வருமான வரித் துறையில் வரவேற்கத்தக்க மாற்றங்கள்

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இதற்கு வழி கோலுகிற வகையில், வரி செலுத்துவோருக்கான சாசனம் (Tax Payers’ Charter) ஒன்றை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, வரி செலுத்துவோர் நியாயமாக கண்ணியமாக நடத்தப் படுவதை வரித் துறை உறுதி செய்கிறது. இதில் சொல்லப்பட்டுள்ள மிகமுக்கியமான அம்சம் – ‘வரி செலுத்துவோர் நேர்மையாளராகப் பார்க்கப்படுவார்’. இதனைப் பலமுறை பல அமைப்புகளில் வலியுறுத்தி இருக்கிறேன்.

இதன் பொருள்…? ஒருவரை மோசடி நபராக, தவறு செய்தவராக அனுமானித்துக் கொண்டு விசாரிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் முறையாக வரி செலுத்துபவர் என்கிற நம்பிக்கையுடன் அவரிடம் விசாரிப்பதே ஆரோக்கியமான நடைமுறையாக இருக்க முடியும். காரணம், வருமான வரித் துறை, வரி வசூலிப்பதற்கான வழிகளை ஆராய வேண்டுமே அன்றி, குற்றங்களைக் கண்டுபிடிக்கிற காவல் துறைப் பணி (Policing) செய்து கொண்டு இருத்தல் கூடாது.

வேண்டிய விவரங்களை சேகரித்துக் கொண்டு, அதன் அடிப்படையில் அவருக்கு வரிக் கடப்பாடு (tax liability) எவ்வளவு என்று நிர்ணயிப்பது மட்டுமே வரித் துறையின் பணியாக இருத்தல் வேண்டும். மாறாக, குற்றவாளியைப் போல் ஒருவரை நடத்துதல், அவரின் தன்மானத்துக்கு இழுக்கு சேர்ப்பதாகும்; இயற்கை நீதிக்கும் முரண் ஆகும். இதனை சாசனம் நன்கு தெளிவுபடுத்தி இருக்கிறது. பாராட்டலாம்.

பிரதமர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு – இன்று (13 ஆகஸ்ட்) முதல், ‘முகமற்ற மதிப்பீடு’ (faceless assessment) நடைமுறைக்கு வருகிறது. இந்த வழிமுறையின் படி இனிமேல், வரி செலுத்துவோர் யாருக்கும் அவரது ‘மதிப்பீட்டு அதிகாரி’ (Assessment Officer) யாரென்று தெரியாது. இதேபோல், தன்னுடைய அதிகார வரம்பு (jurisdiction) எது என்பதும் வருமான வரி அலுவலருக்குத் தெரியாது.

உதாரணத்துக்கு, தற்போதுள்ள நடைமுறையின்படி, சென்னையில் தனியார் துறையில் பணிபுரியும் ஒருவருக்கு அவரது ‘ரிடர்ன்’, யாரிடம் போகும்; யார் மதிப்பீடு செய்கிறார் என்கிற விவரம் தெரியும். இன்று முதல் இது சாத்தியம் இல்லை.

ஒரு ‘ரிடர்ன்’ எந்த அதிகாரியால் மதிப்பீடு செய்யப்படும் என்று கணினி (System) தேர்வு செய்யும்; அவர் முதலில் ‘வரைவு மதிப்பீடு’ செய்வார். இந்த வரைவு, வேறொரு நகரில் உள்ள இன்னொரு அலுவலருக்குச் செல்லும். இவர் மதிப்பீட்டு ஆணை வழங்குவார்; இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு நகரில் உள்ள ஒரு அலுவலர் அதனை மீள் பார்வை (review) செய்வார்.

இதுதான் ‘முகமற்ற மதிப்பிடு’. இதே வழியில்தான் ‘முறையீடு’ (appeal) இருக்கும். அது செப்டம்பர் 25-ம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் பல முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

பிரதமர் இன்று சாசனம் வெளியிட்ட சில மணி நேரத்தில், மத்திய நேரடி வரி வாரியம், இரண்டு ஆணைகளை பிறப்பித்து இருக்கிறது. (F No. 187/3/2020-ITA-I/13 ஆகஸ்ட் 2020)

இதன்படி, வருமான வரி சட்டம் பிரிவு 133ஏ-இன் கீழ், வணிக நிறுவனங்களில் நடத்தப்படும் சோதனை (survey)இனி இருக்காது. கடைகள், ஓட்டல்கள், தொழில் முனைவோரின் அமைப்புகளில் மதிப்பீட்டுஅதிகாரி சர்வே செய்து வருமானத்தைக் கணக்கிட்டு ஆணை பிறப்பிக்கும் நடைமுறை வழக்கொழிந்து போகிறது. இதன் மூலம் வரித்துறைக்கு கணிசமான அளவில் வரி இழப்பு ஏற்படும். காரணம், மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் ‘ரெய்டு’ நடவடிக்கையை விடவும், ‘சத்தம் இல்லாமல்’ நடக்கும் ‘சர்வே’ மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம்தான் மிக அதிகம்.

வரிப் பிடித்தம் (TDS) அல்லது புலனாய்வு (Investigation) பிரிவை சேர்ந்த டைரக்டர் ஜெனரல் (அ) முதன்மை ஆணையர் அனுமதியுடன் மட்டுமே ‘சர்வே’ செய்ய முடியும். சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு இது மிகப் பெரிய விடுதலை.

ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கத்தான் போகிறது. இதுவரை நமக்கு ஏதேனும் ‘பிரச்சினை’ இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நேரடியாக முறையிட்டு மனிதாபிமான முறையில் அணுகச் சொல்லிக் கேட்கலாம். அதற்கு இனி வழி இல்லை.

அது மட்டுமல்ல; பல்வேறு தனியார்அயல்நாட்டு வங்கிகளில் உள்ளதுபோன்ற ‘அணுக முடியாத’ (inaccessible) அமைப்பு முறைக்குள் சிக்குண்டு, வருமான வரித் துறையில் யாரைத் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் திண்டாடுகிற நிலையும் ஏற்படலாம்.

‘முகமற்று இருத்தல்’ மூலம் மட்டுமே ‘வெளிப்படைத் தன்மை’யை உறுதி செய்ய முடியும் என்கிற ‘முன்னேற்றம்’ வரவேற்கத்தக்கதா..?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்