இது ஸ்மார்ட்போன்களின் காலம். அவற்றின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப சந்தையில் பல்வேறு செயலிகளும் (ஆப்) உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செயலிதான் ‘ட்ரூ காலர்’. அதாவது, நம்முடைய மொபைலில் பதிவு செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது, யார் அழைக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் செயலிதான் ட்ரூ காலர். சமீபத்தில் ‘ட்ரூ டயலர்’ மற்றும் ‘ட்ரூ மெசஞ்சர்’ என்ற 2 புதிய செயலிகளையும் ‘ட்ரூ காலர்’ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக இருப்பவர் காரி கிருஷ்ணமூர்த்தி. ஊட்டியில் பிறந்த இவர், கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பிபிஏ முடித்தவர். சில காலம் விளம்பர ஏஜென்சியில் பணிபுரிந்த பிறகு டெலிகாம் துறையில் நுழைந்தார். ஏர்டெல், பிபிஎல், ஏர்செல் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். 2013-ம் ஆண்டு ‘ ட்ரூ காலர்’ நிறுவனத்தில் இணைந்தார். கடந்த வாரம் சென்னை வந்திருந்த காரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தபோது, அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து...
டெலிகாம் துறையில் இருந்த உங்களுக்கு புதிய நிறுவனத்தில் சேர வாய்ப்பு எப்படி கிடைத்தது?
நல்ல வேலையில் இருந்தேன். போதுமான சம்பளம் வந்துகொண் டிருந்தது. ஆனாலும் ஏதோ திருப்தியில்லாத நிலை இருந்துகொண்டே இருந்தது. ஒருநாள் நண்பருடன் ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ‘ட்ரூ காலர்’ ஆப் இருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்றவுடன் டவுன் லோட் செய்யச் சொன் னார். அப்போதுதான் அதன் செயல்பாடு புரிந்தது. அதன்பிறகு வேலைக்கு சென்று விட்டேன்.
ஒருமுறை ‘ட்ரூ காலர்’ நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான நாமி ஜாரிங் லாம் என்பவருக்கு ‘லிங்க் டு இன்’ மூலம் ஒரு மெயில் அனுப்பினேன். ‘உங்கள் சேவை நன்றாக உள்ளது. வளர்ந்து வரும் இந்திய சந்தையில் நுழைய என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்’ என்று மெயிலில் கேட்டிருந்தேன். பதில் வரும் என்று நினைத்தே பார்க்கவில்லை. ஆனால், 12 நிமிடத்துக்குள் பதில் வந்தது. ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களால் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டிருந்தார்.
அதன்பிறகு 2 மாதம் தொடர்ந்து பேச ஆரம்பித்தோம். ‘இந்தியாவில் எங்கள் சேவையைத் தொடங்க முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் பொறுப்பு ஏற்கிறீர்களா?’ என்று கேட்டார். நம்பிக்கை யுடன் சேர்ந்துவிட்டேன்.
டெலிகாம் துறையில் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், மிகக் குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்ட சிறிய நிறுவனத்தில் சேர எப்படி தைரியம் வந்தது? ஏதேனும் ‘பிளான் பி’ வைத்திருந்தீர்களா?
நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதனால், அப்போது வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைவிட 60 சதவீதம் குறைவான சம்பளத்துக்குதான் சேர்ந்தேன். இதற்கு காரணம் ‘ட்ரூ காலர்’ நிறுவனர்கள், என்னை ஒருமுறைகூட நேரில் பார்க்காமலேயே இந்தியாவுக்கு தலைமை ஏற்கிறீர்களா என்று கேட்டதுதான். என் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வமும்தான் புதிய வேலையில் என்னை சேர்த்துவிட்டன. இந்தியாவில் பிரிவு ஆரம்பித்து 2 மாதங்களுக்கு பிறகு தான் நிறுவனர்களை சந்தித்தேன்.
‘பிளான் பி’ பற்றி கேட்டீர்கள். வாழ்க்கையில் ‘பிளான் பி’ எப்போதும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ‘பிளான் ஏ’ சரியில்லை என்று அர்த்தம்.
ட்ரூ காலருக்கான தகவல்கள் எங்கிருந்து எடுக்கிறீர்கள்?
அனைத்துமே சட்டப்பூர்வமான வழி முறைகளில் இருந்துதான் எடுக்கிறோம். செயலியை பயன்படுத்துபவர்கள் கொடுக்கும் தகவல்கள்தான் அதிகம். ஒரு நாளைக்கு 1.5 லட்சம் இந்தியர்கள் புதிதாக எங்களிடம் இணைகின்றனர். இதைத்தான் கிரவுட் சோர்ஸ் என்போம். செல்போன் நிறுவனங்கள் அல்லது மற்ற நிறுவனங்களிடம் இருந்து நாங்கள் தகவல்களை எடுப்பதில்லை. யார் அழைக்கிறார்கள் என்னும் உரிமையை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதுதான் எங்களது முக்கியமான பணி.
என் நம்பரை யாராவது ஒருவர் ட்ரூ காலரில் இணைத்துவிட்டால் அன்பிறகு என்னுடைய ரகசியத்தை பாதுகாக்கவே முடியாதா?
உங்களது நம்பர் எங்களிடம் இருக் கிறதே தவிர, உங்களைப் பற்றிய மற்ற தகவல்கள் எங்களிடம் இருக்காது. ட்ரு காலரில் உங்கள் எண் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் எங்களுடைய இணையதளத்தில் சென்று அதை நீக்கிவிடலாம்.
ட்ரூ காலர் செயலியில், பெயரை டைப் செய்தாலே சம்பந்தப்பட்டவரின் எண் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு இருக்கிறதே?
பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி இருக்கிறது. அவர்களுக்குகூட உடனடியாக கிடைக் காது. யாராவது ஒருவர் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு நீங்கள் சம்ம தித்தால் மட்டுமே முடியும். நீங்கள் அனுமதி கொடுக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் எண் அடுத்தவருக்கு கிடைக்கும்.
உங்களின் பிஸினஸ் மாடல் என்ன? எப்படி வருமானம் ஈட்டுகிறீர்கள்?
இப்போதைக்கு பிரீமியம் வாடிக்கை யாளர்கள் செலுத்தும் தொகை மட்டும்தான். அதிக நபர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் முக்கிய திட்டம். வாடிக்கையாளர்களுக்கு எந்த சுமையும் கொடுக்காமல் வருமானம் ஈட்டும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம். சில மாதங்களுக்கு பிறகு அவற்றை நடை முறைப்படுத்த யோசித்து வருகிறோம். மேலும் சில திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
மெசேஜ்-க்கு பல செயலிகள் இருக்கும்போது ட்ரு மெசஞ்சர் எதற்கு?
ட்ரூ மெசஞ்சர் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாது. ட்ரூ காலர் போலவே எந்த எண்ணில் இருந்து மெசேஜ் வருகிறது. எது ஸ்பேம் என்று பிரிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ட்ரூ மெசஞ்சர். இப்போதைக்கு எஸ்எம்எஸ் பகிர்ந்துகொள்ளும் திட்டம் இல்லை. இன்னும் சில காலத்துக்கு பிறகு அதை பரிசீலிப்போம்.
இந்திய ராணுவம் உங்களுடைய செயலியை பயன்படுத்தக்கூடாது என்று கூறியதாக செய்திகள் வெளியானதே?
அது தவறான செய்தி. எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவல் களும் வரவில்லை.
அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?
‘ஸ்மார்ட் வாட்ச்’ சந்தை இப்போது சிறியதாக இருக்கலாம். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய வளர்ச்சி இருக்கும். கொரியாவுக்கு சென்றி ருந்தபோது சாம்சங் நிறுவனம் ‘ஸ்மார்ட் ஹோம்’ என்ற கான்செப்டை உருவாக்கி இருந்ததைப் பார்த்தேன். அடுத்தகட்ட வளர்ச்சி இதில் இருக்கலாம் என்று கணிக்கிறேன்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago