ஒற்றைக் கம்பெனியின் ஏகபோக ஆதிக்கத்தை முறியடிக்க செயற்கை பஞ்சின் மீதான குவிப்பு வரியை அரசு நீக்க வேண்டும்: சைமா தலைவர் வலியுறுத்தல்

By கா.சு.வேலாயுதன்

‘இந்திய ஜவுளித் தொழில் மற்றும் விஸ்கோஸ் செயற்கை பஞ்சு வர்த்தகத்தில் சமீப காலமாக மிகுந்த தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஒற்றைக் கம்பெனியின் ஏகபோகமும், செயற்கை பஞ்சு (விஸ்கோஸ்) மீதான குவிப்பு வரியுமேயாகும். இந்த வரியை நீக்கித் தீர்வு கண்டாலே ஒழிய எதிர்காலத்தில் நாம் ஜவுளித் தொழிலைக் காப்பாற்ற முடியாது!’’ என்று அரசினை வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளது சைமா (தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம்).

உலக அளவில் ஒப்பிடுகையில் செயற்கை பஞ்சு மற்றும் நூலின் விலை அதிகமாக இருக்கிறது. இந்திய ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கு பருத்திப் பஞ்சு முக்கிய பங்காற்றி வருவதோடு, அது பன்னாட்டு விலையை விடச் சற்றே குறைந்த விலையில் இந்திய ஜவுளித் துறைக்குக் கிடைக்கிறது. மேலும், பருத்திப் பஞ்சு லட்சக்கணக்கான நமது பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்கிவருகிறது. இந்தியாவில் பருத்திப் பஞ்சுக்கு எந்தவித இறக்குமதி வரியோ அல்லது குவிப்பு வரியோ விதிக்கப்படுவதில்லை என்பதால் பருத்திப் பஞ்சை உபயோகித்து உற்பத்தி செய்யப்படும் இந்திய ஜவுளிப்பொருட்களால் உலக ஜவுளிச் சந்தையில் போட்டியிட முடிகிறது. உலக அளவில் பருத்திப் பஞ்சினாலான ஜவுளிப் பொருட்கள் வருடத்தில் ஒரு ஃபேஷன் சுழற்சிக்கு (வசந்தகாலம், கோடைக்காலம்) மட்டுமே உபயோகப் படுத்தப்படுகின்றன. மற்ற சீசன்களில் செயற்கை பஞ்சை உபயோகித்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களுக்கே உலக அளவில் தேவை அதிகமாக உள்ளது.

இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 20 சதவீதம் செயற்கை பஞ்சில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்கள் பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் சீனா உட்பட பல்வேறு போட்டி நாடுகளில் செயற்கை பஞ்சில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன (ஏறக்குறைய 80 சதவீதம்). உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய செயற்கை பஞ்சு உற்பத்தியாளராக இருந்தும் செயற்கை பஞ்சின் விலையில் உள்ள வேறுபாட்டினால் இந்தியாவால் செயற்கை பஞ்சை உபயோகித்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

வங்கதேசம், வியட்நாம், இலங்கை போன்ற சிறிய நாடுகள் செயற்கை பஞ்சை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யாத போதிலும் இந்தியாவை விட பல மடங்கு செயற்கை பஞ்சில் உற்பத்தி செய்த ஜவுளிப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. அந்நாட்டு ஜவுளி ஆலைகளுக்கு பன்னாட்டு விலையில் செயற்கை பஞ்சு கிடைப்பதே இதற்கு மூலகாரணம் ஆகும். ஆகவே, செயற்கை பஞ்சை பன்னாட்டுச் சந்தை விலையில் இந்தியாவில் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்தால் இந்திய ஜவுளிப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் பன்னாட்டு வணிகத்தில் போட்டியிட வசதியாக இருக்கும்.

ஏற்கனவே, பாலியஸ்டர் செயற்கை பஞ்சின் முக்கிய மூலப்பொருளான PTA மீதுள்ள குவிப்பு வரியை, ஜவுளித்துறையின் தொடர்ந்த வற்புறுத்தலின் அடிப்படையில், மத்திய அரசு தைரியமாக நீக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், பாலியஸ்டர் செயற்கை பஞ்சு மற்றும் அதன் மற்றொரு மூலப்பொருளான MEG-யின் மீது விதிக்கப்பட இருந்த குவிப்பு வரியை நிராகரித்ததன் மூலம் பாலியஸ்டர் செயற்கை பஞ்சை உபயோகித்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்கள் உலக அளவில் போட்டியிட ஒரு சமதளம் உருவாக்கப்பட்டது.

இருப்பினும், பாலியஸ்டர் பஞ்சிற்கு அடுத்த முக்கிய மூலப்பொருளான விஸ்கோஸ் செயற்கை பஞ்சு மீது தொடர்ந்து செலுத்தப்பட்டு வரும் குவிப்பு வரி போன்ற பாதுகாப்பு முறைகள் இந்தத் துறையில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் பாதிக்கின்றன.

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை பஞ்சுக்கு கிலோ ஒன்றிற்கு 0.103 அமெரிக்க டாலர் முதல் 0.512 அமெரிக்க டாலர் வரை குவிப்பு வரி விதிக்கப்படுகிறது. இது பெருமளவில் நம் இந்திய ஜவுளித்தொழிலைப் பாதிக்கிறது என்பதை சைமா (தென்னிந்தய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம்) சுட்டிக் காட்டியுள்ளது. அதை உத்தேசித்து இந்தக் குவிப்பு வரியை நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது சம்பந்தமாக இன்று சைமா தலைவர் அஷ்வின் சந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது.

''ஏற்கெனவே சைமா மத்திய அரசுக்கும், மத்திய நிதி, வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்களுக்கும் விஸ்கோஸ் செயற்கை பஞ்சு மீது கடந்த பத்து ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வரும் குவிப்பு வரியை நீக்க வேண்டும் என்று கோரி பல்வேறு சமயங்களில் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளது. இந்தியாவில் விஸ்கோஸ் செயற்கை பஞ்சை ஒரே ஒரு உற்பத்தியாளர் உற்பத்தி செய்கின்ற காரணத்தால், மேற்படி உற்பத்தியாளர் தனது ஏகபோகத்தினால் அவர் விரும்பும் விலைக்கு விஸ்கோஸ் செயற்கை பஞ்சின் விலையை நிர்ணயித்தும், உள்நாட்டு சந்தைக்குக் குறைந்த அளவில் விநியோகித்தும் சந்தையைக் கட்டுப்படுத்துகிறார்.

இந்தியாவின் செயற்கை பஞ்சு உற்பத்தியாளரிடம் கலந்து பேசக் கூடிய சூழல் இல்லாத காரணத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால் நமது விசைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் துணிகளால் பன்னாட்டுச் சந்தையில் போட்டியிட முடிவதில்லை. மேலும் பாலியஸ்டர் பஞ்சு உற்பத்தி செய்பவர்கள் பலர் இருப்பதால் இந்திய நூற்பாலைகளால் போட்டி விலைக்கு பாலியஸ்டர் பஞ்சினை வாங்கி தங்களுக்கான சந்தையைத் தக்கவைக்க முடிகிறது.

இந்தியாவில் விஸ்கோஸ் பஞ்சின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செயற்கை பஞ்சு உற்பத்தியாளரின் உற்பத்தியளவு உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் அளவு இல்லாததால் அவர்கள் இறக்குமதி விலைக்கு நிகரான விலையை நிர்ணயம் செய்கின்றனர். அதே சமயம் விஸ்கோஸ் பஞ்சின் மீது விதிக்கப்பட்டுள்ள குவிப்பு வரியைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இந்திய நூற்பாலைகளுக்கு விஸ்கோஸ் பஞ்சினை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகமாக விற்பனை செய்கின்றனர்.

இந்திய உற்பத்தியாளர் விஸ்கோஸ் பஞ்சினை வங்கதேசம், துருக்கி, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய போட்டி நாடுகளுக்கு பன்னாட்டு விலைக்கு விற்கிறார். இவ்வகையான வேறுபட்ட விலை நிர்ணயக் கொள்கை ஒட்டுமொத்த விஸ்கோஸ் பஞ்சு ஜவுளித்துறையையே கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, குறிப்பாக விசைத்தறித் துறையினால் இந்திய விஸ்கோஸ் பஞ்சின் அனுகூலங்களைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் இந்திய போட்டி ஆணையம் தனது 15.3.2020 தேதியிட்ட உத்தரவில் ‘கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ்’ தனது ஏகபோக ஆதிக்கத்தைப் பயன்படுத்தி இந்திய நூற்பாலைகளுக்கு அதிக விலையில் தனது உற்பத்தியை விற்பதாகக் கூறி மேற்படி ஆலை மீது ரூ.301.60 கோடிக்கு அபராதம் விதித்ததையும் அரசு கவனிக்க வேண்டும். இப்படி ஒட்டுமொத்த ஜவுளித்துறை ஒரு முக்கிய மூலப்பொருளுக்கு ஒரேயொரு உற்பத்தியாளரை மட்டுமே சார்ந்திருப்பது பல்வேறு பாதகங்களை உண்டாக்கும்.

மேற்படி விஸ்கோஸ் செயற்கை பஞ்சு உற்பத்தியாளர் தனக்குள்ள ஏகபோகத்தைப் பயன்படுத்திச் சிக்கலான மற்றும் பாரபட்சமான விலையை நிர்ணயிப்பது, 40 சதவீதம் வரை பஞ்சின் விலையில் தள்ளுபடி தர வாக்குறுதியளிப்பது, உற்பத்தியின் மூன்றில் ஒரு பங்கை வருடக் கடைசி வரை இருப்பில் வைப்பது, இதன் மூலம் நூற்பாலைகளின் நடப்பு நிதி மூலதனச் சுமையை அதிகரிப்பது, 100 சதவீதம் முன்பணம் அல்லது கடன் சான்று அளிக்க வலியுறுத்துவது, பணம் செலுத்துவதில் ஏதேனும் தாமதம் இருப்பின் அதற்கு அதிகப்படியான வட்டி வசூலிப்பது, வாடிக்கையாளரிடம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்கள் பிற உற்பத்தியாளர்களிடமிருந்து பஞ்சு வாங்க முடியாத வண்ணம் செய்வது மற்றும் ஆண்டுதோறும் இந்திய நூற்பாலைகளை மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க வைப்பது போன்றவற்றைச் செய்துவருகின்றனர்.

உலக ஜவுளிச் சந்தையில் போட்டியிட, சமீபகாலமாக நமது நாட்டு விசைத்தறியாளர்கள் முழுக்க முழுக்க இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் நூலையே நம்பியுள்ளனர். கடந்த 2016-17 வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கோஸ் நூல் 2,022 டன்னாக இருந்தது. அதுவே 2019-20 வருட வாக்கில் 27 மடங்கு அதிகரித்து 56,262 டன்னாக உயர்ந்துள்ளது. இதனால், உள்நாட்டில் விஸ்கோஸ் நூல் உற்பத்தி செய்யும் நான்கு லட்சம் உற்பத்தித் திறன் கொண்ட ரூ.1000 கோடி மதிப்புள்ள நூற்புக் கதிர்கள் பாதிக்கப்பட்டு 8000 வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதோடல்லாமல் 129.15 மில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலவாணியையும் நாடு இழந்துள்ளது.

மதிப்புக் கூட்டப்பட்ட ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வண்ணம் மத்திய அரசு பல்வேறு ஏற்றுமதி சலுகைகளை அளித்துவரும் நிலையில், மேற்படி விஸ்கோஸ் செயற்கை பஞ்சு உற்பத்தியாளர் பின்பற்றி வரும் விலை நிர்ணயக் கொள்கையாலும் விஸ்கோஸ் பஞ்சின் மீது விதிக்கப்பட்டுள்ள குவிப்பு வரியினாலும் வெளிநாட்டுச் சந்தையில் இந்திய உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் விஸ்கோஸ் ஜவுளிப் பொருட்கள் போட்டியிட முடியாமலும், வாய்ப்புகளை இழந்தும் வருகின்றன. இதனால் நமது போட்டி நாடுகள் இந்த வாய்ப்பினைப் பெருமளவில் தமதாக்கி முன்னேறி வருகின்றனர்.

இதற்கு மாறாக இந்தோனேசியா போன்ற போட்டி நாடுகளில் வேலை வாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணியைப் பெருக்கும் நோக்கத்தோடு, உள்நாட்டுச் சந்தையின் உபயோகத்திற்கான விஸ்கோஸ் பஞ்சின் விலை ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் விலைக்கும், சிலசமயங்களில் அதைக் காட்டிலும் குறைந்த விலைக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள விஸ்கோஸ் பஞ்சு உற்பத்தியாளர் அது போன்ற ஒரு சீரான கொள்கையைப் பின்பற்றுவதில்லை. உலகில் விஸ்கோஸ் செயற்கை பஞ்சின் விலை அதன் முக்கிய மூலப்பொருளான மரக்கூழ் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், விஸ்கோஸ் பஞ்சு உற்பத்தி செய்யும் உள்நாட்டு உற்பத்தியாளர் மேற்படி பஞ்சின் மீது விதிக்கப்பட்டுள்ள குவிப்பு வரியைச் சாதகமாகப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்கின்றனர். விஸ்கோஸ் செயற்கை பஞ்சு மீதான குவிப்பு வரி நீக்கப்படும்பட்சத்தில் இந்திய விஸ்கோஸ் பஞ்சின் விலை பன்னாட்டு விலைக்குக் கீழிறங்கி ஒட்டு மொத்த இந்திய விஸ்கோஸ் ஜவுளித்துறையும் உலக அளவில் தனது போட்டித்திறன், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பன்மடங்கு பெருக்கவும் வழிவகுக்கும்''.

இவ்வாறு சைமா தலைவர் அஷ்வின் சந்திரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

மேலும்