லாட்டரி டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி: ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

By பிடிஐ

நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசின் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு ஒரே சீராக 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டது.

2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து லாட்டரி டிக்கெட் மீதான வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 38-வது கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், பிரதிநிதிகள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. தற்போது இரட்டை ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமலில் இருக்கிறது.

அதாவது, மாநிலங்களுக்குள் விற்பனை செய்யப்படும் லாட்டரிகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், மாநிலத்துக்கு வெளியே விற்கப்படும் லாட்டரிகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. இதை ஒரே சீராக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல மாநிலங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 28 சதவீதம் வரிக்கு ஆதரவாக 21 மாநிலங்களும், எதிராக 7 மாநிலங்களும் வாக்களித்தன. இதையடுத்து, அதிகமான வாக்குகள் கிடைத்ததையடுத்து, தனியார் மற்றும் அரசின் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் வரி நாடு முழுவதும் சீராக விதிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், லாட்டரி தொழில் செய்பவோர் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும். பரிசுத் தொகைக்கு வரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைப் பரிசீலிக்கவில்லை.

மேலும், 2017-18 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டிஆர் 9, 9சி படிவம் தாக்கல் செய்யும் காலக்கெடு 2020 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டிஆர்-1 தாக்கல் செய்யாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தளர்த்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE