பொசிஷனிங் என்பது ஏகப்பட்ட பணம், நேரம் ஆகியவற்றைச் செலவிட்டுச் செய்யும் முயற்சி. எல்லாப் பொருட்களின் வெற்றிக்கான மந்திரச் சாவியும் பொசிஷனிங்தான். ஆகவே, கம்பெனிகள், மக்கள் மனங்களில் உருவாக்கிய நல்ல அபிப்பிராயங்கள் பாதிக்கப்படாதவாறு கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். சில சமயங்களில், இந்தப் பாதிப்பு தற்செயலாக, தானாகவே நிகழலாம். கம்பெனிகள் உடனேயே நடவடிக்கைகள் எடுத்து நிலைமையைப் பழைய பாதைக்குக் கொண்டு வருவார்கள், இழந்த வாடிக்கையாளர் நம்பிக்கையை மீட்பார்கள்.
பொசிஷனிங்
இதற்கெல்லாம் விதிவிலக்காக, ஒரு ஜப்பானியக் கம்பெனி, இப்படிப்பட்ட நெருக்கடி வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்து, ஹராகிரி (ஹராகிரி (Hara-kiri) - ஜப்பானில் சமுராய்கள் என்னும் மாவீரர்கள் இருந்தார்கள். கவரிமான்கள். போரில் தோல்வி வந்தாலோ, அல்லது தங்கள் தன்மானம் பாதிக்கப்பட்டாலோ, தற் கொலை செய்துகொள்வார்கள்) செய்துகொண்டது. அந்த விபரீத அனுபவம்.....
பிரச்சினை
ஜப்பானில் ஸ்நோ பிராண்ட் மில்க் புராடெக்ட்ஸ் கம்பெனி (Snow Brand Milk Products Company), பால், சீஸ் தயாரிக்கும் மாபெரும் நிறுவனம். 1925 - இல் தொடங்கப்பட்டு மக்களின் பேராதரவைப் பெற்ற கம்பெனி. 2000 ம் ஆண்டில் திடீரென மாபெரும் பிரச்சினையை எதிர்கொண்டது.
பாக்டீரியா பாதிப்பு
ஜப்பானின் பல பாகங்களில் மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, உடலின் பல பாகங்களில் கட்டி, அவற்றில் சீழ், மூச்சுத் திணறல் என பல உபாதைகள் வந்தன. மருத்துவ மனைகளுக்குப் போனார்கள். அவர் கள் அனைவரும், Staphylococcus Aureus என்னும் பாக்டீரியாவால் பாதிக் கப்பட்டிருப்பதாகச் சோதனைகள் கூறின. அனைவரும் ஸ்நோபிராண்ட் பால், சீஸ் தினமும் பயன்படுத்துபவர்கள். ஆகவே, பால், சீஸ் ஆகியவற்றில் இருந்த Staphylococcus Aureus பாக்டீரி யாக்களால்தான் உபாதைகள் வந்ததாக மருத்துவர்கள் முடிsவு செய்தார்கள். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி 15,000 - ஐத் தொட்டது.
நம்பிக்கை சரிவு
ஸ்நோ பிராண்ட் கம்பெனிகள்தாம் வில்லன்கள் என்று ஊடகங்கள் முணு முணுத்தன. மக்கள் சந்தேகப்பட்டார்கள். கம்பெனியிடம் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை சரியத் தொடங்கியது. பிரச்சினையின் தீவிரத்தைக் கம்பெனி உணரவில்லை. மறைக்க முயற்சி செய்தது.
“எங்கள் தயாரிப்பில் குறையொன்று மில்லை. வீணாகப் போட்டியாளர்கள் பழி சுமத்துகிறார்கள்” என்றார்கள் கம்பெனி மேனேஜர்கள். யாருமே நம்பவில்லை. அரசாங்கம் விசாரணையை உடனே எடுக்கவேண்டும் என்று மக்கள் குரல் ஒலிக்கத் தொடங்கி உச்சம் தொட்டது.
விசாரணை
அரசாங்கச் சுகாதார அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினார்கள். கம்பெனிக்கு நாடு முழுக்கப் பல தொழிற்சாலைகள் இருந்தன. ”எல்லாத் தொழிற்சாலைகளிலும் மிக சிறந்த சுகாதார முறைகளைக் கடைப் பிடிக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாடு முறைகள் உலகத் தரமானவை. ஆகவே, எங்கள் தொழிற்சாலையில் Staphylococcus Aureus பாக்டீரியாக்கள் வர வாய்ப்புகளே இல்லை. கடைகளின் தவறுகளால் மட்டுமே இந்தத் தவறு நடந்திருக்கும்” என்று கம்பெனி நிர்வாகிகள் கை கழுவினார்கள்.
பிரச்சினையைத் திசை திருப்ப முயற்சித்தார்கள். அரசு அதிகாரிகளுக்குச் சந்தேகம் தீரவில்லை. விசாரணையைத் தீவிரமாக்கினார்கள். கம்பெனியின் எல்லாத் தொழிற்சாலைகளிலும், பணியாட் களிடம் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டார்கள். விடை கிடைக்கவில்லை. தொழிற்சாலைகளையும், பால், சீஸ் தயாரிப்பையும், தயாரிப்பு சம்பந்தமான ஆவணங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்தார்கள்.
வால்வில் பாக்டீரியா
டைக்கி (Taiki) என்ற இடத்தில் இருந்த தொழிற்சாலையில் கிடைத்தது நிரூபணம். பாலைப் பதப்படுத்தும் ஒரு எந்திரத்தில் வால்வு (Valve) இருந்தது. அதைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். செய்யவில்லை. அதனால் அந்த இடத்தில் பாக்டீரியா. தோன்றிவிட்டது.
கெட்டுப்போன பால்
இன்னொரு காரணம். மார்ச் மாதத்தில், தொழிற்சாலையில் மூன்று மணி நேரத்துக்கு மின்சாரம் தடைப்பட்டது. இதனால், பால் சரியாகப் பதப்படுத்தப்படவில்லை. தரக்கட் டுப்பாட்டு முறைகளின்படி, இந்தப் பாலை கொட்டியிருக்கவேண்டும். கம்பெனி செய்யவில்லை. அதைப் பயன்படுத்திப் பால் பவுடரும், பாலாடையும் தயாரித்துவிட்டார்கள்.
தவறை மறைக்க முயற்சி
அறிக்கையை மறைக்கக் கம்பெனி நிர்வாகிகள் அரசு அதிகாரிகளிடம் மன்றாடினார்கள். அவர்கள் சம்மதிக்கவில்லை. கடைகளில் இருந்த அத்தனை பால், சீஸ் பாக்கெட்டுகளையும் திரும்பப் பெறுமாறு ஆணையிட்டார்கள். கம்பெனி ஒத்துக் கொண்டார்கள். அத்தனை கையிருப்பையும் திரும்ப வாங்கினால் பண நஷ்டமல்லவா? சில கடைகளிலிருந்து ஸ்டாக்கை எடுத்தார்கள். மொத்தமும் திரும்பப் பெற்றதாகக் கணக்குக் காட்டினார்கள்.
அரசையும், வாடிக்கையாளர் களையும் ஏமாற்ற முடியுமா? கம்பெனியின் கபட நாடகம் அம்பல மானது. ஸ்நோ பிராண்ட் தயாரிப்பு களுக்கு இருந்த 45 சதவிகித மார்க்கெட் பங்கு 9 சதவிகிதமாக அதல பாதாளத்தில் விழுந்தது. நஷ்டம் 1,720 கோடி ரூபாய்!
கம்பெனித் தலைவர் டெட்ஸுரோ இஷிக்காவா (Tetsuro Ishikawa) மற்றும் ஏழு முக்கிய நிர்வாகிகளை இயக்குநர் குழு வீட்டுக்கு அனுப்பியது. இஷிக்காவா உடல் நலமற்று மருத்துவ மனைக்குப் போனார். அங்கிருந்து தன் பாவங்களுக்காக நரகம் போனாரா, தெரியவில்லை.
புதிய தலைவர்
கோஹெல் நிஷி (Kohel Nishi) கம்பெனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். அவர் கொடுத்த உறுதி மொழிகள், “சமுதாயப் பொறுப்போடு நடப்போம். நடப்பதை மறைக்காமல் மக்களிடம் சொல்லுவோம். மக்கள் மதிப்புப் பெற்ற வெளி டைரக்டர்களை நியமித்து, எங்கள் வழிமுறைகளைக் கண்காணிக்க வைப்போம்.”
மற்றொரு சிக்கல்
இரண்டே ஆண்டுகளில் இன்னொரு சிக்கல். வந்தது. மாட் கெள (Mad Cow Disease ) என்னும் நோய் மாடுகளுக்கு வரும் தொற்று நோய். மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றைப் பாதித்துச் செயலிழக்கச் செய்யும், மரணத்துக்கு இட்டுப்போகும். இந்த மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுபவர்களுக்கும் இதே நோய்கள் வரும். அமெரிக்காவில் மாட் கெள நோய் பரவியது. அமெரிக்காவிலிருந்து அதிகமாக மாட்டிறைச்சி இறக்குமதி செய்யும் நாடு ஜப்பான். ஸ்நோபிராண்ட் கம்பெனி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து, ஜப்பானில் விநியோகம் செய்தார்கள். இப்போதும் கம்பெனி நேர்மையாக நடக்கவில்லை. கோஹெய் நிஷி கொடுத்த வாக்குறுதி, வெறும் வாய் ஜாலமாகிவிட்டது. தெரிந்தே, பாதிக்கப்பட்ட இறைச்சியை விற்பனை செய்தார்கள். தவறு அம்பலமானது. மக்கள் நம்பிக்கை அதல பாதாளத்துக்குப் போனது.
கம்பெனி கைமாறியது
கம்பெனியைப் புதிய முதலாளிகள் வாங்கினார்கள். மெக்மில்க் ஸ்நோபிராண்ட் கம்பெனி (Megmilk Snow Brand Company) என்று பெயர் மாற்றம் செய்தார்கள். பழைய தவறுகளைச் செய்யாமல், கம்பெனிக்குப் புதிய பிம்பம் உருவாக்க முடிவெடுத்தார்கள். தரக்கட்டுப்பாட்டில் தீவிரம் காட்டினார்கள். 2005 - இல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜிஸ்ட்ஸ் (Institute of Food Technologists) என்ற உணவுப் பொருட்கள் தொழில் வல்லுநர்கள் அமைப்பு, உணவு ஆராய்ச்சிக்காக ஸ்நோ பிராண்ட் கம்பெனிக்கு விருது வழங்கிக் கெளரவித்தது. மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற, இந்த அசுர முயற்சிகளும், விருதும் உதவின.
பொசிஷனிங்கில் பல காரணங்களால் சரிவு வரும். அந்தச் சரிவு தாங்கள் செய்யும் தவறுகளால் என்பது கம்பெனிக்குத் தெரிந்தால், தவறுகளை மறைக்கக்கூடாது. நேர்மையோடு அவற்றை ஏற்றுக்கொண்டு, திருத் தங்கள் செய்யவேண்டும். பிராயச் சித்தம் செய்வதை மக்கள் அறிய வைக்கவேண்டும். நாளடைவில் மக்கள் மனங்கள் மாறும். இழந்த விற்பனையை மீட்டுப் பெறலாம். உதாரணம் - ஸ்நோ பிராண்ட் மில்க் புராடெக்ட்ஸ் கம்பெனி.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago