ஒரு எழுத்தாளர் பேச்சாளராக இருப்பது அரிது. அப்படி இருப்பது மட்டுமல்லாமல் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பது அரிதிலும் அரிதான காம்பினேஷன். அந்த காம்பினேஷனில் இருப்பவர் பிரகாஷ் ஐயர். கிம்பர்ளி கிளார்க் லீவர் (kimberly clark lever) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். The Habit of Winning, The Secret of Leadership புத்தகங்களின் ஆசிரியர். நிர்வாக கல்லூரிகள், பிஸினஸ் கருத்தரங்குகளில் பேசுபவர் என பல தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிரகாஷ் ஐயரை பூனேவில் இருக்கும் கிம்பர்ளி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து நிர்வாகம், எழுத்து, பேச்சு என பல துறை விஷயங்களை பேசினோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து...
உங்களது ஆரம்பகாலம் பற்றி?
அப்பா அம்மா கேரளாவில் இருந்தனர். ஆனால் நாங்கள் தமிழும் பேசுவோம், மலையாளமும் பேசுவோம். ஜெய்பூர், டெல்லி, மும்பை என பல இடங்களில் ஆரம்பத்தில் இருந்தோம். பெரும்பாலான நாட்கள் மும்பையில்தான் இருந்தோம். மும்பையில் பி.எஸ்.சி. புள்ளியியல் படித்தேன் அதன் பிறகு ஐ.ஐ.எம். ஆமதாபாத்தில் நிர்வாகம் படித்து ஹிந்துஸ்தான் யூனீலிவர் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் டிரெனியாக சேர்ந்தேன்.
பெரும்பாலான சி.இ.ஓ.களின் வாழ்க்கையை எடுத்தால், ஐ.ஐ.டி.யில் இன்ஜினீயரிங், ஐ.ஐ.எம்-ல் நிர்வாகம் படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இன்ஜினீயரிங் முடித்து உங்களுடன் படித்தவர்களை எப்படி சமாளித்தீர்கள்?
நான் படிக்கும்போது 40 சதவீதம் இன்ஜினீயரிங் அல்லாத மாணவர்களாக இருந்தோம். இப்போது எங்கள் நிறுவனத்துக்கு ஆட்களை எடுப்பதற்காக ஐ.ஐ.எம். சென்றால் 97 சதவீதம் மாணவர்கள் இன்ஜினீயரிங் படித்தவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை இப்போது நான் ஐ.ஐ.எம். நுழைவுத் தேர்வு எழுதினால் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
புள்ளியியல் படித்தபிறகு நிர்வாகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
எனக்கு மார்க்கெட்டிங், விளம்பரம் ஆகியவற்றில் ஆர்வம் இருந்தது. எண்களை வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும், பெரிய நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் ஐ.ஐ.எம். படித்தேன்.
மேனேஜ்மெண்ட் டிரெனியாக சேர்ந்தாலும் சேல்ஸ்மேனாக சில காலம் வேலை செய்ததாக புத்தகத்தில் எழுதி இருக்கிறீர்கள். ஐ.ஐ.எம்-ல் படித்தும் ஏன் இந்த சேல்ஸ் வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள்?
அப்படியெல்லாம் கிடையாது. மேலும் 8 வாரங்களுக்கு மட்டும்தான் அந்த சேல்ஸ்மேன் வேலை என்பது எங்களுக்கு முன்பே தெரியும். வாடிக்கையாளர்கள் யார், எங்கு, எதனால் விற்பனை நடக்கிறது என்பதை கற்றுக்கொள்ள அனுப்பினார்கள். மேலும் அப்போது சிறிய வயது என்பதால் ஒரு சுற்றுலா போல நிறைய இடங்களுக்கு பயணித்தேன்.
ஹிந்துஸ்தான் யூனிலீவரில் சேர்ந்தவுடன் முதலில் தமிழ்நாட்டுக்குத்தான் வந்தேன். அப்போதுதான் முதல்தடவையாக தமிழ்நாட்டுக்கு வந்தேன். தமிழ் வாசிக்க, பேச கற்றுக்கொண்டேன். தமிழ் (உள்ளூர் மொழியை) கற்றுக்கொள்ளாவிட்டால் எந்த கடையில் நம் பொருள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாது. இதெல்லாம் அந்த வேலையால்தான்.
நிறைய இடங்களில் வேலை செய்திருப்பதால் உங்களுக்கு எந்தெந்த மொழிகள் தெரியும்?
பெங்காலி, தமிழ், மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துக்கு பிறகு துபாயில் al-futtaim நிறுவனத்தில் சேர்ந்தீர்கள்? இந்தியாவில் சேல்ஸில் இருப்பதற்கும், அங்கு சேல்ஸில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?
இந்தியாவில் மக்கள் தொகை, கடை அளவு எல்லாமே பெரியதாக இருக்கும். ஆனால் அங்கு சிறிதாக இருக்கும். அதனால், இந்தியாவில் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் அமைப்பது கொஞ்சம் கஷ்டம். அனைத்து கடைகளுக்கும் பொருட்களை கொண்டு சேர்ப்பது கொஞ்சம் சவால்தான். ஆனால் அங்கு கடைகளின் எண்ணிக்கையும் குறைவு. அதே சமயத்தில் இந்தியாவில் மக்களின் வாங்கும் சக்தி குறைவு. துபாயில் கொஞ்சம் விலை அதிகம் இருக்கும் பொருட்களை கூட விற்கலாம்.
அதன் பிறகு எப்போது இந்தியாவுக்கு வந்தீர்கள்?
என்னுடைய முன்னாள் பாஸ் பெப்ஸி நிறுவனத்தில் சி.இ.ஓ.வாக சேர்ந்தார். பெப்சி கிரிக்கெட்டுக்கு நிறைய ஸ்பான்சர் செய்வார்கள். அப்போது நடந்த ஏஎதோ ஒரு விழாவில் அவரை சந்தித்தேன். ஏன் இங்கு இருக்கிறாய். நீயும் வந்து ’கோலா’ போட்டியில் கலந்துகொள் என்று கூப்பிட்டார். அதன் பிறகு பெப்சி நிறுவனத்தில் சேர்வதற்காக இந்தியாவுக்கு வந்தேன். மேற்கு வங்கத்துக்கு துணைத் தலைவராக இருந்தேன்.
நீங்கள் கொல்கத்தாவில் பெப்சி நிறுவனத்தில் இருந்த சமயத்தில் கங்குலி பிராண்ட் தூதராக இருந்தார். ஆனால் பிரபலமான ஒருவரை பிராண்ட் தூதராக நியமிக்கக் கூடாது என்ற கருத்தும் நிலவுகிறதே?
பிரபலமான நபரை வைத்து பிராண்டை பிரபலப்படுத்தும்போது சில ரிஸ்க்குகள் இருக்கும். ரிஸ்க் இருக்கிறது என்பதற்காக செய்ய மாட்டேன் என்றால் நாம் எதையுமே செய்ய மாட்டோம். அதற்காக, தெரிந்தே தவறான ஒரு பிரபலத்தை நம்முடைய பிராண்ட் தூதராக நியமிக்க கூடாது. அவருடைய இமேஜினால் நம்முடைய பிராண்டும் அடிவாங்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு பிரபலத்தை வைத்து விளம்பரம் எடுத்து அதன் பிறகு அவர் சர்ச்சையில் சிக்கி கொண்டால் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று அர்த்தம்.
25 வருடங்களுக்கும் மேலாக கார்ப்பரேட் வாழ்க்கையில் நிறைய நிறுவனங்கள் மாறி இருக்கிறீர்கள். ஒரு வேலையில் எவ்வளவு நாள் இருக்கலாம். எப்போது வெளியேறாம் என்பது குறித்து..?
இதில் சரி, தவறு என்று எதுவுமே கிடையாது. ஒரே இடத்தில் நீண்ட நாளைக்கு இருக்கலாம் தவறு இல்லை. ஒரே இடத்தில் இருக்கும்போது பெரிதாக தோற்கும் வாய்ப்பு இருக்காது. சவால் இல்லாத காரணத்தால் அடுத்த கட்டத்துக்கு நகரும் வாய்ப்பும் உங்களுக்கு இருக்காது. ஒரே நிறுவனத்தில் வேலை செய்யலாமா கூடாதா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் ஒரே நிறுவனத்தில் இருந்தாலும் புதிய புதிய வேலைகள், சவால்கள், புதிய நாடுகள் இருக்கும்பட்சத்தில் வேலை மாறுவது அவசியம் இல்லை.
நெடுஞ்சாலையில் மட்டுமே வண்டி ஒட்டுவது பெரிய விஷயம் இல்லை. சிறிய சாலையில் ஓட்ட வேண்டும், கரடு முரடான பாதையில் போக வேண்டும். கொஞ்சம் சிறிய வண்டியில் போக வேண்டும், கொஞ்சம் பெரிய வண்டியில் போக வேண்டும். ஏ.சி. இல்லை என்றாலும் போக வேண்டும்.
அதே சமயத்தில் இது சிறிய வண்டி, அதனால் பெரிய வண்டிக்கு உடனடியாக போக வேண்டும் என்று மாறுவது, என் பாஸ் எனக்கு பிடிக்கவில்லை என்று மாறுவது, மேனேஜரிலிருந்து சீனியர் மேனேஜர், 1000 ரூபாய் அதிகம் என்று மாறுவது நல்லதல்ல. அப்படி மாற ஆரம்பித்தால் எதிலேயும் சந்தோஷம் இருக்காது.
உங்களுடைய huggies, kotex ஆகிய பிராண்ட்கள் சந்தையில் பிரபலமாக இருந்தாலும் நிறுவனத்தின் பெயரை எங்குமே காணவில்லையே. நாளை புதிய பிராண்டை அறிமுகப்படுத்தும் சமயத்தில் நிறுவனத்தின் பெயர் இருக்கும் பட்சத்தில் எளிதாக சந்தையில் நுழையலாம். இல்லையென்றால் சந்தைப்படுத்த அதிக செலவாகுமே?
இரண்டு விதமாக இதற்கு பதில் சொல்லலாம்.
கிம்பர்ளி கிளார்க் மற்றும் ஹிந்துஸ்தான் லீவர் ஆகிய இரண்டு நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்துதான் கிம்பர்ளி கிளார்க் லீவர். மேலும் ஹெச்.யூ.எல். விற்பனை நெட்வொர்க்கில்தான் எங்களுடைய பொருட்கள் சந்தைப்படுத்தப் படுகின்றன. அதனால் நிறுவனத்தின் பெயர் தேவை இல்லை.
இரண்டாவது வாடிக்கையாளருக்கு பிராண்ட் முக்கியமே தவிர நிறுவனம் கிடையாது. டெட்டால், பாண்டீன், டவ் தெரியுமா? தெரியும். ஆனால் நிறுவனத்தின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும். மக்களுக்கு பிராண்ட்தான் முக்கியம். நிறுவனம் முக்கியமல்ல.
சரிதான். ஆனால் அதே மக்களிடம் ஹெச்.யூ.எல். தெரியுமா, பி அண்ட் ஜி தெரியுமா என்று கேட்டால் தெரியும். ஆனால் கிம்பர்ளி கிளாக் லீவர் தெரியுமா என்றால் தெரியாதே?
அதற்கான நடவடிக்கையில்தான் இப்போது ஈடுபட்டு வருகிறோம். இன்னும் சில காலத்தில் தெரிய ஆரம்பிக்கும்.
நீங்கள் உங்களிடம் இருக்கும் சில பிராண்ட்களை வைத்தே அதிக வருமானம் ஈட்டுகிறீர்கள் எப்படி.
பல நிறுவனங்கள் குறிப்பிட்ட சில பிராண்ட்களை வைத்து மட்டுமே பெரிய சந்தையை பிடித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஆப்பிள் நிறுவனம். மேலும் கண்ணில் பட்ட அனைத்தையும் துரத்துவதை விட தெரிந்ததை சிலவற்றை மட்டும் துரத்துவது நல்லது. எனக்கு வீணை கொஞ்சம் வாசிக்கத் தெரியும், கொஞ்சம் பாடுவேன், தையல் கொஞ்சம் தெரியும். மொத்தத்தில் எல்லாவற்றிலும் அறைகுறை. குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் செல்லும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக கற்றுக்கொள்ளலாம். சிறப்பாக செய்யலாம்.
புத்தகம் எழுதும் எண்ணம் எப்படி வந்தது?
நீ இப்படி இருக்க வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று சொன்னால் வேலை நடக்காது. அதே சமயத்தில் கதையாக சொல்லும் பட்சத்தில் கவனமாக கேட்பார்கள். அதனால் வாழ்க்கை கதைகளை வைத்து புத்தகம் எழுத நினைத்தேன். அதற்காக 2008-ம் ஆண்டு ஒரு வலைப்பூ உருவாக்கி எழுதினேன்.
அதன்பிறகு முதல் புத்தகம் எழுதி நான்கு பதிப்பாளரிடம் கொடுத்தேன். ஒரு வாரத்திலே வேண்டாம் என்று பதில் வந்தது. அடுத்த வாரத்தில் இன்னொரு பதிப்பாளர் வேண்டாம் என்றார். மூன்றாவது பதிப்பாளர்தான் சரி என்றார்.
புத்தகத்துக்கான கதையை எங்கு எடுக்கிறீர்கள்?
நம் அனைவரிடத்திலுமே கதை இருக்கிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தெரியும். ஆந்திரா போக்குவரத்தில் நிறைய விபத்து நடந்துகொண்டிருந்தது. இதை குறைப்பதற்கு பலவிதமான யோசனைகள் வந்தது. அதிக பயிற்சி கொடுத்தார்கள், ஒன்றும் நடக்கவில்லை. ஊதிய உயர்வை நிறுத்தினார்கள், அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியாக வண்டி டிரைவர் குடும்ப புகைப்படத்தை டாஷ்போர்டில் கட்டாயம் வைக்க வேண்டும் என்ற உத்தரவை போட்டார்கள். அப்போது விபத்து குறைந்தது. ஆனால் இது சிறிய கதையாக செய்தித்தாளில் வந்தது. ஒரு செய்தியை இப்படித்தான் நிர்வாகத்துக்கு மாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
சுய முன்னேற்றப் புத்தகம் எழுதுவது எளிது என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் புத்தகம் எழுத வந்தீர்களா?
நான் புத்தகம் எழுதவேண்டும் என்று முடிவெடுத்து, இன்ஜினீயரிங் எழுதுவது கஷ்டம், அக்கவுண்ட்ஸ் எழுதுவது கஷ்டம். சுய முன்னேற்றம் எழுதுவது எளிது என்பதால் எழுதவர வில்லை. எனக்குத் தெரிந்த விஷயங்களை/கதைகளை பகிர்ந்து கொள்வதற்காகவே எழுத வந்தேன்.
நீங்கள் எழுதிய விஷயத்தை உங்களால் கடைபிடிக்காமல் போன சூழ்நிலை வந்திருக்கிறதா?
நான் கடவுள் அல்ல. சமயங்களில் அதுபோன்ற சூழ்நிலை வந்திருக்கிறது. ஆனால் எனக்குத் தெரியாமல் அது நடந்தது அல்ல.
இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஐந்து விஷயங்கள்?
முதலில் லட்சியம் தேவை. எளிதாக எதுவும் கிடைக்காது. கிரெடிட் கார்டு போல வாழ்க்கை கிடையாது. உழைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பலன் கிடைத்தால்தான் உழைப்பேன் என்று நினைக்கக் கூடாது. அடுத்து பி.ஹெச்.டி. Passion Hunger மற்றும் Discipline.
தொடர்புக்கு: karthikeyan.v@kslmedia.in
முக்கிய செய்திகள்
வணிகம்
18 mins ago
வணிகம்
6 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago