நிறுவன வரி குறைப்பால் வெளிநாட்டு முதலீடுகள் பெருகும்: சக்திகாந்த தாஸ் நம்பிக்கை

மும்பை

நிறுவன வரி குறைப்பால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாகும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதார மந்த நிலையைச் சரிசெய்ய தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்தார்.

இந்த நடவடிக்கையால், சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி 1000 நிறுவனங்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி மிச்சமாகும். இந்த ஆயிரம் நிறுவனங்கள் 80-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்தவை. இவை ஒட்டுமொத்த பங்குச் சந்தை மதிப்பில் 70 சதவீத பங்கு வகிக்கின்றன.

வரியை 22% ஆக குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து நிறுவன வரியில் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில்தான் வரி குறைவாக உள்ளது.

இந்தநிலையில் வரிகுறைப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:
நிறுவனங்களுக்கான நிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளது மிகச்சிறந்த நடவடிக்கை. பொருளாதார மறுசீரமைப்புக்கு இது பேருதுவியாக விளங்கும். பல தெற்காசிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் வரி குறைவாக உள்ளது.

இதன் மூலம் வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ள இந்தியா, ஆசிய நாடுகளில் பெரும் போட்டியாளராக உருவெடுக்க முடியும். உலக அளவிலான முதலீட்டாளர்களை பொறுத்தவரையில் இந்தியா அவர்களை வெகுவாக ஈர்க்கும்.

நிறுவன வரி குறைப்பின் மூலம் வெளிநாட்டு பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் என நம்புகிறோம். அதிகஅளவில் இந்தியாவில் முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE