செல்போன்கள், டெலிவிஷன்கள், ரெஃப்ரி ஜிரேட்டர்கள், வாஷிங் மெஷின்கள் ஆகிய அன்றாட உபயோகப் பொருட்களை நினைத்தால், நம் மனதுக்கு முன்னால், முதலில் வரும் பிராண்டுகள் சாம்சங், எல்ஜி. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னால், இந்த இடங்களில் இருந்தவை சோனி, சான்யோ, பானசோனிக், தோஷிபா போன்ற ஜப்பான் பிராண்டுகள். இந்திய மாருதி சுஸுகி கார்களுக்குப் பெரும் போட்டி தென் கொரியாவின் ஹூண்டாய் கார்கள். தென்கொரியாவின் இந்தக் குறுகியகாலப் பெரும் வளர்ச்சிக்குக் காரணம், அவர்களது கட்டுப்பாடு, கடும் உழைப்பு, நுணுக்கமாகத் தீட்டும் மார்க்கெட்டிங் யுக்திகள்.
தென்கொரியாவுக்கு நம் ஏற்றுமதி ரூ. 28,085 கோடிகள். முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள், அலுமினியம், கெமிக்கல்கள், கால்நடைத் தீவனங்கள் போன்றவை நம் இறக்குமதி ரூ.82,716 கோடிகள். இவற்றுள், எலெக்ட்ரானிக் கருவிகள், எந்திரங்கள், பிளாஸ்டிக்ஸ், கெமிக்கல்கள், ரப்பர், நாணயங்கள் ஆகியவை முக்கியமானவை. .
பூகோள அமைப்பு
அண்டை நாடுகளில், வடக்குப் பக்கம் வட கொரியா. மற்ற மூன்று பக்கங்களிலும் கடல்கள். கிழக்கிலும், தெற்கிலும், கிழக்கு சீனக்கடலும், அதைத் தாண்டிச் சீனாவும், தெற்குப் பக்கம் மஞ்சள் கடலும், அதைத் தாண்டிய ஜப்பானும். நிலப் பரப்பு சுமார் ஒரு லட்சம் கிலோமீட்டர்கள். பெரும்பாலும் மலைகள். விவசாயத்துக்கு ஏற்பில்லாத பூமி. நான்கு பருவகாலங்கள். டிசம்பர் முதல் பிப்ரவரி இறுதிவரை நீடிக்கும் குளிர்காலம் மிகக் கடுமையானது. தலைநகரம் சியோல்
மக்கள் தொகை
சுமார் ஐந்து கோடி. பிராட்டஸ்ட்டன்ட்கள் 32 சதவிகிதம்: கத்தோலிக்கர்கள் 8 சதவிகிதம்: புத்த மதத்தினர் 24 சதவிகிதம்: மதச்சார்பில்லாதவர்கள் 43 சதவிகிதம்: பிறர் 3 சதவிகிதம். பேசும் மொழி கொரியன். மக்களிடம் பரவலான ஆங்கில அறிவு இருக்கிறது. ஆங்கிலத்தை வைத்துப் பிரச்சனைகளே இல்லாமல் சமாளிக்க முடியும். சமுதாயத்தில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. 98 சதவிகித மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். ஆண்களைப் போலவே, பெண்களும் கல்வியறிவு கொண்டவர்கள்.
சுருக்க வரலாறு
அகழ்வாராய்ச்சிகளின்படி, கொரிய நாகரிகம் கி.மு. 8000 த்தில் தொடங்கியது. கி.மு. 2233 முதல் பல பேரரசுகள். பதினாறாம் நூற்றாண்டு முதல் ஜப்பான் முதலிய பல அந்நிய ஆதிக்கங்கள். இவற்றிலிருந்து விடுபட்டு, கி.பி. 1897 முதல் 1910 வரை கொரியப் பேரரசு கோலோச்சியது. பிறகு, ரஷ்யாவும், ஜப்பானும் கொரியாவைச் சதிராடின. இரண்டாம் உலகப் போருக்குப் பின், கொரியாவின் வடபகுதியை ரஷ்யாவும், தெற்குப் பகுதியை ஜப்பானும் பங்குபோட்டுக்கொண்டார்கள். இரண்டு பகுதிகளிலும் ராணுவ ஆட்சி தொடங்கியது. 1987 இல், மக்களாட்சி வந்தது. தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் அசெம்பிளி அங்கத்தினர்கள். நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தென் கொரியா கொரியக் குடியரசு என்றும், வட கொரியா, ஜனநாயக மக்கள் குடியரசு என்றும் அழைக்கப்படுகின்றன. வட கொரியாவில் இன்றும், ராணுவ ஆட்சிதான். .
நாணயம்
வொன் (Won). ஒரு ரூபாய்க்குச் சுமார் 18 வொன்கள். .
பொருளாதாரம்
இருபதாம் நூற்றாண்டுவரை, ஜவுளி போன்ற பாரம்பரியத் தொழில்களே இருந்தன. பொருளாதாரம் மந்தமாக இருந்தது. அதற்குப் பின், அரசாங்கம், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில்நுட்ப உற்பத்திக்கு ஊக்கம் தந்தது. உலகத்தர வளர்ச்சி தொடங்கியது.
பொருளாதாரத்தில் தொழில்துறையின் பங்கு 38 சதவிகிதம்: சேவைகள் 60 சதவிகிதம்: விவசாயம் வெறும் 2 சதவிகிதம். கார், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்கள், கப்பல் கட்டுதல், இரும்பு உருக்கு தயாரிப்பு ஆகியவை முக்கிய தொழில்கள். சாம்சங், எல்ஜி, ஹூண்டாய் போன்ற பதினொரு பெரிய தொழிற்குழு மங்கள் இருக்கின்றன. இவை குடும்ப நிறுவனங் களாகத் தொடங்கியவை. செளபால்கள் (Chaebols) என்று இந்தக் குழுமங்களை அழைக் கிறார்கள்.
விசிட்
ஜூைல, ஆகஸ்ட் அதிகமானோர் விடுப்பு எடுக்கும் காலம். அக்டோபர், டிசம்பர் விடுமுறைகள் அதிகமான மாதங்கள். இந்தக் காலங்களைத் தவிருங்கள்.
பிசினஸ் டிப்ஸ்
பல பிசினஸ் விஷயங்களில் ஜப்பானைப் பின்பற்றினாலும், ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. பேச்சு வார்த்தைகளின்போது, ஜப்பானில் எப்போதும் சீனியர்கள், ஜூனியர்கள் என இரண்டு பேராவது இருப்பார்கள். கொரியாவில் பெரும்பாலும், நேருக்கு நேர் சந்திப்புகள்தாம். வயதுக்கும், பதவிக்கும் தக்கபடித்தான் மரியாதை. கொரியாவில் பெரிய பதவியில் இருப்பவர்களைச் சந்திக்க வேண்டுமானால், சம அல்லது உயர்ந்த பதவி கொண்டவராக இருக்கவேண்டும். மீட்டிங்கிலும் அத்தகையவர்களோடுதான் பேசுவார்கள்.
முன்னதாக நேரமும், இடமும் குறித்தால் மட்டுமே சந்திப்புகள் சாத்தியம். காலை 10 11, மதியம் 2 3 சந்திப்புக்கு ஏற்ற நேரங்கள். சொன்ன நேரத்துக்குத் தயாராக இருப்பார்கள். அறையில், பதவி நிலைக்கேற்ப ராணுவத்தார் போல் வரிசையாக நின்று வரவேற்பார்கள். உங்கள் குழுவும், இதே பாணியில் வருவதை எதிர்பார்ப்பார்கள். அறிமுகம் செய்வதும், இதே முறையில்தான் இருக்கவேண்டும். விசிட்டிங் கார்ட்கள் அத்தியாவசியம். இவை, உங்கள் பதவியை நிச்சயம் சொல்லவேண்டும். பிசினஸ்மேன்களுக்கு ஆங்கிலம் தெரியும். ஆகவே, இவை ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தால் போதும். கார்டுகளை வலது கையால் மட்டுமே வாங்குங்கள், கொடுங்கள். கார்டு கையில் கிடைத்தவுடன் முழுமையாகப் படித்துவிட்டுப் பாக்கெட்டில் போடுங்கள். பர்சில் வைத்தால், அவமரியாதையாக நினைப்பார்கள். அவர்கள் தரும் கார்டுகளில் எதையும் எழுதக்கூடாது. தலை குனிந்து வரவேற்பது வழக்கம். இது இப்போது கை குலுக்கலாக மாறி வருகிறது.
அடுத்தவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். ஆகவே, பேச்சுக்கள் பல சுற்றுக்களாகலாம், நேரம் எடுக்கலாம். தயாராக இருங்கள். கொரியர்கள், சுற்றி வளைத்துப் பேசுவதில்லை. “முடியும்”, “முடியாது” என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடுவார்கள். இந்த பதில்கள், சில சமயங்களில் முரட்டுத்தனமாகக் கூடத் தோன்றலாம். தவறாக எடை போடாதீர்கள். இது கொரியர்களின் அணுகுமுறை என்று ஏற்றுக்கொள்ளுங்கள். இதே வெளிப்படைப் பேச்சை உங்களிடமும் எதிர்பார்ப்பார்கள்.
சிகப்பு மையால் எழுதாதீர்கள். கொரியர்கள் மரணத்தோடு சம்பந்தப்படுத்தும் நிறம் சிகப்பு.
உடைகள்
பிசினஸ் மீட்டிங்குகளுக்குக் கோட், வெள்ளை முழுக்கைச் சட்டை, டை அணிவது நல்லது. பெண்கள் உடலை மறைக்கும் ஆடைகள் அணியவேண்டும்.
உபசரிப்புகள்
முக்கிய உணவு இரவில்தான். மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள். உணவில் தாராளமாகப் பூண்டு சேர்ப்பார்கள். நீங்கள் பூண்டு சாப்பிடாதவராக இருந்தால், முன்னமே அறிவித்துவிடுங்கள்.
உணவுகளை வலது கையால் மட்டுமே கையாளவேண்டும். சாப்ஸ்டிக் என்னும் குச்சியால் சாப்பிடுவார்கள். உங்களுக்குப் பழக்கமில்லாவிட்டால், ஃபோர்க், ஸ்பூன் கேட்கலாம். கையால் சாப்பிடக்கூடாது.
சாப்பிட்டு முடிக்கும்போது , கொஞ்சம் உணவைத் தட்டில் மிச்சம் வைக்கவேண்டும். வழித்துத் துடைத்துச் சாப்பிட்டால், உங்களுக்குப் பசி அடங்கவில்லை என்று அர்த்தம். இன்னும் பரிமாறுவார்கள். விருந்துகள் ஹோட்டலில் நடந்தாலும், வீடுகளில் நடந்தாலும், பாட்டுக்களோடு முடியும். ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பாடச் சொல்லுவார்கள். நீங்கள் பாட மறுத்தால், விருந்தில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்று அர்த்தம்.
சாப்பிடும்போதும், பிசினஸ் அல்லாத சந்திப்புகளிலும், கலாச்சாரம், விளையாட்டுக்கள், உடல்நலம், குடும்பம் பற்றிப் பேசலாம். உங்கள் வயது, சம்பளம் ஆகிய அந்தரங்கக் கேள்விகள் கேட்பார்கள். நீங்கள் கேட்டாலும், தயங்காமல் பதில்கள் தருவார்கள். ஓரளவு பழகிவிட்டால், வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடுவார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், வீடுகளுக்குள் காலணிகள் போட்டுக்கொண்டு போகக்கூடாது. அவற்றுக்கான இடங்களில் கழற்றிவைக்க வேண்டும்.
பரிசுகள் தருதல்
உங்கள் கம்பெனி லோகோ போட்ட பரிசுகள் தரவேண்டும். இவை மிக விலை அதிகமானவையாகவோ, கொரியாவிலோ, ஜப்பானிலோ தயாரிக்கப்பட்டவையாக இருக்கக்கூடாது. நம் நாட்டுப் பொருளாக இருப்பது மிகச் சிறந்தது. வீடுகளுக்கு அழைத்தால், சாக்லெட்கள், கின்ஸெங், டீ வாங்கிக்கொண்டு போகலாம். சிகப்பு நிறப் பேப்பரில் பேக் செய்யவே கூடாது.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago