ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

மாறுபடும் வட்டி விகிதத்தில் பெறப்படும் கடன்களை முன் கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் வரவேற்றுள்ளனர். வீட்டுக் கடன்களை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என்று ஏற்கெனவே 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இப்போது வாகனக் கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட எந்த விதமான கடனும் மாறுபடும் வட்டி விகிதத்தில் பெறப்பட்டிருந்தால் அதை முன்கூட்டியே செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற் றுள்ளது.

பொதுவாக இதுபோல் முன்கூட்டியே செலுத்தும் தொகை எவ்வளவோ அதில் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை வங்கிகள் அபராதமாக வசூலிக்கும். இப்போது ரிசர்வ் வங்கி உத்தரவால் இந்த அபராதம் விதிக்கக் கூடாது என்ற நடை முறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

சிட்டி யூனியன் வங்கியில் அபராதம் கிடையாது

வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற கடனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாக செலுத்த விரும்பினால் அதற்கு எவ்வித அபராதமும் வசூலிப்பது கிடையாது என்று சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி தெரிவித்தார். ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய விதிமுறை பிற வங்கிகளுக்குத்தான் பொருந்தும் என்று அவர் கூறினார்.

இப்போது அபராதம் விதிக்கும் வங்கிகளுக்கும் இது ஒரு பிரச்சினையாக இருக்காது. இதனால் அவர்களின் இதர வருமானம் பாதிக்காது. கடன் வாங்கியவர்களில் மிகச்சிலர் மட்டுமே முன்கூட்டியே திரும்ப செலுத்துவார்கள். அதனால் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு வங்கிகளை பாதிக்காது என்றும் தெரிவித்தார்.

நல்ல முடிவு

வாடிக்கையாளர்களின் நலன் கருதி இத்தகைய வரவேற்கத்தக்க உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக சென்ட்ரல் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் எஸ். கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

வாகனக் கடன், தனிநபர் கடன், அடமானம் பேரில் பெறப்படும் கடன் உள்ளிட்டவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே அபராதம் இன்றி செலுத்த இந்த உத்தரவு வகை செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வங்கிகளுக்கு இதனால் மிகப் பெரும் வருவாய் இழப்பு இருக்காது என்றும் அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE