பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டதால் நாள்தோறும் கூடுதலாக ரூ.4 கோடி இழப்பு: ஏர் இந்தியா தவிப்பு

By செய்திப்பிரிவு


புதுடெல்லி
கடும் நிதி நெருக்கடியால் தவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டதால் கூடுதலாக நாளொன்றுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்தே பாகிஸ்தான் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக, போக்குவரத்து உறவுகளைத் துண்டித்துக்கொண்டது. தூதரக அதிகாரிகளையும் வாபஸ் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தையும் அந்நாடு நிறுத்தியுள்ளது.
மேலும் இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் குறிப்பிட்ட வான்வழி தடங்கள் வழியாக பறக்கவும் தடை விதித்துள்ளது. இதனால் இந்திய விமானங்கள் பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுச்செல்லும் சூழல் உள்ளது. இதனால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு இதனால் நாளொன்றுக்கு 4 கோடி ரூபாய் கூடுதலாக இழப்பு ஏற்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஸ்வானி லோகானி கூறியதாவது:
‘‘ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டுள்ளதால் மேலை நாடுகளுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் சுற்றிச்செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் கூடுதல் எரிபொருள் தேவை ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு கூடுதலாக 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது’’எனக் கூறினார்.
விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது.
கடந்த 200 நாட்களாக எரிபொருள் அந்நிறுவனம் செலுத்தவில்லை. மொத்தம் 4,500 கோடி ரூபாய் தொகையை செலுத்தவில்லை. அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்துக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE