நாடு என்றால் எப்படி இருக்கும்? பக்கத்து நாடுகளோடு, கடல் மார்க்கமாகவோ, தரை மார்க்கமாகவோ, எல்லைகள் இருக்கும். ஆனால், ஒரு நாட்டுக்குள்ளேயே இரண்டு அயல்நாடுகள் இருக்கமுடியுமா? இத்தகைய அதிசய நாடு இத்தாலி. போப் ஆண்டவர் ஆட்சி செய்யும் வாடிகன் நகரம், சான் மரீனோ (San Marino) ஆகிய இரு நாடுகளும் இத்தாலி நாட்டுக்குள் இருக்கின்றன. வாடிகன்தான் உலகிலேயே மிகச் சிறிய தேசம் 0.44 சதுர கிலோமீட்டர்கள். சென்னை அண்ணாநகரின் அளவில் பத்தில் ஒரு பங்கு.
பூகோள அமைப்பு
நிலப்பரப்பு 3,01,340 சதுர கிலோ மீட்டர்கள். ஏராளமான எரிமலைகள். அடிக்கடி வெடித்துச் சேதம் விளைவிப்பதுண்டு. அண்டைய நாடுகள் ஆஸ்திரியா, பிரான்ஸ், வாடிகன் நகரம், சான் மரீனோ, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து ஆகியவை.
கரி, பாதரசம், துத்தநாகம், மார்பிள், பெட்ரோலியம், சுண்ணாம்புக் கல் போன்ற இயற்கைச் செல்வங்கள் நிறைந்த நாடு. தலைநகரம் ரோம்.
சுருக்க வரலாறு
இத்தாலியின் வரலாற்றைச் சுருக்க மாகச் சொல்வது, கடுகைத் துளைத்து ஏழு கடலை அடைக்கும் வேலை.
இத்தாலி வரலாறு, ரோம சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றோடு ஐக்கியமானது. கி.மு 753 முதல் கி.பி. 1461 வரை 2214 ஆண்டுகள் நீடித்த ரோம சாம்ராஜ்ஜியம் இருந்தது. இந்தப் பொற்காலத்தில் உருவாகிய ஆட்சி முறைகள், ராணுவ யுக்திகள், பிரம்மாண்டக் கட்டடங்கள், அறிவியல் முன்னேற்றங்கள் உலக சமுதாய முன்னேற்றத்துக்கே அடித்தளமாக, வழிகாட்டிகளாக இருக்கின்றன. உதாரணமாக, கி.மு. 800 லேயே, மக்களாட்சி, கமிஷா க்யூரிட்டா, செனட் என்னும் மேல்சபை, கீழ்சபைகள் இருந்தன. கி.மு 450 - இல் தொகுக்கப்பட்ட பன்னிரெண்டு கட்டளைகள் என்னும் சட்டமுறை; கி.பி. 89 இல் கட்டப்பட்ட 50,000 பேர் உட்காரும், கொலோசியம் என்னும் விளையாட்டு அரங்கம்: 1582 -இல் ஜூலியஸ் சீஸர் தொடங்கிய காலாண்டர்; ரோமன் எண்கள்…..இன்னும் எத்தனை எத்தனையோ?
கி.பி. 1861 இல், இத்தாலியின் பல பகுதிகள் இணைந்து இன்றைய நாடானது. முதல் உலகப் போரில், ஜெர்மனிக்கு எதிராகப் பிரிட்டன், அமெரிக்கா, பிரானஸ் ஆகிய நேச நாடுகளுடன் கை கோர்த்தது. 1926 இல், முசோலினி சர்வாதிகாரியானார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ஹிட்லரோடு கை கோர்த்தார். நேச நாடுகளிடம் தோல்வி. 1946 இல், இத்தாலியக் குடியரசு உதயமானது.
மக்கள் தொகை
6 கோடி 86 லட்சம். கிறிஸ்தவர்கள் (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கர்கள்) 80 சதவீதம்: மத நம்பிக்கை இல்லாதவர்கள் 20 சதவீதத்துக் கொஞ்சம் குறைவாக. எஞ்சியவர்கள் முஸ்லிம்கள். இத்தாலி யில், சுமார் 25,000 தமிழர்கள் வசிக்கிறார்கள்.
கல்வியறிவு 99 சதவீதத்துக்கும் அதிகம், ஆண்களும், பெண்களும் சமமாக உயர் கல்வியறிவு பெற்றவர் கள். பேசும் மொழிகள்? இத்தாலியன், ஜெர்மன், பிரெஞ்சு. ஆங்கிலம் சரளமாகப் பேசுபவர்கள் அதிகம் கிடையாது.
ஆட்சிமுறை
1861 முதல் மக்களாட்சி நடக்கிறது. 18 வயது நிறைந்த அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. இரண்டு சபைகள். செனட் என்னும் மேல்சபை அங்கத்தினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். Chamber of Deputies என்னும் கீழ்சபை உறுப்பினர்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல்கள் மூலமாகப் பதவி பெறுகிறார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள், President of the Council ஐத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது நம் பிரதமர்போன்ற ஆட்சித் தலைவர் பதவி. நாட்டுத் தலைவர் ஜனாதிபதி. இந்தியா போலவே இவரும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
பொருளாதாரம்
சேவைத் துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது - 74 சதவீதம். பழம்பெருமைகள் கொண்ட நாடாக இருப்பதால், சுற்றுலா முக்கிய துறை. மத்தியதரைக் கடலின் மையத்தில் நாடு இருப்பதால், பல ஐரோப்பிய நாடுகளின் கப்பல் வணிகப் போக்குவரத்து இத்தாலி வழியாக நடக்கிறது, வருமானம் தருகிறது. தொழில் துறையின் பங்கு 24 சதவீதம். 1950 க்குப் பிறகுதான், தொழில்களே தொடங்கின. ஆனால், 2000 த்துக்குள் மாபெரும் வளர்ச்சி. சிறு, மீடியம் தொழில்கள் அதிகம். இவை குடும்பங்களின் கட்டுப்பாட்டில் நடப்பவை. விமானங்கள், இயந்திரங்கள், கார்கள், ரெயில்கள், ஆடைகள், காலணிகள், தோல் பொருட்கள் ஆகியவை பிரதான தயாரிப்புகள். பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு வெறும் 2 சதவீதமே.
இரண்டாம் உலகப்போரில், பொருளாதாரம் சிதிலமடைந்தது. 1980 க்குப் பின் வந்த பல சீர்திருத்தங்கள் வளர்ச்சிக்கு வழி வகுத்தன. 2008 இல் உலக நிதிநிலைப் பிரச்சனையால், வீழ்ச்சி வந்தது, 2011 முதல், மறுபடியும் இத்தாலி எழுந்துவருகிறது.
நாணயம்
ஐரோப்பாவின் பொதுக் கரென்சியான யூரோ. சுமார் 71 ரூபாய்க்கு சமம்.
இந்தியாவோடு வியாபாரம்
இத்தாலிக்கு நம் ஏற்றுமதி ரூ. 31,118 கோடி. இவற்றுள் முக்கியமானவை பெட்ரோலியப் பொருட்கள், இரும்பு, உருக்கு, இயந்திரங்கள், வாகனங்கள், கெமிக்கல்கள், காலணிகள், காபி, டீ. நம் இறக்குமதி ரூ. 25,862 கோடி. எந்திரங்கள், கெமிக்கல்கள், பேப்பர், சல்ஃபர், சிமெண்ட், மார்பிள், பிளாஸ்டிக்ஸ், மருந்துகள் போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.
150 க்கும் அதிகமான இத்தாலியக் கம்பெனிகள் நம் நாட்டில் இருக்கின்றன. பியட் (கார் தயாரிப்பு), Piaggio (ஆட்டோக்கள், டிரக்குகள்), வெல்ஸ்புன் (படுக்கை விரிப்புகள்), ஷூவாரி சிமெண்ட் ஆகியவை குறிப்பிடத்தக்க நிறுவனங்கள். ஆதித்யா பிர்லா, எஸ்.குமார்ஸ், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, ரேமன்ட்ஸ், ரன்பாக்ஸி, டி.சி.எஸ், விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்களும் இத்தாலியில் வெற்றிகரமாக இயங்கிவருகிறார்கள்.
விசிட்
ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர் சிறந்தவை. நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலும் கடுமையான குளிர். பலரும் விடுமுறை எடுக்கும் காலம். இந்த மாதங்களைத் தவிருங்கள்.
பிசினஸ் டிப்ஸ்
நேரம் தவறாமை முக்கியம். ஆனால், உயர் பதவியில் இருப்பவர்கள் தாமதமாகத்தான் வருவார்கள். முன்னாலேயே நேரம் நிச்சயித்தால் மட்டுமே, யாரையும் சந்திக்கமுடியும். அதுவும், கடிதம், ஈ மெயில் மூலமாக நிச்சயிப்பது நல்லது. இத்தனை முன்னேற்பாடுகள் செய்தாலும், காரணமே இல்லாமல், சந்திப்புகள் ரத்து செய்யப்படுவது சர்வ சாதாரணம்.
பதவிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். சாதாரணமாக, நீங்கள் வி.ஐ.பி யாக இருந்தாலொழிய, அடிமட்ட அதிகாரிகள், நடுமட்டம் எனப் பலரைச் சந்தித்த பிறகுதான், உயர் அதிகாரியைச் சந்திக்க முடியும். கை குலுக்கல்தான், வரவேற்பு முறை.
விசிட்டிங் கார்டுகள் தேவை. அவை உங்கள் பதவியைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். பலருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆகவே, விசிட்டிங் கார்டுகள் ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறு பக்கம் இத்தாலிய மொழியிலும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
அவசர முடிவுகள் எடுக்கமாட்டார்கள். முடிவும், நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் எடுக்கப்படலாம். ஆகவே, உடனடி பிசினஸ் ஒப்பந்தங்களை எதிர்பார்க்காதீர்கள். நிதானத்தோடு அணுகுங்கள்.
பேசும்போது உணர்ச்சிகளை அடக்கி வாசிக்கமாட்டார்கள். வெளிக் காட்டுவார் கள். கைகளை ஆட்டிப் பேசுவார்கள்.
கால்பந்தாட்டப் பிரியர்கள். ஆகவே, விளையாட்டுகள், சினிமா, உணவுகள், ஒயின்கள் பற்றிப் பேசலாம். அரசியல், ஊழல், கறுப்புப் பணம், மதம், குடும்பம் ஆகியவை பற்றிப் பேச வேண்டாம். பலான ஜோக்குகளையும் அவர்கள் ரசிப்பதில்லை.
உடைகள்
ரசனையோடு ஆடைகள் அணிவார் கள். உங்களையும், உடைகளை வைத்து எடை போடுவார்கள். கோட், சூட் அவசியமில்லை. ஆனால், பான்ட், ஷர்ட் ஒன்றோடொன்று பொருந்தும் நிறங்களில் கட்டாயம் இருக்கவேண்டும்.
பரிசுகள் தருதல்
பரிசுகள் விலை உயர்ந்தவையாக இருக்கவேண்டிய தேவையில்லை. ஆனால், கலைநயம் கொண்டவையாக, உங்கள் ரசனையின் அடையாளமாக இருக்கவேண்டும். அவற்றில் கம்பெனி லோகோ கூடவே கூடாது.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago