பணம் செய்: 20 சதவீதத்தவருக்காக உழைக்கும் 80 சதவீத மக்கள்

இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடொ பரேட்டோ (Vilfredo Pareto) 1906 ம் ஆண்டு கவனித்த ஒரு விஷயம், இத்தாலி நாட்டில் 80% நிலத்தை நிர்வகித்து வந்தது 20% மக்கள் தொகையே. தான் கவனித்த அந்த விஷயத்தை பல நாடுகளிலும் சர்வே செய்தபோது கிடைத்த ஆச்சரியமான உண்மை எல்லா நாடுகளிலும் இதே சதவிகிதம் ஒத்து காணப்பட்டதே.

இந்த விதி பொதுவாக எல்லா இடத்திலும் பொருந்தக்கூடியது. 80 சதவீத மக்கள் 20 சதவீத மக்களுக்காக வேலை செய்கிறார்கள், உலகின் 20 சதவீத பணக்காரர்கள் 80 சதவீத செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேட்டோ விதி நமது அன்றாட வாழ்க்கையிலும் பெரும்பாலான இடங்களில் பொருந்தினாலும் யாரும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை மேலும் அதை உணர்வதும் இல்லை.

நேரம் விரயமல்ல

நம் வாழ்வில் கூர் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன, அதற்குச் செலவிடும் நேரத்தை விரயம் என நினைக்காமல் செயல்பட்டால் அந்த 20% நேரம் நமக்கு 80% உழைப்பைத் தரும் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், பலர் தங்களது வருமானத்தில் 10% கூட தொடர்ச்சியாக சேமிப்பதில்லை. எல்லோராலும் அந்த 20% க்குள் வந்து 80%-ஐ கட்டுப்படுத்த முடியாது, அதே சமயம் எல்லோராலும் 20% சேமிப்பைக் கடைப்பிடிப்பது என்பது அவ்வளவு கடினம் இல்லை. செல்வ வளத்தை உருவாக்குவது குழந்தை விளையாட்டு, நாம் ஒழுங்கை மட்டும் தொடர்ந்து கடைப்பிடித்தால் வளமாக வாழலாம் என்று சொன்னால் மிகையாகாது.

கீழ்க்கண்ட உதாரணங்களை நம் அன்றாட வாழ்வில் கண்கூடாகக் காண லாம்.

1. ஒரு நிறுவனத்தின் 80% வளர்ச்சிக்கு உறு துனையாக இருப்பவர்கள் 20% வாடிக்கையாளர்களே!

2. ஒரு நிறுவனத்திற்கு வரக்கூடிய 80% புகார் தரக்கூடியவர்கள் 20% வாடிக்கையாளர்களே!

3. உங்களுடைய செலவுகளில் 80% ஆக்கிரமிப்பது ஒரு சில செலவுகளே, அதாவது மாதம் நாம் 50 செலவுகள் செய்கிறோம் என எடுத்துக் கொண்டால், அதில் 10 செலவுகள் 80% பணத்தை சாப்பிட்டு விடும்.

4. வேலைக்குப் போக வேண்டும் என்பது சரி, அதில் 20% மக்களே தங்களுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்து செய்கிறார்கள், 80% ஏதோ கிடைத்த வேலை செய்வதால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

5. எல்லோருக்கும் 20% பிரச்சி னைகளும், 80% சாதகமாகவும் இருக்கும். ஆனால் நம்மில் பலர் அந்த 20% பிரச்சினைகளை பெரிதுபடுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நமக்குப் பிரச்சினைகள்தான் வளர்ந்து கொண்டே இருக்கிறன்றன. இது கேட் பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இது ஒரு நிதர்சனமான உண்மை.

பணக்காரர்களின் ஆதிக்கம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் சொல்லான GDP (Gross Domestic Product) 1989 ம் ஆண்டு உலக அளவில் 20% பணக்காரர்களால் 82.7% நிர்வகிக்கப்பட்டது. இதிலிருந்து இந்த விதி எல்லா இடங்களிலும் எல்லா கால கட்டத்திற்கும் பொருந்துவதாய் தோன்றுகிறது. கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையைப் பார்க்கவும்.

இந்தியாவில் அரசாங்க உத்தியோகத்தில் ஓய்வூதியம் என்பது அவர்களுடைய வருமானத்தில் மாதா மாதம் 10% பிடித்து, 30 முதல் 35 வருடங்களுக்குப் பிறகு அதாவது ஓய்வு பெறும்போது ஒரு தொகையைத் தருகிறார்கள். அந்த சிறு தொகைதான் பெரிதாக வளர்ந்து மீதமுள்ள வாழ்க்கைக்கு உதவுகிறது.

சேமிக்கும் பழக்கம்

ஒருவர் மாதா மாதம் ரூ. 50,000 சம்பாதிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அதில் 80 சதவீதமான ரூ. 40,000 செலவு செய்துவிட்டு 20 சதவீதமான ரூ. 10,000 சேமிக்கிறார். இவர் 21 வயதில் வேலைக்குச் சென்று 25 வயதில் மணம் செய்கிறார். இவர் 55 வயதில் ஓய்வு எடுப்பதாக வைத்துக் கொண்டால் பணிக்காலம் இன்னும் 30 வருடங்கள் உள்ளன. ஒவ்வொரு சம்பள உயர்வுக்கும் சம விகிதாசாரத்தில் செலவும் இருக்கும். ஒரு கணக்குக்காக சம்பளமும் செலவும் அடுத்த 30 வருடங்களுக்கு மாறாது என்று வைத்துக் கொள்வோம். ஆக அவர் அடுத்த 30 வருடத்தில் ரூ. 1.80 கோடி (50,000 x 12 x 30) சம்பாதிப்பார். அதில் 1.44 கோடி ரூபாயை தனது வாழ்க்கை முறையைத் தக்க வைக்க செலவு செய்து செய்தது போக மீதமுள்ள ரூ.36 லட்சம் மட்டுமே சேமிக்கப்படும்.

55 வயதுக்குப் பிறகு வருமானமே இருக்காது அல்லது மிகக் குறைந்த வருமானமே இருக்கும். 15% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி அவரது சேமிப்பு ரூ.10,000 அடுத்த 30 வருடத்தில் 7 கோடி ரூபாய் ஆகியிருக்கும். 12% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி கூட ரூ. 3.52 கோடி கிடைக்கும். இது அவரது மொத்த 30 வருட உழைப்பூதியத்தை விட அதிகம். வெறும் 3% அதிக வ.கூ.வ. விகிதம் முதலீட்டை இரட்டிப்பாக்கி விடுகிறது.

நீண்டகால முதலீடு

இந்திய பங்கு சந்தை சென்செக்ஸ் (Sensex) தொடங்கியதிலிருந்து 17% வ.கூ.வ. விகிதம் கொடுத்துள்ளது. உயர் தரமான பரஸ்பர நிதித் திட்டங்கள் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 20% க்கும் மேலான வளர்ச்சியைக் கொடுத்துள்ளன. உங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நீண்ட கால முதலீட்டில் 15% வ.கூ.வ. விகிதம் கிடைக்கும் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.

சாராம்சம்:

தினசரி நாம் செய்கிற வேலையை அடுத்த நாள் எப்படிச் செய்வது என்று கொஞ்ச நேரம் செலவிட்டால் அதை மிகவும் பயனுள்ளதாக மாற்ற முடியும். இன்று நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் ஒரு முக்கியமான கேள்வி, நீ அலுவலகம் சென்றதுமுதல் வீடு திரும்பும்வரை என்னென்ன வேலைகள் செய்கிறாய் என்பது. இந்தக் கேள்விக்கு பலரும் திணறுவார்கள், நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நாம் எவ்வளவு நேரத்தை விரயம் செய்கிறோம் என்பது புரியும்.

மெஜாரிட்டி 80%-லிருந்து 20% மைனாரிட்டிக்குச் செல்ல வேண்டுமானால் நாம் அடிப்படை விஷயங்களைக் கடைபிடித்தாலே போதும். இன்று ஒருவரால் 20% சேமிப்பு என்பது மிகவும் சாத்தியமான ஒன்றே. அந்த சேமிப்பையும் ஒரு செலவாக எடுத்துக்கொண்டு மாதா மாதம் ஒரு சிறு தொகையை சேமிக்கத் தொடங்கினாலே நம்மால் பெரிய அளவிற்கு பணம் சேர்க்க முடியும். இந்த 80:20 விதி நம் வாழ்வின் பல்வேறு இடங்களில் நாம் செய்ய மறந்தவைகளை நினைவுபடுத்தும்.

இதை உணர்ந்து நாம் செயல்பட்டால் நம் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அந்த வெற்றி நமக்குதேவையான செல்வங்கள் அனைத்தையும் அள்ளித் தரும்.

padmanaban@fortuneplanners.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE