பெங்களூருவில் உள்ள முக்கியமான வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களில் கலாரி கேபிடல் (kalaari capital) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் முதலீடு செய்த பல நிறுவனங்கள் பன் மடங்கு வளர்ந்திருக்கின்றன. மிந்திரா, ஸ்நாப்டீல், அர்பன் லேடர் உள்ளிட்ட 60 நிறுவனங்களில் கலாரி முதலீடு செய்திருக்கிறது. சிறந்த வென்ச்சர் கேபிடல் நிறுவனம் என்ற விருதினை நாட்டின் முன்னணி செய்திதாள் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கியது. அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கார்த்திக் நாகேஸ்வரனை சந்தித்து உரையாடியதிலிருந்து...
சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இன்ஜினீயரிங் படிக்க நினைத்தவர். நல்ல மதிப்பெண் பெற்றாலும் முக்கிய கல்லூரியில் இடம் கிடைக்காததால் பிஎஸ்சி கணிதம் படித்தவர். சிஏ முடித்த பிறகு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியவர். கலாரி தொடங் கப்பட்டதில் இருந்து தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
பிஎஸ்சி முடித்துவிட்டு ஏன் சி.ஏ முடித்தீர்கள்?
எம்எஸ்சி படித்து பெரிய வேலை கிடைக்காமல் பலர் இருந் தார்கள். அதனால் புரபெஷனல் கோர்ஸ் படிக்க வேண்டும் என்று நினைத்துதான் சிஏ எடுத்தேன். எனக்கு கணக்கு தெரியும். ஆனால் அக்கவுண்ட்ஸ் தெரியாது. தவிர எனக்கு வேறு வழி இல்லை. இதை முடித்தால்தான் அடுத்தகட்டத் துக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
சிஏ என்பது ஒரு டிகிரி போல் அல்ல. இதை குழுவாக சேர்ந்து படிக்க முடியாது. உங்களுடைய முழுமையான திறனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சிஏ படிக்க வேண்டும். என்னிடம் யாராவது ஆலோசனை கேட்டால் சிஏ படிக்கச் சொல்வேன். இப்போது சந்தையில் நிறைய இன்ஜினீயர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிஏ-க்கள் இல்லை. அவர் களுக்கு தேவை நிறைய இருக் கிறது. ஒரு வேளை இன்ஜினீயரிங் படித்திருந்தால் இப்போதைய நிலையில் இருந்திருப்பேனா என்பது கூட தெரியாது.
ஏன் அனைத்து வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் மொரிஷியஸில் தலைமை அலுவலகம் வைத்திருக் கிறீர்கள்?
இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதை விட உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்வதன் மூலம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். நீங்கள் ஒரு பெரிய முதலீட்டாளர். உங்களிடம் அதிக பணம் இருக்கிறது. ஆப்ரிக்காவில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள். சில வருடங்களுக்குப் பிறகு அந்த பணத்தை எடுத்து இந்தியாவுக்கு கொண்டு வர நினைக்கிறீர்கள். அப்போது அங்கு (ஆப்ரிக்காவில்) வரி செலுத்தி, அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் போது இங்கு ஒரு வரி என்றால் முதலீடு செய்தற்கு அர்த்தம் இல் லாமல் போய்விடுமே. இதற்காகத் தான் மொரிஷியஸை தேர்வு செய்கிறார்கள்.
உலகத்தில் மொரிஷியஸ், அயர் லாந்து உள்ளிட்டவை இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வரி ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. அதாவது மொரிஷியஸில் இருந்து இந்தியாவில் செய்த முதலீட்டை அப்படியே மொரிஷியஸுக்கு எடுத்துச் செல்லலாம். அதேபோல மொரிஷியஸிலும் முதலீட்டாளர் கள் வரி செலுத்தத் தேவை இல்லை. அவர்கள் அந்த முதலீட்டை அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்லும் போது மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. அதனால்தான் மொரிஷியஸில் அலுவலகம் உள்ளது.
இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழுகிறதே?
வேலை வாய்ப்புகள் உருவா கின்றன, இந்தியாவின் ஜிடிபி உயர் கிறது. இந்தியர்களின் சொத்து மதிப்பு உயர்கிறது. முதலீடுகள் வரும், வெளியே செல்லும். ஆனால் அதற்கான மதிப்பு இந்தியாவில் இருக்கிறது. அதன் செயல்பாடுகள் இங்குதான் இருக்கிறது. இந்தியா வில் வரி செலுத்தினால் மட்டும் போதும், அமெரிக்காவில் வரி செலுத்த வேண்டாம் என்ற உடன் பாடு ஏற்பட்டால் இங்கேயே வரி செலுத்துவார்கள். முதலீட்டாளர் கள் வரி செலுத்த வேண்டாம் என்று நினைப்பதில்லை. ஒரு இடத் தில் வரி விதிக்கப்பட வேண்டும்.
வென்ச்சர் கேபிடல் நிறுவனங் களை பற்றி அச்சம் பல தொழில் முனைவோர்களுக்கு ஏற்பட்டிருக் கிறதே?
அப்போதெல்லாம் கல்லூரியில் படித்து வரும் போது வேலை கிடைக்குமா என்று யோசித்தார்கள். ஆனால் இப்போது வரும் போது தொழில்முனைவு என்றுதான் கல்லூரியில் இருந்து வெளியே வருகிறார்கள். இப்போதுதான் இந்த துறை வளர ஆரம்பித்து வருகிறது. ஆங்காங்கே சிலர் பேசி வருகிறார்கள். ஒரு அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது. அதேபோல அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. சிறிய நிறுவனங்கள் வளர்வதற்கு பல வகைகளில் விசி நிறுவனங்கள் உதவுகின்றன.
நிறுவனங்களை எப்படி தேர்ந்தெடுக் கிறீர்கள்?
நாங்கள் 30 நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நிராகரித் திருக்கிறோம். பல விஷயங்கள் சேர்ந்த பிறகுதான் முதலீடு செய்யப்படும். நிறுவனர்கள், ஐடியா, அடுத்த கட்ட வளர்ச்சி என பல விஷயங்கள் ஆராயப்படும். நாங்கள் நிராகரித்த ஐடியாக்களில் மற்ற விசி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். இப்படியும் நடக்கும். அனைத்து முடிவுகளை யும் சரியாக எடுக்க முடியாது.
பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ந்துவிட்டன. ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு இவை மிகச் சிறியவை. அதுபோல உங்கள் கணிப் பில் இப்போது வளர்ந்து வரும் துறை எது?
நிதிச்சேவைகள் பிரிவு. (மியூச்சு வல் பண்ட், இன்ஷூரன்ஸ், வாலட், வங்கி கடன்), உணவு சேவை. ஆன் லைன் பர்னிச்சர் விற்பனை, கல்வி, ஹெல்த்கேர் ஆகிய துறைகள் இப்போது வளர்ந்து வருகின்றன.
கலாரி கேபிடல் வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வென்ச்சர் கேபிடல் நிறுவனம். பிரைவேட் ஈக்விட்டி போல வளர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம் உள்ளதா?
இல்லை. பிரைவேட் ஈக்விட்டி என்பது வளர்ந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது போல. அங்கு பெரிய வேலை இருக்காது. ஆனால் வென்ச்சர் கேபிடல் என்பது சிறிய குழந்தைகளுக்கானது. நாம் நிறைய சொல்லிக்கொடுக்கலாம், நிறைய வேலை இருக்கிறது.
உங்களின் தோல்வி விகிதம் எவ்வளவு?
ஏன் விவாகரத்து அதிகமாகிறது என்பது போன்ற கேள்வி இது. பல விஷயங்களை பார்த்துத்தான் முதலீடு செய்கிறோம். இருந்தாலும் முதலீடு செய்து பார்த்தால்தான் என்ன நடக்கும் என்பது தெரியும்.
எங்களிடம் மூன்று பண்ட்கள் உள்ளன. இதில் முதல் பண்டில் 30 சதவீத முதலீடு தோல்வியை சந்தித்தோம். தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன.
அடுத்த இரண்டு பண்ட் மூலம் திரட்டிய நிதியை இப்போது முதலீடு செய்துள்ளோம்.
நிறுவனங்கள் தோல்வியடை வது என்பது `ஹார்ட் அட்டாக்’ மாதிரி உடனடியாக நடக்காது. இது படிப்படியான நிகழ்வு. நிறுவனம் சரிகிறது என்று தெரிந்தாலே அடுத்த கட்ட முதலீட்டை நிறுத்திவிடுவோம்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago