கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது சிட்டி யூனியன் வங்கி. இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் காமகோடி சென்னையிலிருந்து கும்பகோணம் செல்ல தயாராக இருந்தார். கிடைத்த இடைவெளியில் வங்கியின் செயல்பாடு, வங்கித்துறையின் தற்போதைய நிலைமை என பல விஷயங்களை அவரிடம் பேசினோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து..
உங்களது ஆரம்பகாலம் பற்றி?
கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மிட்டர் தொலைவில் இருக்கும் அரசு பள்ளியில் ஐந்தாவது வரைக்கும் படித்தேன். ஆறாவதுக்கு பிறகு கும்பகோணத்தில் இருக்கும் பள்ளியில் படித்தேன். திருச்சி ஆர்.சி.சி. கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். அதன்பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தில் சூரத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு மூன்று வருடங்கள் வேலை பார்த்த பிறகு ஹாங்காங்கில் எம்.பி.ஏ. படிக்க சென்றேன்.
எம்.பி.ஏ. படிக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் ஐரோப்பா, அமெரிக்காவுக்குத் தான் செல்வார்கள். நீங்கள் ஏன் ஹாங்காங் சென்றீர்கள்?
அமெரிக்காவுக்கு போனால் திரும்பி வரமாட்டேன் என்று அப்பா நினைத்துவிட்டார். அடுத்து அங்கு போனால் ரூ. 40 லட்சத்துக்கு மேல் செலவும் ஆகும். மேலும் எந்த கல்லூரியில் படித்தாலும் அங்கு கிடைக்கவிருக்கும் முதல் வருட சராசரி சம்பளம் நாம் செய்யும் செலவுகளுக்கு கிட்டத்தட்ட சமமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். அதன் பிறகு ஆசியாவில் இருக்கும் முக்கியமான கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தேன். ஹாங்காங்கில் கிடைத்தது.
உடனே சிட்டி யூனியன் வங்கிக்கு வந்துவிட்டீர்களா?
2000-ம் ஆண்டு முடித்து விட்டு நானும் என்னுடைய சகோதரரும் சென்னையில் ஒரு பி.பி.ஓ. நிறுவனம் நடத்திவந்தோம். அதன் பிறகு 2003-ம் ஆண்டு சிட்டி யூனியன் வங்கியில் சேர்ந்தேன்.
ரொக்க இருப்பு விகித (சி.ஆர்.ஆர்) (4% சதவீதம் வைத்திருக்க தேவையில்லை என்று எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்தது) பிரச்சினையில் எஸ்.பி.ஐ. வங்கிக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கருத்து மோதல் நிலவியது. இதில் உங்கள் பார்வை என்ன?
இரண்டு தரப்பும் இது பற்றி விவாதம் எழுப்புகின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் சி.ஆர்.ஆர். கிடையாது என்று வங்கி தரப்பு தெரிவித்தது. அதே சமயம் வளர்ந்த நாடுகளில் வங்கி பிரச்சினையில் ஒழுங்கு முறை ஆணையங்கள் ஓரளவுக்குத்தான் தலையிடும். பிரச்சினை எல்லை மீறும்போது கைவிட்டு விடுவார்கள். ஆனால் நம் ஊரில் முதலீட்டாளர்களின் பணம் மோசம் போனது என்ற வரலாறு கிடையாது. பேங்கிங் சிஸ்டத்துக்கு கொடுக்கிற இன்ஷூரன்ஸ் பிரீமியம் போலத்தான் இந்த சி.ஆர்.ஆர்.
25 வருடங்களுக்கு முன்பு சி.ஆர்.ஆர். மிக அதிகமாக இருந்தது. இப்போது குறைந்து 4 சதவீதமாக இருக்கிறது. வருங்காலத்தில் இது இல்லாமலே கூட போகலாம். இப்போதைக்கு ரொம்பவும் யோசனை செய்யத் தேவை இல்லை.
வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச (மினிமம்) பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம் விதிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியது. அப்படியானால் மற்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாமா என்று ஹெச்.டி.எப்.சி வங்கி கேட்டது. அதுபற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வங்கிக்கு எத்தனை கிளைகள் இருக்கிறது, எத்தனை பேர் வேலை செய்கிறார்கள், எவ்வளவு டெபாசிட் இருக்கிறது என்பதை வைத்துதான் 25 வருடத்துக்கு முன்பு வங்கிகளை வரையறை செய்தார்கள். இப்போது வங்கி செயல்பாட்டை லாபம், டிவிடெண்ட் போன்றவற்றை வைத்து அளவீடு செய்கிறார்கள். இது தவிர, முன்பு இவ்வளவு கடுமையான விதிமுறைகள் கிடையாது. இப்போது குறைந்தபட்சம் சி.ஆர்.ஆர்., எஸ்.எல்.ஆர். பராமரிக்க வேண்டும். சுருக்கமான சொல்வதென்றால் முன்பு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் வங்கிகளுக்கு கிடையாது.
பணக்காரனாக இருக்க வேண்டுமா அல்லது சந்தோஷமாக இருக்க வேண்டுமா என்பதற்கான பதிலில்தான் இப்போது உலகம் இருக்கிறது. முன்பு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இப்போது பணக்காரனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்.
ஒரு செக் புக் அச்சடித்து, அதை கொரியரில் அனுப்பி, நீங்கள் கொடுக்கும் செக்கை வாங்கி, இன்னொருவர் கணக்கில் வைக்க வேண்டும். மேலும் உங்களுக்கு ஏ.டி.எம். கார்டு கொடுத்து, ஆங்காங்கே ஏ.டி.எம். அமைத்து கொடுத்து இதர சேவைகளை வழங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச பேலன்ஸ் தேவைப்படுகிறது.
சேமிப்பு கணக்கில் 4 சதவீதத்துக்கு வாங்கி 12 சதவீதத்துக்கு மேல் வங்கிகள் கடன் கொடுக்கிறார்கள் என்பதுதான் தெரிகிறதே தவிர இந்த சேவைகளை அறிவதில்லை. உங்கள் கணக்கில் இருந்து வங்கிக்கு வருமானம் கிடைத்தால்தான் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை கொடுக்க முடியும்.
இருந்தாலும் எந்த வங்கியின் கணக்கை எடுத்து பார்த்தாலும் இதர வருமானம் அதிகமாக இருக்கிறதே. அதை வைத்துக்கொண்டு குறைந்தபட்ச இருப்பு தொகை நிபந்தனையை ரத்து செய்ய முடியாதா?
குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமலும் வங்கி கணக்கு தொடங்க முடியும். ஆனால் அந்த கணக்கில் எந்த சேவையும் உங்களுக்கு கிடையாது. பிரச்சினை எங்கே வருகிறது என்றால் குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்த மாட்டேன், ஆனால் எனக்கு தரமான சேவை வேண்டும் என்ற இடத்தில்தான்.
சமீபத்தில் வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக இருக்கிறதே. உங்கள் வங்கியின் நிலைமை என்ன?
எல்லாமே சுழற்சிதான். விரைவில் வங்கிகளின் வாராக்கடன் அளவு குறையும். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அதிக ரிஸ்க் எடுத்து கடன் கொடுப்பதில்லை. அதனால் டிசம்பர் காலாண்டு வரை எங்களது நிகர வாராக்கடன் 0.89 சதவீதமாக இருந்தது.
எல் அண்ட் டி நிறுவனம் உங்களது வங்கியை வாங்கப்போவதாக நீண்ட நாளாக சந்தையில் ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் உங்கள் வங்கியில் 4 சதவீதத்துக்கு மேல் பங்கு வைத்திருக்கிறார்கள் என்பது போல செய்திகள் வருகிறதே?
எங்களது வங்கியில் எல்.ஐ.சி, அந்நிய முதலீட்டாளர்கள் என பலரும் எங்களது வங்கியின் பங்கினை வைத்திருக்கிறார்கள். மேலும், 110 வருடங்களுக்கு மேலே தொடர்ச்சியாக லாபம் ஈட்டி, டிவிடெண்ட் கொடுத்து வரும் வங்கி சிட்டி யூனியன் வங்கி. எங்களுடைய இலக்கு தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதுதான். 10 வருடங்களுக்கு முன்பிருந்தே இதுபோன்ற எதாவது வதந்திகள் வருகிறது. இப்போதைக்கு எந்த வங்கியையும் வாங்கும் திட்டம் எங்களுக்கும் இல்லை. எங்களது வங்கியை கொடுக்கும் திட்டமும் இல்லை.
ஒரு பிஸினஸ் ஆரம்பித்து விட்டால் 360 டிகிரியை நோக்கி விரிந்து செயல்பட வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் உங்கள் வங்கியில் சில சேவைகள் கிடையாதே?
சராசரியாக ஒரு மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் எங்கள் வங்கியில் இருக்கிறது. இன்னும் சில சேவைகளை வழங்கலாம். உதாரணத்துக்கு கிரெடிட் கார்ட். அதை பற்றி யோசித்து வருகிறோம். கூடவே மற்ற சேவைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். தக்க சமயத்தில் அறிமுகப்படுத்துவோம்.
உங்களின் வங்கியின் ‘காசா’ விகிதம் (current and savings account) குறைவாக இருக்கிறதே?
ஆமாம். மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது இந்த விகிதம் குறைவுதான். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குறைவாகவே இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்கும் இதே விகிதத்தில்தான் இருக்கும். காசா விகிதம் அதிகமாக இருக்க பெரிய கார்ப்பரேட் கணக்குகள் இருக்க வேண்டும், பங்குச்சந்தை புரோக்கர்களின் கணக்கு, அரசாங்கத்தின் கணக்கு, சம்பள கணக்குகள் போன்றவை அதிகமாக இருக்கும் பட்சத்தில்தான் காசா விகிதம் அதிகமாக இருக்கும். காசா விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு கூடுதல் நேரம் செலவிடுவதை விட எங்களுடைய தற்போதைய நிலையிலே மற்ற வங்கிகளுக்கு சமமான முடிவுகளை எப்படி கொடுக்க முடியும் என்று பார்ப்போம்.
இரண்டு புதிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருக்கிறது. போட்டி எப்படி இருக்கும்?
இந்த புதிய வங்கிகளால் உடனடியாக தாக்கம் ஏதும் இருக்காது.
உங்கள் வங்கி தென் இந்திய வங்கி என்றே சொல்லப்படுகிறது?
அனைந்திந்திய வங்கி என்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே வட இந்தியாவில் கிளைகளை தொடங்கும் திட்டம் இல்லை. அடுத்த சில வருடங்களில் ஆரம்பிக்கப்படும் கிளைகளில் 50 சதவீதம் தமிழகத்தில் இருக்கும். அடுத்த 25 சதவீதம் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருக்கும்.
karthikeyan.v@kslmedia.in
முக்கிய செய்திகள்
வணிகம்
38 mins ago
வணிகம்
42 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
4 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago