இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி

மும்பை

கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.

இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. முதலீடுகள் குறைந்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக 22 காசுகள் சரிந்து 72.03 ரூபாயாக உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய ஒப்பந்தங்களின்படி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கலில் தவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE