிய அளவில் ஆரம்பித்தால் மக்கள் யாரும் வரமாட்டார்கள். பெரிய அளவில் யோசித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். என்பதால் பெரிய திட்டத்துடன் ஆரம்பித்தேன். இந்த தொழிலை பிரான்ஸைசி கொடுக்கிறோம். முதல் சில வருடங்களில் 25 பிரான்ஸைசி கொடுக்கிறோம். என்பதில் தெளிவாக இருந்தேன். பிரான்ஸைசி கொடுக்க வேண்டும் என்றால் பெரிய பிராண்ட் ஆக இருக்க வேண்டும். அப்போது அதிக முதலீடு தேவை.
மூன்று மாதத்தில் லாபம் அடைவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் லாபம் கிடைக்க மூன்று வருடங்கள் ஆனது.
பிரான்ஸைசி கொடுக்க முடிவு செய்தீர்கள், ஆனால் சிலவருடங்கள் நீங்கள் பார்ட்னர்ஷிப் மூலம் விரிவாக்கம் செய்தீர்களே ஏன்?
யாரும் பிரான்ஸைசி கேட்க வரவில்லை (சிரிக்கிறார்). என்னிடம் வரிசையில் நிற்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் சந்தை வேறு விதமாக நினைத்தது. பிறகு நண்பர் ஒருவர் தொழில் தொடங்க நினைத்தார், ஆனால் அவரிடம் இவ்வளவு பணம் இல்லை என்பதால் பாதி தொகையை முதலீடு செய்தார். மீதி தொகையை நான் முதலீடு செய்தேன். இந்த பார்ட்னர்ஷிப் முறையில் சில வருடம் ஓடியது. அதன் பிறகுதான் பிரான்ஸைசி கேட்க வந்தார்கள்.
நீங்கள் விரிவுபடுத்துதல் (scalability) கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் நகராட்சிக்கு கீழே உள்ள பேரூராட்சிகளில் உங்களால் விரிவுபடுத்த முடியுமா?
முடியும். முடிவெட்டுவதற்கு கோயமுத்தூரில் ரூ.150, பொள்ளாச்சியில் 120 ரூபாய் வாங்குகிறோம். சமீபத்தில் ஆனைமலையில் தொடங்கினோம். அங்கு ரூ 100 ரூபாய்க்கு முடிவெட்டுகிறோம். ஊருக்கு ஏற்றதுபோல விலை நிர்ணயம் செய்தால் விரிவாக்கம் செய்ய முடியும்.
ஒரே பார்லரில் மாதம் 100 நபர்கள் வருகிறார்கள் என்றால், அந்த எண்ணிக்கையை எப்படி அதிகப்படுத்த முடியும்?
எந்த ஒரு தொழிலுக்கும் ஏதாவது EST அவசியம். நாங்கள் எடுத்திருப்பது Nearest. வார இறுதியில் குறிப்பிட்ட நபர்களைதான் கையாள முடியும். அதற்கு மேல் ஆட்களை வரவைத்தாலும், அவர்களை சரியாக கையாள முடியாது. அதனால் ஒரு பார்லரில் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள் என்றால், ஓரிரு கிலோமீட்டரில் இன்னொரு ஷோரூமை திறப்பதுதான் சரி.
உங்களுக்கு தென்னிந்தியாவில் அதிக பார்லர்கள் இருக்கிறது. ஆனால் கரீனா கபூரை விளம்பர தூதுவராக வைத்திருக்கிறீர்களே. இது சரியான முடிவா?
ஆரம்பத்தில் ஆனந்த கண்ணனும், தீபிகா பலிக்கலும் தூதுவராக இருந்தார்கள். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கு ஜெனிலியாவை தூதுவராக நியமித்தோம். வட இந்தியாவுக்கு செல்வதற்காக கரீனாவை நியமித்தோம். முன்கூட்டியே யோசித்துவிட்டோம் என நினைக்கிறேன். இன்னும் கூட அவரை சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம்.
நேச்சுரல்ஸ் ஆரம்பித்த பிறகு ஏதாவது தவறான முடிவு எடுத்தீர்களா?
நிறைய... டெல்லியில் சில, மும்பையில் சில என தனித்தனியாக பார்லர் ஆரம்பித்தேன். அதை விடுத்து, ஒரு மாநிலத்தில் முழுமை யாக கவனம் செலுத்திய பிறகு இன்னொரு மாநிலத்துக்கு சென்றி ருக்கலாம். தவிர தென்னிந்தியாவில் எங்களுக்கான பயிற்சி மையங்கள் இருந்ததால் இங்கு பணியாளர்கள் பிரச்சினை இல்லை. ஆனால் வட இந்தியாவில் பயிற்சி மையங்கள் இல்லாமலேயே தொடங்கியது தவறு. அடுத்து 100 பார்லர் வந்த வுடனே வென்ச்சர் கேபிடல் நிதி வாங்கி வேகமாக விரிவடைய செய்திருக்க வேண்டும். இப்போது தான் அதற்கான வேலையை தொடங்கி இருக்கிறோம்.
அடுத்து என்ன?
நான் இப்போது சலூன் துறையை சேர்ந்த ஆள் இல்லை. இப்போது நான் பிரான்ஸைசி துறையை சேர்ந்த ஆள். சலூன் போல சலவை, பேக்கரி, பாஸ்ட் புட், டெய்லரிங் உள்ளிட்ட துறை கள் ஒழுங்குபடுத்தப்படாமல் உள் ளன. இதல் கவனம் செலுத்த போகி றோம். தவிர இப்போது வரு மானத்தை இலக்காக வைத்து செயல்படவில்லை.எவ்வளவு தொழில்முனைவோர்களை உரு வாக்குகிறோம் என்பதே இப் போதைய என்னுடைய இலக்கு.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago