அண்மைக் காலத்தில் பங்குச் சந்தைக்கும் பொதுத் தேர்தலுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, உலகமயமாக்கலுக்குப் பின் இந்தியப் பங்குச் சந்தை, அரசியல் மாற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. மத்திய அரசின் சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளின் மாற்றத்துக்கேற்ப பங்குச் சந்தைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் விளைவாக, கடந்த காலங்களில் பொதுத் தேர்தல் முடிவுகள் வரும் நாளில் பங்குச் சந்தையில் பெரிய மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. மே16-ம் தேதியும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.
தேர்தல் முடிவுகளும் பங்குச் சந்தையும்
மார்ச் 6, 1999 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தல் முடிவுகள் இருந்தபோது, மத்தியில் நிலையான அரசு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 83 புள்ளிகள் உயர்ந்தது. நிலையில்லாத தே.ஜ.கூ. அரசு பதவியிழந்து மறுபடியும் பொதுத் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியானபோது (அக்டோபர் 6, 1999), நிலையில்லாத அரசு அமைந்துவிடுமோ என்ற ஐயத்தில் பங்குச் சந்தைக் குறியீடு 11 புள்ளிகள் விழுந்தன. ஆனால், உடனடியாக நிலையான அரசை தே.ஜ.கூ. அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அக்டோபர் 11, 1999 அன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீடு முதன்முறையாக 5,000 என்ற நிலையைத் தாண்டியது.
2004-ல் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ-1 அரசுக்கு ஆதரவான முடிவுகள் வந்த, மே 14-ம் தேதியன்று ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்காத மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 329.6 புள்ளிகள் சரிந்தது, மறுநாள் மீண்டும் 564.71 புள்ளிகள் சரிந்தது.
இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில்லாமல் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ-2 ஆட்சியைப் பிடித்தபோது 2009-ல் பங்குச் சந்தை குதூகலத்தின் உச்சத்தை அடைந்தது. மே 18, 2009 அன்று 10 மணிக்கு ஆரம்பித்த பங்குச் சந்தை, 30 நொடிகளில் சந்தைக் குறியீடு வேகமாக உயர, வியாபாரத்தைக் கணினி நிறுத்தியது. திரும்பவும் இரண்டு மணி நேரம் கழித்து வியாபாரம் ஆரம்பிக்க, மீண்டும் சில நிமிடங்களில் குறியீடு உயர, நாள் முழுவதும் வியாபாரம் நிறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை, மே 15 அன்று 12173.42 முடிந்த பங்குக் குறியீடு இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, மே 18 அன்று 14284.21 என்ற நிலைக்கு உயர்ந்தது. இவ்வாறு தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை வியாபாரப் போக்கைத் திண்ணமாக மாற்றியுள்ளன.
2014 தேர்தலின் எதிர்பார்ப்புகள் என்ன?
நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு, நிலையான ஆட்சிதான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் என்று எஃப்.ஐ.டி.சி.எச். மற்றும் எஸ்&பி என்ற இரு பெரிய தரநிர்ணய நிறுவனங்கள் கூறுகின்றன. கூட்டணி ஆட்சியில் அதிகக் கட்சிகள் இருந்தால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒருமித்த கருத்து இல்லாமல், நிலையற்ற சூழல் நிலவும். இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று இந் நிறுவனங்கள் கூறுகின்றன. நவம்பர் 2013-ல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனம், மோடி தலைமையிலான அரசு வந்தால் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளது என்ற அறிக்கையை வெளியிட்டு, காங்கிரஸின் கண்டனத்துக்கு ஆளானது.
தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது முதல் பங்குச் சந்தையும் விறுவிறுப்பானது. 2014, ஜனவரி 31 அன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 20,513.85 புள்ளிகளில் முடிந்தது. மார்ச் மாதம் முதல் பங்குச் சந்தைக் குறியீடு ஏறுமுகம்தான். மார்ச் தொடங்கி மே முதல் வாரம் வரை குறியீடு 6% அதிகரித்துள்ளது. கடந்த எட்டு மாதங்களாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரித்துள்ளனர். ஏப்ரலில் மட்டுமே ரூ. 9,600 கோடியை அவர்கள் முதலீடுசெய்துள்ளதாகத் தெரிகிறது. ‘பா.ஜ.க. அரசு வரும், நிலையான ஆட்சி தரும்’ என்ற எதிர்பார்ப்பில் உள்ள பங்குச் சந்தையை இது குறிப்பதாகப் பலர் கூறுகின்றனர்.
2014, மே 9 அன்று இந்தியப் பங்குச் சந்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அன்று சென்செக்ஸ் என்ற மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 704.45 புள்ளிகளும், நிஃப்டி என்ற தேசியப் பங்குச் சந்தைக் குறியீடு 211.50 புள்ளிகளும் அதிகரித்தன. இன்று 6.30 மணிக்குமேல் வாக்குக் கணிப்புகள் வெளிவரும். அதில் நிலையான அரசு, குறிப்பாக மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் அரசு வருவதற்கான வாய்ப்புகள் தெரிந்தால், பங்குச் சந்தைக் குறியீடு மேலும் உயரும் என்று முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே, மே 14, 15 ஆகிய நாட்களின் சந்தையின் போக்கு மே 16-ம் தேதியின் நிலையை நிர்ணயிக்கும்.
மே 16…
பொதுவாக, தேர்தல் முடிவுகள் வர வர, பங்கு விலைகளில் பெரிய மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும். மேலும், அந்நியச் செலாவணிச் சந்தை, கடன் பத்திரச் சந்தை போன்றவற்றிலும் மாற்றங்கள் நிகழும். உதாரணமாக, பங்குச் சந்தை உயர்ந்தால், அந்நிய நிறுவனங்கள் அதிக முதலீடு செய்யும். இதனால் டாலர் வரத்து அதிகமாகி இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். அதே நேரத்தில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள், அதனை விற்றுப் பங்குகளில் முதலீடு செய்வார்கள். இதனால் கடன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் குறையும். இவ்வாறு பங்குச் சந்தை, அந்நியச் செலாவணி சந்தை, கடன் பத்திரச் சந்தை என்று மூன்று சந்தைகளிலும் பணம் பயணம் செய்யும்போது பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஊக வணிகம் அதிகமாகும்.
ஊக வணிகம் அதிகமாகும்போது, அதனைச் சரிசெய்யக் கூடுதலான பங்குப் பரிவர்த்தனை தேவை என்று பங்குப் பரிவர்த்தனை முகவர்கள் கேட்கின்றனர். எனவே, மே 16 அன்று மட்டும் சந்தையைக் கூடுதல் நேரத்துக்குச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், மறுநாள் சனிக்கிழமை விடுமுறை நாளானாலும், அன்று மட்டும் மீண்டும் பங்குச் சந்தையைத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது. இதுவரை இவ்வாறான விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டது இல்லை. எனவே, இம்முறையும் வழக்கம் போலவே பங்குச் சந்தை செயல்படும் என்று செபி தரப்பில் கூறப்படுகிறது.
பங்குகளின் விலைகள் ஏற்றஇறக்கங்களுடன் இருந்தால் அதனைச் சரிசெய்ய சில நடவடிக்கைகளை ஆர்.பி.ஐ-யும் செபியும் இணைந்து எடுத்திருக்கின்றன. மே 16 அன்று மதியம் 1 மணிக்குள் பங்குச் சந்தைக் குறியீடு 10%விட அதிகமாக மாற்றம் அடைந்தால், நாடு முழுவதும் 45 நிமிடத்துக்கு வர்த்தகம் நிறுத்திவைக்கப்படும். மதியம் 1 மணியிலிருந்து 2.30 மணிவரை இது நடந்தால் 15 நிமிடம் வர்த்தகம் நிறுத்தப்படும். இதுவே, மதியம் 2 மணிக்கு மேல் 15% வரை குறியீடு மாறினால், அன்றைய நாள் முழுவதும் வர்த்தகம் நிறுத்தப்படும். எந்த ஒரு தருணத்திலும் பங்குக் குறியீடு 20% அதிகமாக மாறினால், அன்றைய நாள் முழுவதும் வர்த்தகம் நிறுத்தப்படும்.
இதுமட்டுமல்லாமல், அதிக விலைகளில் பங்கு வர்த்தகம் நடக்கும்போது, முகவர்கள் மார்ஜின் தொகையை அதிகமாகக் கட்ட வேண்டிவரும். இதற்கும் வங்கிகள் மூலம் கடன் அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆக மொத்தத்தில், மே 16, 2014 இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இருக்கும்.
- இராம. சீனுவாசன், இணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
12 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago