மண் சார்ந்த மனித வளம் சாத்தியமாகுமா?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

மனித வள நிர்வாக மாநாடு என்றால் பன்னாட்டு நிறுவன கனவான்கள் கலந்து கொண்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பி.பி.டியில் படம் காட்டுவார்கள். பிரசண்டேஷன் முடிந்தவுடன் பாதி பேர் களைப்பாக தேனீர் நினைவுடன் கை தட்டுவார்கள். சதா தேனீர் குடித்துக்கொண்டு வெளியில் அரட்டை அடித்துக் கொண் டிருக்கும் சிறு குழுமங்களும் உண்டு. இது பொது அபிப்பிராயம் மட்டுமல்ல. பாதி உண்மையும் கூட.

ஆனால் முழு மாநாடும் தமிழில் நடக்க, பேச்சாளர்கள் படம் காட்டாமல் பேச, கூட்டம் புரிந்து கொண்டு ஆர்வ மாக பங்கெடுக்க, விவாதங்கள் முழு வீச்சில் முன் வைக்கப்பட... நம்ப முடியாத நிகழ்வாய் கொடைக் கானலில் நடந்து முடிந்தது முதல் தமிழ் மனித வள மாநாடு. ஆறு மனித வள அமைப்புகள் இணைந்து நடத்தி காட்டியது இன்னமும் சிறப்பு.

ஓசூரைச் சேர்ந்த மனித வள பிரமுகர் இஸ்ரேல் இன்பராஜின் பெரு முயற்சியாலும், சென்னை, மதுரை, கோயமுத்தூர், ஓசூர், புதுச்சேரி என உற்சாகத்துடன் கலந்து கொண்ட சுமார் 200 மனித வள ஆர்வலர்களாலும் இரண்டு நாள் மாநாடு நிறைவாய் நிகழ்ந்தது.

ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் ராம்குமார் மற்றும் மா ஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்து உரையாற்றினர்.

மனித வளத்துறையில் நேற்று, இன்று, நாளை என்று நான் உரையாற்றினேன். கவியரங்கம், பட்டி மன்றம், குழு விவாதம், சிறப்புரைகள் என களை கட்டியது அடுத்தடுத்த அமர்வுகள். இது இந்தியாவின் முதல் மொழி சார்ந்த மனித வள மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு நடைபெற்ற விவாதங்களும், மாறி வரும் வணிக சமூகம் பற்றிய பல முக்கிய கருத்துகளும் பொது மக்களின் நுகர்வுக்கு முக்கியமானது என கருதுகிறேன். அவற்றை ரத்தினச் சுருக்கமாக வரிசைப்படுத்துகிறேன்.

மனித வளத்துறையின் பங்கு

மனித வளத்துறை தேவையா, தேவையில்லையா என்று பட்டிமன்றம் நடந்தது. இஸ்ரோ போன்ற அமைப்பு களில் ஹெச்ஆர் இல்லை என்றும் அந்நிய முதலீடுகளால் மனித உரிமை மீறல்கள் நடப்பதை தடுக்க முடியாத ஹெச் ஆர் தேவையில்லை என்ற எதிர்குரல்கள் ஓங்கி ஒலித்தன. படுகொலை செய்யப்பட்ட ஹெச்ஆர் மேலாளர்கள் பட்டியல் இத்துறையின் நிலையை வெட்ட வெளிச்சமாக்கியது. எந்த பெயரில் யார் செய்தாலும் இந்த பணி இன்றியமையாதது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருந்தும் ‘இந்திய தொழிலாளிகளை இந்திய மேலாளர்கள் காப்பாற்ற வேண்டும். அந்நிய சக்திகளின் பலிகடாக்கள் ஆகக்கூடாது!’ போன்ற கருத்துக்கள் வலுவாக பதிவாகியது.

எந்தப் பாதுகாப்பும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளிகளின் இழி நிலையை இடித்துரைத்தார் தீன தயாளன். “எத்தனை நாட்கள் தான் ஒரு தொழிலாளி அடிமட்டத்திலேயே வைத்திருப்பது?” என்ற ஒரு கேள்வி யைக் கேட்டு, கடை நிலையிலிருந்து உச்சிக்கு சென்ற சாதனை மனிதர் களின் பட்டியல் போட்டு ஒரு உண் மையை வலுவாகப் பதிவு செய்தார். மனித வள மேலாளர்கள் மனது வைத்து, நிர்வாகங்களுக்கு தகுந்த ஆலோசனை சொன்னால் ஒப்பந்த தொழிலாளிகளின் நிலை மாறும்.

நிர்வாகப் பள்ளிகள்

இன்றைய மனித வள மாணவர்கள் தொழிலாளர்களுடன் நேரடி தொடர்புகள் கொள்ளச் செய்யும் பணியாளர் உறவுகள் பிரிவை விட மனித வள மேம்பாடு போன்ற அலுவலகப் பணியையே விரும்பு கிறார்கள். சட்டம் தெரியாமல் வெறும் நிர்வாகப் பாடங்கள் படிப்பது உத வாது என்ற உண்மையை நிர்வாகப் பள்ளிகள் உணர வேண்டும்.

அதே போல பல மனித வள ஆசிரியர்கள் தொழில் அனுபவம் இன்றி பாடம் நடத்துவதால் மாணவர்களுக்கு பணியிட நிதர்சனங்கள் புரிவதில்லை. அதனால் பகுதி நேர தொழிற்சாலை பணி அவசியம் என்ற என் கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல மனித வள மேலாளர்களை மட்டும் அழைத்து பேசச் சொல்லாமல், தொழிற்சங்கவாதிகளையும் அழைத்து பேசச்சொன்னால் இருபக்க நியாயங்களும் தெரிய வரும் என்று ஆலோசனையையும் பல நிர்வாகப் பள்ளிகள் குறித்துக் கொண்டன.

சமுதாயக் கடமை

திருநங்கைகள், மாற்றுத் திறனாளி கள், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வோர், வீடற்று சாலையில் வசிக்கும் மனிதர்கள் போன்றவர்களை பணிக்கு தயார் செய்து அமர்த்துதல் நமது சமுதாயக் கடமை என்றேன். அதை நிறுவனங்களின் சமூக பொறுப்பு ஆக சுட்டிக் காட்டியபோது பலர் ஆர்வம் காட்டினார்கள். இதை சிறு அளவில் செய்து வெற்றி பெற்ற பலர் புள்ளிவிவரத்துடன் இதை ஆமோ தித்தார்கள்.

பணி செய்யத்தக்க வயதில் உள்ளோர் எண்ணிக்கையில் இளை ஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. ஆனால் இதில் 15% க்கும் குறை வானவர்கள்தான் தொழில் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். மீதி 85% இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி செய்வது தான் இந்தியாவின் முக்கியமான சவால் என்று பேசினார் ராமகிருஷ்ணன். ஆனால் அரசு மற்றும் தனியார் தரப்பு இரண்டிலும் மிகுந்த சுணக்கம் காணப்படுவதாக கூறினார். மனித வள மேம்பாடு என்பது நிறுவனத்துக்குள் முடங்கி விடாமல் இந்திய அளவில் செயல்பட வேண்டும் என்பது தெளிவாகியது.

மனித வளத் துறையில் தொழில் முனைவோர் பெருக வேண்டும். இன்றைய நவீன தொழில் நுட்பத்துக்கு பழக வேண்டும். பல இளைஞர்கள் புதிய சிந்தனையுடன் பெரும் வெற்றி கொள்கிறார்கள் என்றெல்லாம் பட்டியல் போட்டுச் சொன்னார் பாண்டியராஜன். SMAC (Social Media Analytics Cloud ) போக்குகள் பற்றிச் சொன்னவர் புது வியாபார சிந்தனைக்கு இன்றெல்லாம் நிறைய நிதியும் முதலீடும் கிடைக்கிறது என்று நம்பிக்கை அளித்தார்.

நடுநிலைமை

அச்சம் தவிர் என்று ஆரம்பித்த ராம்குமார், நிர்வாகம் மற்றும் தொழிலாளிகள் என இரு தரப்பிற்கும் பயப்படத் தேவையில்லை. நிஜத்தை சொல்ல வேண்டிய வேலையும், நிறுவன வளர்ச்சிக்கு நெடுங்காலம் எது பயன் தரும் எனச் சொல்லும் வேலை யும் மனித வளத் துறைக்கு உண்டு. வெளிப்படையான அணுகுமுறையும், நடுநிலையும் என்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அழுத்தமாக பதிவு செய்தார்.

வெளி நாட்டு பொருளாதாரக் கொள் கைகளுக்கும் அவர்கள் வாழ்வியல்- உளவியல் சார்ந்து தயாரிக்கப்பட்ட உளவியல் மற்றும் மனித வள கொள் கைகளை விடுத்து நமது மண் சார்ந்த மனித வளக் கொள்கைகள் தேவை என்று வலியுறுத்தினார் ஹலாசியம் சுந்தரம். புயலில் பாதிக்கப்பட்ட அடுத்த மாநில மக்களுக்கான உதவி களை தடுத்த அமெரிக்க மன நிலையும், நேபாள பூகம்பத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவ இரு பகை நாடுகளான இந்தியாவும் பாகிஸ் தானும் தன் எல்லைகளை தளர்த்தி ஆபத்து காலத்தில் பேருதவிகள் புரிந்த மன நிலையும் வேறு வேறு என்று புரிய வைத்தார். மண் சார்ந்த ஆய்வுகளும் கல்வி முறையும் தேவை என்று எடுத்துரைத்தார்.

தமிழில் கருத்தரங்கங்கள் நிகழும் போது ஏற்படும் ஆராவாரத்துக்கு காரணம் நம் சிந்தனையும் மொழி யும் ஒருங்கிணைவதுதான்; தாய் மொழியில் கல்வி, வேலை, தொழில் என அனைத்தும் சாத்தியம் என்று நான் சொன்னபோது பன்னாட்டு நிறு வனங்கள் நிரம்பிய சூழலில் இது சாத்தியமா என்ற கேள்வி வந்தது.

ஜெர்மனி, ஜப்பான், கொரியா, சீனா என அனைத்து தொழில் சமு தாயங்களும் தாய்மொழியை தூக்கிப் பிடித்திருப்பதை எடுத்துச் சொன்னேன். இது பிற மொழி துவேசம் அல்ல; தாய்மொழியின் செறிவை தவறவிடாதிருத்தல் என்று வேறுபடுத்தியபோது கூட்டம் ஏற்றுக் கொண்டது.

இந்த மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து வருடந்தோறும் இதை உலகெங்கும் தமிழில் நடத்த பலர் ஆர்வம் காட்டினார்கள். அடுத்த மாநாட்டை சென்னையில் நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

மண் சார்ந்த மனித நேயத்துடன் கூடிய மனித வள மேம்பாடு சாத்தி யமே. அதை தாய் மொழி பேசி மீட்டெடுக்கும் முயற்சிகளில் இந்த மாநாடு முதல் அடி என எடுத்துக் கொள்ளலாம்!

gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்