நிதி திரட்டுவது எப்படி என்பது குறித்து கடந்த வாரம் அலசினோம். அதன் தொடர்ச்சியாக இவ்வாரம் நிதி திரட்டும் வகைகள் குறித்துக் காண்போம்.
1.சுய சம்பாத்தியம்:
பெருவாரியான தொழிலதிபர்கள் அவர்கள் தொழில் ஆரம்பித்தபொழுது தங்களது கையில் சேமித்து வைத்திருந்த பணத்தை போட்டுத்தான் ஆரம்ப காலத்தில் தொழில்களை ஆரம்பித்தார்கள். இவ்வழி அதிக ரிஸ்க் இல்லாத வழி ஆகும். நீங்கள் சுயமாக சம்பாதித்த பணத்தைப் போட்டு தொழில் ஆரம்பிக்கும் பொழுது அத்தொழிலின் லாப நஷ்டங்கள் உங்களையே சேரும். நீங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை.
வெளியில் சென்று உங்கள் நண்பர்களிடம் அல்லது உறவினர்களிடம் பணம் கேட்டு நிற்க வேண்டிய தேவை இல்லை. நீங்கள் சுயமாக சம்பாதித்த பணத்தை போடும் பொழுது ஆரம்பிக்கப்போகும் தொழிலின் மீது அபார நம்பிக்கை இல்லாவிட்டால், அத்தொழிலை தொடங்கமாட்டீர்கள். மேலும், முழுக்க முழுக்க நீங்கள் சுயமாக சம்பாதித்த பணமாதலால் அத்தொழிலை மிகவும் சிரத்தையுடன் நடத்துவீர்கள். முதல் தலைமுறை தொழிலதிபர் பலருக்கும் இதுவே மிகவும் சிறந்த வழி.
இதற்காக நீங்கள் சம்பாதிக்கும்பொழுது ஒரு சிறிய தொகையை மாதா மாதம் ஒரு தொடர் சேமிப்புத் திட்டத்திலோ (ஆர்டி) அல்லது பரஸ்பர நிதியம் (மியூச்சுவல் ஃபண்ட்) நிறுவனங்கள் நிர்வகிக்கும் லிக்விட் ஃபண்டுகளிலோ முதலீடு செய்வது சிறந்ததாகும். உங்கள் ஐடியா பலப்படும்பொழுது, இச்சிறு சேமிப்பு உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
2.நண்பர்கள் உறவினர்கள் மூலம் பணம் திரட்டுவது:
நீங்கள் தொடங்க விரும்பும் தொழிலின் மூலதனம் முழுவதும் உங்களிடம் இல்லாதபொழுது நீங்கள் பிறரைத்தான் நாடவேண்டும். அதில் முதல் கட்டமாக வருபவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்தான். உங்களிடம் நெருக்கமாக பழகும் அவர்களுக்குத்தான் உங்களைப்பற்றி நன்றாகத் தெரியும். ஆகவே உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களில் முதலீடு செய்ய வசதி உள்ளவர்களை உங்களது தொழில் திட்டத்துடன் அணுகி, அவர்களிடம் முதலீட்டை கேளுங்கள்.
அதில் சிலர் உங்களுடன் கூட்டாக முதலீடு செய்து, தொழிலிலும் பங்கெடுத்து வேலை செய்ய (Working Partner) முன்வருவார்கள். இன்னும் சிலரோ முதலீட்டு பார்ட்னராக மட்டும் வர விரும்புவார்கள். இன்னும் சிலரோ பார்ட்னராக வர விரும்பாமல் உங்களுக்கு கடனாக பணம் தர முன் வருவார்கள். உறவினர் மற்றும் நண்பர்களிடம் நீங்கள் பணம் வாங்கும்பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் தொழிலில் நஷ்டங்கள் ஏற்பட்டு உங்களால் அவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியா விட்டால் அது உங்கள் உறவுகளையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்க! ஆகவே நீங்கள் பார்ட்னர்களை/ முதலீட்டாளர்களை நாடும் பொழுது நல்ல முதிர்ந்த மனநிலை உள்ளவர்களை அணுகவும்.
3.வங்கி/ வங்கி சாரா நிதி நிறுவனக் கடன்கள்:
நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தைப் போட்டு அல்லது உறவினர்கள்/ நண்பர்கள்/ முதலீட்டாளர்களிடம் பணம் வாங்கி ஆரம்பித்த பிறகு, உங்கள் தொழிலுக்குத் தேவைப்படும் அடுத்தகட்ட நிதித் தேவைகளுக்கு நீங்கள் நாட வேண்டியது வங்கிகளை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களைத்தான்! வங்கிகள் எடுத்த எடுப்பிலேயே உங்களுக்கு பணம் தர முன் வரமாட்டார்கள்.
நீங்கள் தொழிலை சிறிது காலம் நடத்திய பிறகு நடப்புக் கணக்கு வைத்துள்ள வங்கியிலேயே உங்களது தொழில் கடனுக்கு அணுகலாம். உற்பத்தி, ஏற்றுமதி போன்ற தொழில்களுக்கு வங்கிகள் கடன் தர முன்வருவார்கள். இருந்த பொழுதிலும், உங்களுக்கு முதல் கட்ட கடன் வழங்கும்பொழுது வீடு, நிலம் போன்றவற்றை பிணையாக தருமாறு கேட்பார்கள். பொதுவாக வங்கிக்கடன் பிற கடன்களை விட குறைவான வட்டியில் கிடைக்கும்.
சற்று அதிக வட்டியில் விரைவாகக் கடன் பெற விரும்புபவர்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்களை அணுகலாம்.
4.விதை முதலீட்டு நிறுவனங்கள் (Seed Capital Funds):
நீங்கள் தொடங்கப்போகும் தொழிலுக்குப் போதுமான அளவு உங்களிடம் மூலதனம் இல்லை; மேலும் உங்கள் உறவினர்கள்/ நண்பர்களிடமிருந்து முதலீட்டை பெற முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அது போன்ற நேரங்களில் இன்றைய வளரும் இந்தியாவில் விதைப்பணம் தர பல நிறுவனங்கள் முன் வருகின்றன.
பல தொழிலதிபர்கள் பல கவர்ச்சிகரமான ஐடியாக்களை வைத்திருப்பார்கள். அந்த ஐடியாக்கள் இன்னும் நிரூபணம் ஆகியிருக்காது. அதைச் சந்தைப் படுத்தவே இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அது போன்ற சமயங்களில் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள்/ வங்கிகள்/ பிற முதலீட்டாளர்கள் முன்வந்து முதலீடு செய்ய மாட்டார்கள். இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வது ஹை ரிஸ்க் ஹை ரிவார்ட் வகையாகும். இவ்வகை முதலீடுகளில் விதை முதலீட்டு நிறுவனங்கள் விருப்பமாக இருப்பார்கள்.
இந்த நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை ஆரம்பகால முதலீட்டிற்காக கொடுக்கின்றனர். எல்லாத்தொழிலுக்கும் நிதி தருவதற்கு இந்நிறுவனங்கள் முன்வருவதில்லை. இந்நிறுவனங்கள், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் ஒரு வித்தியாசமாக இருக்க வேண்டும், அதே சமயத்தில் மிகவும் அதிக வளர்ச்சி தரக்கூடிய மற்றும் விரைவாக விஸ்தரிக்கக்கூடிய தொழிலாக இருக்கவேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள்.
ஐடியா நிரூபணமாகி, தொழில் கான்செப்ட் பிடிபட்டவுடன் பிற முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வருவார்கள். இந்தியாவில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் சில விதை முதலீட்டு நிறுவனங்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளேன்: Unitus Seed Fund, Accion Venture Lab, Aavishkaar, Anavo, Grassroots Business Fund, Blume Ventures, YourNest, SeedFund & Many More... (வரும் வாரத்தில் நிதி திரட்டும் வகைகள் குறித்து மேலும் காண்போம்.)
prakala@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago