மத்திய பட்ஜெட் 2021: 75 வயது முதியோருக்கு வருமான வரி தாக்கல் சலுகை, தமிழகத்திற்கு மெட்ரோ ரயில், சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு வருமான வரி தாக்கல் சலுகை, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டதாகக் கூறினார். கரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் அளவுக்கு அதாவது சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

நடப்பு நிதியாண்டிலும் கரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டு உலகப் போர்களுக்கு பிறகு தற்போது உள்ள நிலையும், சமூக பொருளாதார மறு உருவாக்கம் தேவைப்படக்கூடிய அளவில் இருப்பதாக அவர் கூறினார்.

உலகிலேயே மிக குறைந்த இறப்பு விகிதமாக ஒரு மில்லியனுக்கு 112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கரோனா காலத்தில் உயிரிழப்பு இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் பெற்றுள்ள வெற்றி நாட்டின் இளைய சமுதாயத்திற்கு உத்வேகத்தையும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் கூறினார். உலகளாவிய பெருந்தொற்று காரணமாக சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்:

தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுத்தப்படுகிறது. ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது. தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும்.

நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும்.

காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கரோனா தடுப்பூசி வழங்கலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது.

சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன.

இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம்.

ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம்.

வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்திற்கான திட்டங்கள்:

தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ரயில்வேத் துறை:

ரயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும்.

முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து:

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 1,18,101 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பொதுப் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம். இதன்காரணமாக ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும்.

நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.

எரிபொருள்:

பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப் படவுள்ளது.

கப்பல் போக்குவரத்து:

வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

காப்பீட்டுத் துறை:

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்படவுள்ளது.

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நுகர்வோர் தங்களது உரிமைகளை அறிந்து கொள்ளவும், குறைகளைத் தீர்க்கவும் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ளன.

எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன.

மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்.

அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்.

வேளாண் துறை:

விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன.

வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி

தொழிலாளர் நலன்:

அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கல்வித்துறை:

100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.

அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.

தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு.

விண்வெளித்துறை:

இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.

நிதித்துறை:

முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு.

நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம்.

வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம்.

நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம்.

15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வரிவிகிதம்:

பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு.

இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும்.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.

பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைப்பு

வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு தீர்வை விதிக்க திட்டம்

பிற அம்சங்கள்

சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும்.

தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனைக் காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

மேலும்