ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் குறைந்தது

புதுடெல்லி,

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழாகக் குறைந்துள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.98 ஆயிரத்து 202 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளது. அதே கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ரூ.1.02 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய ரூ.93 ஆயிரத்து 960 கோடியாக இருந்தது. அதை ஒப்பிடும்போது, கடந்த மாத வரி வசூல் 4.5 சதவீதம் அதிகம். இந்த ஆண்டில் 2-வது முறையாக ஒரு லட்சம் கோடிக்கும் கீழாக ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்துள்ளது. இதற்கு முன்கடந்த ஜூன் மாதம் ரூ.99 ஆயிரத்து 939 கோடியாக ஜிஎஸ்டி வரி வசூல் இருந்தது.

இதன்படி, மத்திய ஜிஎஸ்டி வரி வசூலாக ரூ.17ஆயிரத்து 733 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரி வசூலாக ரூ.24 ஆயிரத்து 239 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வசூலாக ரூ.24 ஆயிரத்து 818 கோடியும் வசூலாகியுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் உற்பத்தி, விற்பனை, வேகமாக நுகரும் பொருட்கள் உற்பத்தி விற்பனை, தொழில்துறை உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்டவை மந்தமான சூழலைச் சந்தித்து வருகின்றன. அவ்வாறு இருந்தபோதிலும்கூட ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூலை ஜிஎஸ்டி வரி எட்டி வந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் எதிரொலியாக ஜிஎஸ்டி வரி வசூலும் குறைந்துள்ளது.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE