2022-ம் அண்டில் சுற்றுலாத் துறை ரூ.3.5 லட்சம் கோடி வருவாய் ஈட்ட வேண்டும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. 2022-ல் அதன் வருவாயை ரூ.3.5 லட்சம் கோடியாக (50 பில்லியன் டாலர்) அதிகரிப்பதை சுற்றுலாத் துறை இலக்காக கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

சுற்றுலா தொடர்பான சிஐஐயின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், ‘சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். அந்த வகையில் சுற்றுலாத் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பங்களிப்பை செலுத்தும் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கடந்த 2018-ல் சுற்றுலா மூலம் 28.6 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. அதை 2022-ல் 50 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பதை சுற்றுலாத் துறை இலக்காக கொள்ள வேண்டும்’ என்றார்.

வெளிநாட்டுப் பயணிகளின் வருகை 1.2 சதவீதமாகவே உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘சுற்றுலாத் துறை முழுக்க தனியார் வசம் உள்ளது.

அந்நிறுவனங்கள்தான் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை 3.5 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் 2022-ல் 50 பில்லியன் டாலர் வருவாயை எட்ட முடியும்’ என்றார்.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு, தங்கும் விடுதிகளுக்கான ஜிஎஸ்டியை குறைத்துள்ளது என்றார். சுற்றுலா துறை மூலம் 4.2 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இது இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 8.1 சதவீதமாகும். வெளிநாட்டுப் பயணிகளின் வருகை 1.2%-ஆக உள்ளது. அதை 3.5%-ஆக உயர்த்தினால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE