ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமாகும் கரோனா: எதிர்பார்ப்புடன் கார் விற்பனையாளர்கள்- மதுரையில் ஆன்லைன் புக்கிங் சூடு பிடிக்கிறது

By த.இளங்கோவன்

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு 50-வது நாளை நெருங்கி கொண்டிருக்கிறது. ஊரடங்கிற்கு பிறகான பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி குறித்த பல்வேறு பயமுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் கரோனாவினால் ஏற்படும் சமூக மாற்றம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கார் விற்பனையாளர்கள் முன்கூட்டியே தயாராகி வருகிறார்கள்.

தற்போதைய கணிப்புகளின்படி கரோனா நோயின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டாலும், இந்நோய் உலகை விட்டு அவ்வளவு சீக்கிரம் சென்றுவிடாது என்றும் அதனால் மக்கள் இந்நோய்க்கு ஏற்றவாறு தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்கிறார்கள்.

அரசின் சமீபத்திய அறிவிப்புகளின்படி ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகும் பொது போக்குவரத்தில் இனி பயணிகளுக்கு இடையே போதுமான இடைவெளி கட்டாயமாக்கப்படும் என்கிறது.

இதுதவிர தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்ற தகவல்களும் உலா வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் ஓரளவு வசதி படைத்தவர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதற்காக பேருந்துகளை தவிர்த்து அன்றாட பணிகளுக்கு கார்களில் செல்வதை விரும்ப தொடங்கியுள்ளனர் என்கின்றனர்.

கடந்த நிதி ஆண்டின் இறுதியில் பிஎஸ்4-லிருந்து பிஎஸ்-6 ரக வாகனங்களுக்கு மாறுவது மற்றும் மின்சார கார்களுக்கான எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களுக்காக பின்னடைவை சந்திருந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ஊரடங்கு காலத்திலும் ஆன்லைன் மூலம் முன்பதிவை செய்து வருகின்றன. ஊரடங்குக்கு பின்பு தேவை அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் காலதாமதத்தையும், விலையேற்றத்தையும் தவிர்ப்பதற்காக நுகர்வோர்களும் தொடர்ந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஆர்.கார்த்திகேயன் (இடது) , ஏ.முத்தழகன் (வலது)

மதுரையில் உள்ள சிமா டாடா கார் நிறுவனத்தின் முதுநிலை விற்பனை அதிகாரி ஏ.முத்தழகன் இதுதொடர்பாக கூறியது, “கரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளால் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

எனவே வாய்ப்புகளை பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்கும் விதமாக ஊரடங்கு காலத்திலும் நாங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் கார்களுக்கான முன்பதிவுகளை செய்து வருகிறோம்.

ஊரடங்கால் பெரும்பாலானோர் வீடுகளில் அதிக நேரம் இருக்கிறார்கள். இந்த அமைதியான சந்தர்ப்பத்தை அவர்கள் கார்கள் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் நோக்கில் அணுகி வருகிறோம்.

கார்கள் டெலிவரியில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்பதிவுக்கு ஏற்ப கார்களை நாங்கள் ஆர்டர் செய்து வருகிறோம். தவிர கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எங்கள் நிறுவனம் பெரிய அளவில் உறுதுணையாக இருந்ததால் டாடா நிறுவன கார்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

எங்கள் கடந்த கால சராசரி மாத விற்பனையை விட வரும் மாதங்களில் இருமடங்கு விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தயாராகி வருகிறோம். மேலும் எங்களிடம் இருந்த பிஎஸ்4 வாகனங்கள் அனைத்தும் ஏற்கனவே விற்பனையாகி விட்டதால் அதற்கான கால நீட்டிப்பும் எங்களுக்கு தேவையில்லை” என்றார்.

ஆனமலைஸ் டயொடா நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஆர்.கார்த்திகேயன் தெரிவித்ததாவது, “கண்டிப்பாக ஊரடங்குக்கு பிறகான எங்கள் வர்த்தகம் மேம்படவே செய்யும் என எங்களுக்கான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் கோவிட்-19 நோயை உடனடியாக முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

இதனால் உயர் நடுத்தர வர்க்கத்தினர் பொது போக்குவரத்து வாகனங்களை தவிர்த்து கார்களை பயன்படுத்துவது அதிகரிக்கும். வாடிக்கையாளர்களி்டமிருந்து எங்களுக்கு வரும் தற்போதைய விசாரணைகளும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. சுகாதார காரணங்களாலும் பழைய கார்களுக்கு பதிலாக புதிய கார்கள் வாங்குபவர்கள் அதிகரிப்பார்கள்.

ஊரடங்கு துவங்கியபோது நிறுவனங்களின் சம்பள பிடித்தம் தொடர்பான ஊகங்கள் பயமுறுத்தும் விதமாகவே இருந்தன. ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவில்லை எனத் தெரிகிறது. இவை அனைத்து துறைகளுக்குமே ஒரு சாதகமான விஷயம்.

மே மாதத்துடன் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்புள்ளதால் கார்கள் விற்பனையை பொறுத்தவரையில் வரும் மாதங்கள் நல்ல வியாபார முன்னேற்றம் இருக்கும்” என்றார்.

பிரபல வங்கி ஒன்றில் பணிபுரிந்து வரும் ரீகன் கூறியதாவது, ஊரடங்கு காலத்திலும் நாங்கள் தினசரி பணிக்கு வரவேண்டியது இருந்தது, பேருந்துகள் இயக்கப்படாததால் தினசரி இருசக்கர வாகனத்தில் 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து வரவேண்டி இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் காவல்துறையின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி வந்தது. முன்கூட்டியே கார் வாங்கியிருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பிறகு பேருந்தில் பயணம் செய்வதற்கு பதிலாக உடனடியாக கார் வாங்கும் முடிவில் இருக்கிறேன் என்கிறார்.

ஊரடங்குக்கு பின் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளை துவக்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம் முதல் நாளிலேயே 200 கார்களை தயாரித்து ஆட்டோமொபைல் சந்தையின் மறுமலர்ச்சியை அறிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களும் புதிய மாடல் கார்களுடன் சந்தையில் தயார் நிலையில் உள்ளன.

சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வதில்தான் தொழில்துறையின் வெற்றி அடங்கி இருக்கிறது. இத்துறையின் உற்சாகம் கரோனா அச்சத்தால் துவண்டுபோய் இருக்கும் பிற துறைகளுக்கும் ஊக்க சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்