இந்தியாவில் கரோனா வைரஸ் பெருமளவு பரவி வரும் நிலையில் அதற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பெரிய அளவில் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதுபற்றி பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பனிடம் பேசினோம். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால் கரோனாவுக்குப் பிறகு என்ன சூழல் ஏற்படும், தனிநபர்கள், நிறுவனங்கள், அரசுக்கு உள்ள நெருக்கடி, பல்வேறு துறை சார்ந்த பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசினார்.
அவர் கூறியதாவது:
''கரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வெவ்வேறு விதமான பாதிப்புகள், சூழல் ஏற்படக்கூடும். ஊழியர்களைப் பொறுத்தவரையில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது இனிவரும் காலங்களிலும் அதிகரிக்கும். இதனால் பெரிய அலுவலகம் தேவையில்லை. அதற்கான செலவுகள் மிச்சப்படும். அதுபோலவே வீட்டில் இருந்தே வேலை வாங்கும் பழக்கம் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது..
» ஊரடங்கு; மக்கள் மருந்தகங்களை கண்டறிய உதவும் மொபைல் ஆப்: 325000 பேர் பதிவிறக்கம் செய்து சாதனை
சம்பள உயர்வு, போனஸ் போன்றவை ஊழியர்ளுக்கு இந்த ஆண்டு இருக்காது. கிடைக்கும் சம்பளத்தை வைத்து வாழ வேண்டிய கட்டாயம் ஊழியர்களுக்கு ஏற்படும். பெரிய அளவில் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் பழக்கம் குறைந்துவிடும். அடுத்த சில மாதங்களுக்காவது இந்த நிலைமை நீடிக்கவே செய்யும். குறிப்பாக குறைந்த சம்பளம் பெறுவோர் ஆடம்பரச் செலவை முழுமையாகக் குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாமல் ஊழியர்கள் உடல்நல விஷயத்தில் அதிக கவனம் எடுப்பார்கள். இப்போதே யோகா, உடற்பயிற்சி செய்யும் பழக்கம் ஊழியர்களிடம் உருவாகி வருகிறது.
எந்தெந்த துறை எப்படி இருக்கும்?
தொழில்களைப் பொறுத்தவரையில், ஐடி உலகளாவிய நிலையைப் பொறுத்து அதன் போக்கு இருக்கும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலைமை மோசமாக இருப்பதால் அதன் பாதிப்பு இங்கும் இருக்கும். குறிப்பாக சிறிய ஐடி நிறுவனங்கள் அதிகமான பாதிப்பைச் சந்திக்கக்கூடும்.
ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரையில் தற்காலிக வளர்ச்சி ஏற்படலாம். குறிப்பாக இருசக்கர வாகனங்கள், சிறிய வகை கார்கள் அதிகமாக விற்பனையாகலாம். பொதுப் போக்குவரத்து சரியான முறையில் இல்லாததாலும், கரோனா பரவும் பீதி இருப்பதாலும் தனிப்பட்ட வாகனங்களில் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவர். இதனால் கரோனாவுக்குப் பிறகு இதுபோன்ற வாகனங்கள் விற்பனை அதிகரிக்கலாம்.
இண்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும். ஆன்லைனில் கோர்ஸ் படிப்பது அதிகரிப்பதால் அதற்கு ஏற்றவகையில் மொபைல் போன், கேட்ஜட்டுகள் விற்பனையும் அதிகரிக்கலாம். இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரிக்கலாம்.
சுகாதாரம், உடல்நலம் சார்ந்த மருந்துகள் விற்பனை, விநியோகம், சேவைத் துறைகள் சார்ந்த வர்த்தகம் அதிகரிக்கும். அதுபோலவே பேக்கிங் முறையில் பல மாற்றங்கள் வரும். உடல்நலம் சார்ந்த எண்ணம் அதிகரிப்பதால் பொருட்களை பேக்கிங் செய்வதில் முறைகள் மாறலாம். அது சார்ந்து புதிய தொழில்கள் உருவாகக்கூடும்.
மக்களிடம் கூடுதலாகப் பணம் இருந்தால் கடைசியாக முதலீடு செய்யும் துறை ரியல் எஸ்டேட் என்பதால் தற்போது அதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் குறையும். வீடுகள், நிலங்கள் விற்பனை குறையும். ரியல் எஸ்டேட் வர்த்தகம் 20 சதவீதம் வரையும் குறையும் என எச்டிஎப்சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார். எனவே நிலம், வீடு வாங்க விருப்பப்படுபவர்கள் காத்திருந்தால் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் பின்னடைவைச் சந்திக்கலாம். வங்கிகள் கடனை வசூலிப்பதில் சிக்கல் ஏற்படலாம். கொடுத்த கடனை வசூலிப்பது கடினமாக மாறும். அதுபோலவே கலை சார்ந்த பொருட்கள் விற்பனை இருக்காது. அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே மக்கள் வாங்கும் நிலை இருக்கும் என்பதால் இதில் மக்கள் ஆர்வம் காட்டுவது கடினம்.
பி 6 வாகனத் தயாரிப்பு என்பது சற்று தள்ளிப் போகலாம். இதனால் ஆட்டோமொபைல் துறைக்கு இருந்த நெருக்கடி சற்று குறையலாம். அவர்கள் ஏற்கெனவே தயாரிக்கும் அல்லது தயாரித்து வரும் வாகனங்களையே விற்பனை செய்யும் சூழல் இருக்கும்.
செய்தித்தாள், பத்திரிகைகள் வாங்கிப் படிக்கும் பழக்கம் குறையலாம். இதற்கு மாற்றாக ஆன்லைன் பத்திரிகைகள் பெருகலாம். ஆன்லைன் மூலம் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் போக்கு அதிகரிக்கக்கூடும்.
இதுபோலவே சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும். பெரிய அளவில் அவர்களுக்கு நிதிச் சிக்கல் ஏற்படும் என்பதால் வங்கிகள் கடன் வழங்கும் தேவை ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சிக்கலில் இருந்து வெளியே வர வங்கிகள் கடன் அளிக்க வேண்டும்.
கல்வித்துறையிலும் சிக்கல் ஏற்படும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைத்துப் படிக்க வைப்பது பெரிய சவாலாக இருக்கும். இதனால் மாற்று ஏற்பாடுகள் உருவாகலாம்.
வட்டி விகிதம் குறைந்துள்ளது. ஆனால் இது தற்காலிகமானதுதான். பணவீக்கம் அதிகரிக்கும்போது வட்டி விகிதமும் அதிகரிக்கும். வர்த்தகத்தில் விநியோகச் சங்கலி தற்போது அறுபட்டுள்ளது. அதனை மீண்டும் உருவாக்குவதில் சில சிக்கல்கள் இருக்கலாம்.
சீனா மீதான வருத்தம்; தொழில் வாய்ப்பு
உலக அளவிலான வர்த்தகத்திலும் பெரிய மாற்றங்கள் வரலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் பல சிக்கல்களும், வாய்ப்புகளும் வரலாம். சீனா மீது உலகம் முழுவதும் ஒரு வருத்தம் உள்ளது. இது எந்த அளவிற்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாலும் அதன் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் இருக்கும். சீனா காரணமாக உற்பத்தித் துறையில் இந்தியாவுக்கு சில வாய்ப்புகள் உருவாகலாம். அதனை எந்தஅளவிற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்ற கேள்வியும் உள்ளது. எப்படியும் உற்பத்தித் துறையைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள அளவில் அல்லது கொஞ்சம் கூடுதலாகவே இந்தியாவுக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
புதிய சூழல்கள் என்ன?
வேலைவாய்ப்பு குறையக்கூடும். விமானம், சொகுசுப் பேருந்து போன்றவற்றின் போக்குவரத்து குறைவதால் அந்தத் தொழில்கள் பாதிக்கப்படலாம்.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர் இந்தியா திரும்புவதால் அது மேலும் சுமையாக அமையும். மருத்துவ இன்சூரன்ஸ் அதிகமாக வளரும். இது இன்சூரன்ஸ் துறைக்கு கூடுதல் பலமாக அமையும்.
2019- 20 நிதியாண்டில் பொருளாதாரம் 5 சதவீதமாக இருந்தாலே பெரிய விஷயமாக இருக்கும். 2020- 21 நிதியாண்டைப் பொறுத்தவரையில் பொருளாதாரம் 1.5 முதல் 2 சதவீதமாக இருக்கலாம் என்பதே பலரின் கணிப்பாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு அரசு செய்யும் முதலீடு மிக முக்கியம். தற்போது கரோனா சூழலில் அதற்காக அரசு அதிகம் செலவு செய்வதால் மற்ற துறைகளில் முதலீடுகள் செய்வது குறையும். இதனால் பொருளாதாரச் சுழற்சி பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய கண்ணோட்டம் வரும் காலங்களில் மாறக்கூடும். அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு என்பது தொழில் நிறுவனங்களின் பொறுப்பாக இனி வரும் காலங்களில் அமையலாம்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
அரசு மக்களுக்குப் பணம் கொடுப்பதை விடவும், அரசே தொழில் வாய்ப்பு கொடுக்கலாம். நதிநீர் இணைப்பு போன்ற வேலைகளை அரசே செய்யலாம். இதற்குப் பெரிய அளவில் மனித உழைப்பு தேவைப்படுகிறது. இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பு வழங்க முடியும்.
இதன் மூலம் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி அவர்களுக்கு சம்பளம் வழங்குவதன் மூலம் அவர்களுக்குப் பணம் கிடைக்க வாய்ப்பாக அமையும். இதன் மூலம் அவர்களிடம் வாங்கும் சக்தி மீண்டும் ஏற்பட வழி வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது பெரிய அளவில் பொருளாதார சுழற்சி ஏற்படும்''.
இவ்வாறு சோம.வள்ளியப்பன் கூறினார்.
தொடர்புக்கு: janarthanaperumal.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago