தொழில் கலாச்சாரம்: மக்களாட்சியின் முன்னோடி தேசத்திலும் வாய்ப்புண்டு!

By எஸ்.எல்.வி மூர்த்தி

உலக உற்பத்தித் தொழிலுக்கே வித்திட்ட முதல், இரண்டாம் தொழிற் புரட்சியை தொடங்கிய நாடு.

வியாபாரத்தில் தொடங்கி, தேசங்கள் பிடிக்கும் யுக்தியைக் கண்டுபிடித்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தாயகம்.

``எங்கள் சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் அஸ்தமிப்பதேயில்லை” என்று பெருமிதத்தோடு சொன்னவரின் சொந்த மண்.

உலக மக்களாட்சிக்கு வழிகாட்டி.

இந்தியக் கல்வித் திட்டம், ரெயில் போக்குவரத்து, கிரிக்கெட் விளையாட்டு ஆகியற்றுக்கு அடித்தளமிட்ட நாடு.

இத்தனை பெருமைக்கும் உரியது, ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom).

என்ன, எந்த நாடு என்று தெரியவில்லையா? இங்கிலாந்து, பிரிட்டன், கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்படும், நமக்கு மிகப் பரிச்சயமான நாடேதான். இங்கிலாந்து. ஸ்காட்லாந்து, வேல்ஸ் என்னும் மூன்று பகுதிகள் கொண்டது. ஐக்கிய ராஜ்ஜியம் என்னும் பெயரைவிட, இங்கிலாந்து, பிரிட்டன், கிரேட் பிரிட்டன் ஆகிய பெயர்களாலேயே அதிகம் அழைக் கப்படுகிறது.

பூகோள அமைப்பு

நிலப்பரப்பு 2,43,610 சதுர கிலோ மீட்டர்கள். நிலப்பரப்பில் 71 சதவீதம் மலைகள். காடுகள் 12 சதவிகிதம். அண்டைய நாடு அயர்லாந்து. பிரிட்டிஷ் கால்வாய் (British Channel) என்னும் நீர்ப்பரப்பு, இங்கிலாந்தையும், பிரான்ஸ் நாட்டையும் பிரிக்கிறது. இந்தச் கால்வாயின் அடிப்பகுதியில், 1994 இல் கட்டப்பட்ட 50 கிலோமீட்டர் சுரங்கப்பாதை இரு நாடுகளையும் இணைக்கிறது. சொகுசு ரெயில்கள் ஓடுகின்றன. 2 மணி நேரத்தில் இங்கிலாந்திலிருந்து பெல்ஜியத்துக்கும், 2 மணி 15 நிமிடங் களில் பிரான்ஸுக்கும் போய்விடலாம்.

பெட்ரோலியம், கரி, தங்கம், இரும்பு, தகரம், துத்தநாகம், சுண்ணாம்புக் கல் போன்ற இயற்கைச் செல்வங்கள் நிறைந்த நாடு. தலைநகரம் லண்டன்.

சுருக்க வரலாறு

கி.மு. 5000 கால கட்டத்திலேயே நாகரிக வளர்ச்சி இருந்தது. கி.பி. 40 முதல் 410 வரை ரோம சாம்ராஜ்ஜியம் இங்கிலாந்தின் தெற்குப் பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. ஆறாம் நூற்றாண்டில், ஏழு உள்ளூர் அரசர்கள் பல்வேறு பகுதிகளைத் திரும்பப் பிடித்தார்கள், ஆளத் தொடங்கினார்கள். பத்தாம் நூற்றாண்டில் டச்சு ஆட்சி வந்தது. கி.பி. 1066 இல், வில்லியம் என்னும் இங்கிலாந்து அரசர் மொத்த நாட்டையும் தன் குடையின் கீழ் கொண்டுவந்தார். 1707 இல், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய மூன்று பகுதிகளும் இணைந்தன. ஐக்கிய சாம்ராஜ்ஜியம் பிறந்தது. மன்னர் தலைமை தொடர்கிறது.

16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில், இங்கிலாந்து ஏராளமான நாடுகளைப் பிடித்தது. 1922 இல், உலக நிலப்பரப்பில் கால் பகுதி, உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அங்கம். வரலாற்றிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்ஜியம் இதுதான். ஆனால், மெள்ள மெள்ள, ஒவ்வொரு நாடுகளாக விடுதலை பெற்றன.

கி.பி. 1215 இல், மன்னரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் Magna Carta என்னும் மகா சாசனம், அரசருக்கும், பிரபுக்களுக்குமிடையே கையெழுத்தானது. இங்கிலாந்தில் மக்களாட்சியின் துவக்கம் இதுதான்.

மக்கள் தொகை

6 கோடி 40 லட்சம். கிறிஸ்தவர்கள் சுமார் 60 சதவீதம்: முஸ்லிம்கள் 4 சதவீதம்: இந்துக்கள் 1 சதவீதம்: மத நம்பிக்கை இல்லாதவர்கள் 26 சதவீதம்: இவற்றுள் சேராத பிறர் 9 சதவீதம். சுமார் 6 லட்சம் இந்தியர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள்.

ஆண்கள் கல்வியறிவு 98 சதவீதம். பெண்கள் கொஞ்சம் அதிகமாக, 99 சதவீதம். பேசும் மொழி? சொல்ல வேண்டுமா? ஆங்கிலம்!

ஆட்சிமுறை

மன்னராட்சியும், மக்களாட்சியும் சேர்ந்த அற்புதக் கலவை. நாட்டுத் தலைவர் மகாராஜா / மகாராணி. வம்சாவளியாக இந்தப் பதவி வருகிறது. இரு சபைகள் House of Lords என்னும் மேல் சபை. House of Commons என்னும் கீழ் சபை. மேல்சபை அங்கத்தினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கீழ்சபை அங்கத்தினர்கள் மக்களால், தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. ஆட்சி நடத்துபவர் பிரதமர்.

பொருளாதாரம்

சேவைத் துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது - 78 சதவீதம். நிதி தொடர்பான சேவைகள், கமாடிட்டி எக்ஸ்சேஞ்கள் போன்றவை இதில் முக்கியமானவை. உலகப் பணப் பரிவர்த்தனை மையங்களில் லண்டன் முக்கிய இடம் வகிக்கிறது. தொழில் துறையின் பங்கு 21 சதவீகிதம். விமானங்கள், மருந்துகள், கார்கள், ரெயில்கள், பெட்ரோலிய உற்பத்தி, சுரங்கத் தொழில், ஜவுளி ஆகியவை இதற்கு உதவுகின்றன.

2008 இல் வந்த உலகளாவிய நிதிப் பிரச்சினையால், பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. 2013 முதல் முன்னேற்றம் காட்டுகிறது.

நாணயம்

ஸ்டெர்லிங் பவுண்ட் (Sterling Pound). இந்திய மதிப்புக்கு ஒரு பவுண்ட் சுமார் 101 ரூபாய்.

இந்தியாவோடு வியாபாரம்

இங்கிலாந்துக்கு நம் ஏற்றுமதி ரூ. 56,986 கோடி. இவற்றுள் முக்கிய மானவை ஜவுளிப் பொருட்கள், காலணிகள், தோல் சாமான்கள், இயந்திரங்கள். நம் இறக்குமதி ரூ. 30,737 கோடி. விமானங்கள், இயந்திரங்கள், இரும்பு, உருக்கு சாமான்கள், பிளாஸ்டிக்ஸ், மருந்துகள் இவற்றுள் முக்கியமானவை.

ஹெச்எஸ்பிசி வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, கிளாக்ஸோ ஸ்மித் கிளைன், ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்றவை நம் நாட்டில் வெற்றி கரமாகச் செயல்படும் இங்கிலாந்து நிறுவனங்கள். இங்கிலாந்தில் 800க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்களுள், டாடா மோட்டார்ஸ், ஏர்டெல், டிவிஎஸ், சக்ரா, டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ், கோத்ரெஜ், அரபிந்தோ பார்மா, ஹெச்சிஎல் போன்றோர் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

விசிட்

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களிலும் கடுமையான குளிர் நிலவும். பலரும் விடுமுறை எடுக்கும் காலம். பிசினஸ் பேச இந்த மாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

பிசினஸ் டிப்ஸ்

நேரம் தவறாமை மிக முக்கியம். லண்டனில் டிராஃபிக் மிக அதிகம். இதை நினைவில் வைத்துக்கொண்டு மீட்டிங்குகளுக்குப் புறப்படுங்கள். பதவிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். பேச்சு வார்த்தைகளுக்கு, நிறுவனத்தின் உரிமையாளரோ, மூத்த அதிகாரிகளோ போவது நல்லது. விசிட்டிங் கார்டுகள் தேவை. அவற்றில் உங்கள் பதவியைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். கை குலுக்கல்தான் வரவேற்பு முறை.

மரியாதை மிகுந்தவர்கள். பெண்கள் வந்தால், எழுந்து அவர்களுக்கு இடம் தருவார்கள். சின்னச் சின்ன சிரமம் ஏற்பட்டாலும், மன்னிப்புக் கேட்பார்கள். மதிப்புத் தந்து பழகுவார்கள். மிக நெருங்கிப் பழகுவது, பல்லாண்டுத் தொடர்புக்குப் பிறகுதான்.

அவசர முடிவுகள் எடுக்கமாட் டார்கள். முடிவும், நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் எடுக்கப்படலாம். ஆகவே, உடனடி பிசினஸ் ஒப்பந் தங்களை எதிர்பார்க்காதீர்கள். நிதா னத்தோடு அணுகுங்கள்.

எத்தனைதான் நெருக்கமாகப் பழகி னாலும், உடலைத் தொட்டுப் பேசுவதும், தோளில் கை போடுவதும் பிரிட்டிஷார் விரும்பாத செயல்கள். பாக்கெட்டில் கைகளைப் போட்டுக்கொண்டு பேசுவது, சுட்டிக்காட்டுவது, மிக அழுத்தமாகக் கை குலுக்குவது ஆகியவையும் அநாகரிகமானவை. அரச குடும்பத்தாரைக் கேலி செய்தோ, விமர்சித்தோ பேசவே கூடாது. விளை யாட்டுகள் (குறிப்பாகக் கிரிக்கெட்), செல்ல வளர்ப்புப் பிராணிகள், பருவநிலை பற்றிப் பேசலாம்.

உடைகள்

கோட், சூட் அவசியமாக இருந்தது. இப்போது இந்த கலாச்சாரம் மாறி வருகிறது. விஐபி-களைப் பார்க்கப் போகும்போது சூட் அணிவது நல்லது.

பரிசுகள் தருதல்

அத்தியாவசியமில்லை. தந்தால், விலை அதிகமான பரிசுகள் வேண்டாம். பூக்களோ, பூங்கொத்துக்களோ வாங்கிக்கொண்டு போகிறீர்களா? எந்த நிகழ்ச்சிக்கு எந்தப் பூ, என்ன நிறம், என்ன எண்ணிக்கை என்று பாரம்பரியம் உண்டு. தவறுகள் செய்யாமலிருக்கப் பூக்கடைக்காரரையே கேட்டுவிடுங்கள்.

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்