எப்போதும் இல்லாத வகையில் வருகிற ஜூலை மாதத்தில் முன்னணி கார் நிறுவனங்கள் பல தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளன. சிறிய ரக காம்பேக்ட் கார்கள் முதல் பிரிமீயம் எஸ்யூவி வரை ஏகப்பட்டவை அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ளன.
கார்கள் வாங்குவதற்கு ஏற்ற மாதம் என்று ஏதும் இல்லை. பணக்காரர்கள் எப்போது வேண்டுமானாலும் கார் வாங்குவார்கள். கார் வாங்க வேண்டும் என்று நினைக்கும் மேல் நடுத்தர வகுப்பினர், சம்பள தேதியில் தங்களுக்கு பிடித்தமான கார்களை வாங்கிவிடுவார்கள். இது அனேகமாக மாதத்தின் முதல் வாரத்தில் நடக்கும். கார் மீது ஆசை கொள்ளும் மற்றவர்கள் வங்கி கடன் கிடைக்கும் காலத்தில் வாங்குவார்கள்.
முன்னர், மாதத்துக்கு ஒன்றிரண்டு என்ற அடிப்படையில்தான் கார்கள் அறிமுகமாகின. பொருளாதார ஏற்ற இறக்கங்கள் தற்போதும் உள்ளன. இருந்தாலும், பல புதிய கார்கள் ஜூலை மாத பட்டாம்பூச்சிகளாய் சாலைகளில் பறக்கவுள்ளன.
ஜுலை மாதம் ஏன்?
பொதுவாக நிதியாண்டு தொடங்கியதுமே நிறுவனங்கள் தங்களுக்கான சந்தைத் திட்டங்களை வகுப்பார்கள். ஆண்டின் புதிய தொடக்கம் என்பதால், அப்போது எல்லாமே புதிதாகவும் நுட்பமாகவும் இருக்கும். அந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டு வர 2 அல்லது 3 மாதங்கள் பிடிக்கும். அந்த வகையில் பார்த்தால் நிதியாண்டின் 3 அல்லது 4-வது மாதத்தில் வாகனம் மட்டுமன்றி பல துறைகளின் புதிய தயாரிப்புகள் சந்தைக்கு வரும்.
கார் காலம்
இந்தியாவை பொறுத்தவரை சற்று தேக்க நிலையிலிருக்கும் சந்தை கோடைக்கு பின் கொஞ்சம் பரபரக்கும், அப்போது பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும் என்பது நிறுவனங்களில் எண்ணம். இதை கணக்கில் கொண்டுதான் வரும் ஜுலை மாதத்தை கார் காலம் ஆக்கியிருக்கிறார்கள். ஹுண்டாய், ஹோண்டா, மாருதி சுசூகி, ஆடி, ஃபோர்ட் என பல முன்னணி நிறுவனங்கள் புதிய கார்களையும், ஏற்கெனவே வெளியான கார்களை மேம்படுத்தியும் அறிமுகப்படுத்துகின்றன.
மாருதி சுஸுகி எஸ் க்ராஸ்
மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ, ஸ்விப்ட் என்று நடுத்தர வர்க்கத்தினரை திருப்தி செய்து வருகிறது. இந்த சூழலில் மேல் நடுத்தர மக்களுக்கான கார்களை வேகமாக தயாரித்து வருகிறது. ரெனால்ட் டஸ்டர், ஃபோர்ட் இகோ ஸ்போர்ட் போன்றவற்றுக்கு போட்டியாக மாருதி எஸ் க்ராஸ் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டீசல் என்ஜினை கொண்ட இந்தக் கார் ஜுலை முதல் வாரத்தில் சந்தைக்கு வரவுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.8 லட்சம் ஆகும்.
ஹூன்டாய் கிரிடோ
ஹூன்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவி பிரிவின் அடுத்தகட்டமாக ஹூன்டாய் கிரிடோ உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹூன்டாய் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது. எஸ்யூவி பிரிவில் சாண்டா ஃபே கார்களை இந்நிறுவனம் ஏற்கெனவே அறிமுகம் செய்திருந்தது. ஆனால் அது பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில் தான், கிரிடோ அறிமுகமாகவுள்ளது. இதன் அமைப்பும் தோற்றமும் ரெனால்ட் டஸ்டரை போலவே உள்ளது. எனவே, டஸ்டரின் சந்தைக்கு போட்டியாக விளங்கும் என்று பேசப்படுகிறது. இந்தக்காரின் தயாரிப்பு பனிகள் 90% உள்நாட்டிலேயே நடப்பது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா ஜாஸ்
ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தாலும், புதிய மாற்றங்களுடன் மீண்டும் சந்தைக்கு வருகிறது ஜாஸ். ஹுன்டாய் எலைட் ஐ20, மாருதி சுஸுகி ஸ்விப்ட், ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட காம்பேக்ட் கார்களுக்கு போட்டியாக வரவுள்ளது ஹோண்டா ஜாஸ் பெட்ரோல், டீசல் என இரண்டு வகையான என்ஜின்களை கொண்ட வெவ்வேறு மாதிரியான கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இஎஸ்வி,விஎக்ஸ் என நான்கு மாதிரிகளை ஹோண்டா ஜாஸ் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை ரூ 5.5 முதல் ரூ.8 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி எஸ்யூவி க்யூ 3
ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த ஆடி எஸ்யுவி க்யூ3-யின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஜுலை அறிமுகமாகவுள்ளது. சூரிய மேற்கூரை , எல்ஈடி விளக்குகள், சாலைக்கேற்ப ஓட்டு முறையை தேர்வு செய்யும் அம்சம், 20 ஜிபி ஜுக்பாக்ஸ் என ஏராளமான புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
வேகமாக செல்லும் போது, அதற்கேற்ப இறுக்கமாகவும், மெதுவாக ஓட்டும் போது, இலகுவாகவும் இருக்கும் வகையில் ஸ்டேரிங் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் 4 சிலிண்டரைக் கொண்ட 2 லிட்டர் டர்போ டீசல் என்ஜினால் இயங்கக்கூடியது ஆகும். இதன் விலை ரூ.25 லட்சம் முதல் 38 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்ட் ஃபிகோ ஆஸ்பயர்
இந்தியாவில் ஃபோர்ட் நிறுவனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகிற மாடலாக ஃபிகோ ஆஸ்பயரை அந்த நிறுவனம் கருதுகிறது. அறிமுகத்துக்கு முன்பாகவே மக்களின் கவனத்தை ஈர்க்க இந்தியாவின் 25 முக்கிய நகரங்களுக்கு பயணப்பட்டது இந்தக் கார். 10 வார பயணம் ஜுலை இறுதியில் முடிவடைகிறது. அதன் பிறகு முறையான அறிமுகம் நடக்கவுள்ளது. பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் இந்தக்கார் சந்தைகளில் கிடைக்கும்.
எஸ்ஓஎஸ் அவசர அழைப்பு வசதி, செயற்கை கோள் நேவிகேஷன் என நிறைய தொழில்நுட்பங்கள் ஆஸ்பயரில் உள்ளன. மாருதி டிஸையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆக்ஸண்ட் போன்ற தோற்றத்தைக் கொண்ட ஃபோர்ட் ஃபிகோ ஆஸ்பயரின் விலை ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இருக்குமாம்.
manikandan.m@thetamilhindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago