தெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார வளர்ச்சியில்  வேகம்: உலக வங்கி அறிக்கை

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்

ற்காசியாவில் 2019-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், வங்கதேசம், நேபாளம் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கிறது என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேசமயம், உலகப் பொருளாதார மந்தம் தெற்காசியாவிலும் எதிரொலிப்பதால், நடப்பு நிதியாண்டில் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனத் தெரிவித்துள்ளது

உலக வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

" உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக, 2019-ம் ஆண்டில் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதம் குறைந்து 5.9 சதவீதமாகச் சரியும். தெற்காசியாவின் இறக்குமதியும் குறைந்துள்ளது. பாகிஸ்தான், இலங்கையின் இறக்குமதி 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இந்தியாவுடன் ஒப்பிடும்போது, நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கிறது.
பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் 2.4 சதவீதமாகக் குறையும். அந்நாட்டின் நிதிச்சூழல் இன்னும் மோசமாகி, உள்நாட்டுத் தேவை மோசமாக சுருங்கும்

இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டுத் தேவை குறைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 7.3 சதவீதம் இருந்த தனியார் நுகர்வு இப்போது 3.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. உற்பத்தி துறையின் வளர்ச்சியும் 2-வது காலாண்டில் ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்து 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6 சதவீதமாகக் குறையும். ஆனால் அடுத்த ஆண்டில் படிப்படியாக உயர்ந்து 2021-ம் ஆண்டில் 6.9 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து 7.2 சதவீதமாகவும் அதிகரிக்கும்.
வங்கதேசத்தைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டில் 8.1 சதவீதம் பொருளாதார வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது.

வரும் 2020-ம் ஆண்டில் வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும் அதிகரிக்கக் கூடும். வங்கதேசத்தின் முக்கியமான தொழிலாக விளங்கும் ஆயத்த ஆடை தயாரிப்பு சீனா, அமெரிக்கா வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தைப் பொறுத்தவரை நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாகவும் இருக்கும். நேபாளத்தின் வலிமையான சேவைத்துறை, கட்டுமானம், அடிப்படை கட்டமைப்புக்கு செலவிடுதல் ஆகியவற்றால் சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானில் வேளாண்துறை ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. அங்கு தேர்தலுக்கு பின், 2020-ம் ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டில் 3.5 சதவீதாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல பூடான் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7.4 சதவீதமாகவும், மாலத்தீவுகள் வளர்ச்சி நடப்பு ஆண்டில் 5.2 சதவீதமகாவும் இருக்கும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 2.9 சதவீதமாக இருக்கும். முதலீடு வருகை, ஏற்றுமதி குறைவு, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவற்றால் வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டது. ஆனால், 2020-ம் ஆண்டில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டில் 3.7 சதவீதமாகவும் இருக்கும்.

இவ்வாறு உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக வங்கியின் தெற்கு ஆசிய மண்டலத்தின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் கூறுகையில், " தொழில்துறை உற்பத்திக் குறைவு, இறக்குமதி குறைவு, நிதிச்சந்தையில் ஏற்படும் பதற்றமான சூழல் ஆகியவை தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சிக் குறைவை ஏற்படுத்துகின்றன. உலகளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலின் தாக்கம் தெற்காசியாவிலும் எதிரொலிக்கிறது. தனியாரின் நுகர்வை அதிகரித்தல், முதலீட்டை வரவழைத்தல் மூலம் வளர்ச்சியை பெருக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்


பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE