பிரம்மபுத்ராவை சுத்தம் செய்யும் பணி முடிவடைந்தது; நீர்வழிப் போக்குவரத்துக்கு தயார்: நிதின் கட்கரி தகவல்

By செய்திப்பிரிவு

பிரம்மபுத்ரா நதியில் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளதால் இனிமேல் நீர் வழி போக்குவரத்து மேற்கொள்ளப்பட முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, சிறு குறு நடுத்தர தொழில் துறை, ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சாலை பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பதிமூன்று நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். காணொலி மாநாடு மூலமாக நடைபெற்ற இந்த மெய்நிகர் நிகழ்ச்சிக்கு, மாநில முதல்வர் என் பிரேன் சிங் தலைமை வகித்தார்.

வட கிழக்கு மண்டலப் பகுதியின் வளர்ச்சி பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங், மணிப்பூர் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த திட்டங்கள் 316 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகளில் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிகள் செய்வது தொடர்பானவையாகும்.

மணிப்பூரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இந்தச் சாலைகள், வடகிழக்கு மாநிலத்தில் மேலும் எளிய முறையில் தொடர்பு கிடைக்கவும், வசதியை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, வடகிழக்குப் பகுதியில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் ஆசைக்கேற்ப, வட கிழக்கு மண்டலப் பகுதியில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார். விரைவில் மேலும் பல புதிய திட்டங்கள் மணிப்பூரில் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மணிப்பூரில் உள்ள இம்பாலில் உயரமான சாலையை அமைப்பதற்கான டிபிஆர் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்தத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
மாநிலத்தில் சாலைத் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளையும், பயன்பாட்டு மாற்று வழிகளையும் உடனடியாகத் துவக்க வேண்டும் என்று மாநில முதல்வரை கட்கரி கேட்டுக்கொண்டார். மத்திய சாலை நிதியம் குறித்துப் பேசிய அவர், மாநிலத்திலிருந்து பயன்பாட்டு சான்றிதழ் பெறப்பட்டவுடன், கூடுதலாக ரூ.250 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பிரம்மபுத்ரா, பாரக் நதிகளில் தூர்வாரும் பணி நிறைவடைந்து விட்டது என்று அமைச்சர் தெரிவித்தார். இதனால் நீர் வழி மூலமாக, மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட முடியும் என்று அமைச்சர் கூறினார். இந்த நதி வழியில் சுமார் 50 அல்லது 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, இம்பாலையும் இணைக்கலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். இதனால், மாநில பொருளாதாரம் மேலும் அதிக பயனடையும் என்று அவர் கூறினார்.

வடகிழக்கு மண்டலத்தில் பொது போக்குவரத்துக்கு மாற்று எரிசக்தி பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும், இத்தகைய எரிபொருட்கள் மலிவான விலையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மணிப்பூரில் வேலைவாய்ப்பு, பொருளாதார சூழலை மேம்படுத்த சிறு குறு நடுத்தர தொழில் துறை பிரிவு ஆற்றும் பங்கு மிக முக்கியமானது என்று.கட்கரி கூறினார்.

சிறு குறு நடுத்தர தொழில் துறை பிரிவுகளுக்கான வரையறைகள் மாற்றியமைக்கப்பட்டது குறித்து தெரிவித்த அமைச்சர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், தேன், மூங்கில் பொருட்கள் போன்றவற்றில் உள்ள ஏற்றுமதித் திறன் குறித்து கண்டறியுமாறு மாநில முதல்வரை அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்