நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யுங்கள் - ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் துணைத்தலைவர் ஆர்.ஜானகிராமன் பேட்டி

By வாசு கார்த்தி

கடந்த சில வருடங்களாக மியூச்சுவல் ஃபண்டிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி வரும் சூழ்நிலையில், ஏப்ரல் மாதம் 4 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் போர்ட்ஃபோலியோ மேலாளர் ஆர்.ஜானகிராமனைச் சந்தித்து மியூச்சுவல் ஃபண்ட் துறை, முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல விஷயங்களை பேசினோம். அதிலிருந்து..

நீங்கள் பிறந்த ஊர் மற்றும் கல்வி குறித்து?

பிறந்தது கரூரில். கோவை ஜி.சி.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். அதன் பிறகு டி.ஐ. சைக்கிள் நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நிர்வாகம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஐ.ஐ.எம். பெங்களூருவில் படித்தேன். மெர்ச்சண்ட் பேங்கிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு யூ.டி.ஐ. செக்யூரெட்டீஸ் நிறுவனத்தில் இருந்தேன். அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பிறகு 2007-ம் ஆண்டு ஃபிராங்கிளின் நிறுவனத்தில் சேர்ந்தேன்.

மிட்கேப் ஃபண்ட், லார்ஜ் கேப் ஃபண்ட் என ஃபண்ட் வகையை எடுத்துக்கொண்டாலும் வங்கி மற்றும் நிதி சார்ந்த துறையின் பங்கு அதிக அளவில் இருக்கிறதே ஏன்?

உதாரணத்துக்கு முதல் 100 நிறுவனங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நிறுவனங்களின் மொத்த நிகரலாபத்தை எடுத்துக்கொண்டால், வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் பங்கு அதிகமாக இருக்கும். அடுத்தது, மக்களின் கடன் குறைவு. அதாவது மக்கள் இப்போதுதான் அடிப்படை தேவைகளை முடித்துக்கொண்டு, வீடு, கார் உள்ளிட்டவற்றை கடனில் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதனால் அடுத்த 20,30 வருடங்களுக்கு இந்தத் துறையில் வளர்ச்சி இருக்கும். வளர்ந்த நாடுகளின் தனிநபர் கடன்களுக்கான வளர்ச்சி மிகவும் குறைவு. அதேபோல இந்தியாவிலும் 20, 30 வருடங்களுக்கு பிறகும் இந்தத் துறை மீதான கவர்ச்சி இருக்குமா என்பது சந்தேகமே.

எந்த அளவுகோலில் மிட்கேப், ஸ்மால்கேப் என்பதை வரையறை செய்கிறீர்கள். உதாரணத்துக்கு சில பெரிய நிறுவனங்கள் கூட மிட்கேப் ஃபண்ட் பட்டியலில் இருக்கின்றனவே?

free float market capitalization அடிப்படையில் ஒரு பங்கு எந்த இண்டெக்ஸில் வரும் என்று முடிவு செய்யப்படும். அதாவது ஒரு நிறுவனத்தின் புரமோட்டர்கள் தவிர்த்து இருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பை வைத்து அந்த பங்கு எந்த குறியீட்டில் இருக்கும் என்று முடிவு செய்யப்படுகிறது. சில நிறுவனங்களில் புரமோட்டர் பங்கு அதிகமாக இருப்பதால் அந்த பங்குகள் மிட்கேப் குறியீட்டில் வந்துவிடுகின்றன.

நாங்கள் பிரைமா ஃபண்ட் வெளியிடும் போது, மிட்கேப் குறியீடு கிடையாது. அப்போது சி.என்.எக்ஸ் 500 குறியீடு இருந்தது. அப்போது முதல் 100 பங்குகளை லார்ஜ் கேப் பங்குகள் என்றும் கடைசி 100 பங்குகளை ஸ்மால்கேப் என்றும் வரையறை செய்தோம்.

பெரும்பாலான ஃபண்ட் நிறுவனங்களின் முக்கியமான பங்குகளுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இந்த நிலையில் ஒரு சிறுமுதலீட்டாளர் குறிப்பிட்ட ஃபண்டினை எப்படி தேர்ந்தெடுப்பது?

லார்ஜ் கேப் ஃபண்ட்களில் இருக்கும் விதிப்படி முக்கியமான 50 கம்பெனிகளில்தான் அவர்கள் முதலீடு செய்ய முடியும். அதனால் லார்ஜ் கேப் ஃபண்ட்களில் இருக்கும் பங்குகள் ஒரே மாதிரி தோன்றலாம். ஆனால் மிட்கேப் ஃபண்ட்களில் 400க்கும் மேற்பட்ட பங்குகள் இருக்கிறது. அதனால் மிட்கேப் ஃபண்ட்களில் ஒரே மாதிரியான பங்குகள் இருக்காது.

முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டு முறையை பார்த்துதான் முதலீடு செய்ய வேண்டும். portfolio turnover விகிதத்தை முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டும். இந்த விகிதம் குறைவாக இருக்கும் ஃபண்ட்களை முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணத்துக்கு இந்த விகிதம் 40 என்ற அளவில் இருக்கும் போது, அந்த ஃபண்டில் ஒரு பங்கு 2.5 வருடம் இருக்கிறது என்று அர்த்தம். 80 என்னும் பட்சத்தில் ஒரு பங்கு 1.25 வருடம் மட்டுமே இருக்கிறது என்றும் 100க்கு மேல் செல்லும் போது ஒரு பங்கு, ஒரு வருடம் கூட அந்த ஃபண்டில் இல்லை என்றும் புரிந்து கொள்ளலாம். மேலும் 3 மாதம், 6 மாத வருமானத்தை பார்க்காமல், நீண்டகாலம் அந்த ஃபண்ட் எப்படி செயல்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்து முதலீடு செய்யவேண்டும்.

உங்களுடைய பிரைமா ஃபண்டில் 60 பங்குகள் இருக்கிறது. இப்படி அதிகமாக பங்குகளில் முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த ஃபண்டில் லாபம் குறைவாக இருக்குமே?

சரிதான். குறைவான பங்குகள் இருப்பது நல்லது. அப்போதுதான் அந்த ஃபண்ட் மேனேஜருக்கு அந்த பங்குகளின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் நடைமுறை சிக்கல் என்னவென்றால், சந்தை மேலே செல்லும் போது ஃபண்ட் மேனேஜர் ஒரு பங்கில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அவ்வளவு முதலீட்டை ஒரே சமயத்தில் செய்யமுடியாமல் போய்விடும். அடுத்தடுத்த நாட்களில் அந்த பங்கின் விலை உயர்ந்த பிறகு, அந்த பங்கினை துரத்துவதை விட வேறு பங்குகளில் முதலீடு செய்வது நல்லது. சந்தை மேலே செல்லும் போது இந்த சிக்கல் ஏற்படும்.

சந்தை சீரான வேகத்தில் இருக்கும் போது, குறைவான பங்குகளில் கவனம் செலுத்தி, அந்த பங்கில் அதிக முதலீடு செய்ய முடியும். இதே ஃபண்டில் இரண்டு வருடங்களுக்கு முன் 45 பங்குகள்தான் இருந்தது.

உங்களுடைய முதலீட்டு முறைகளை சிறுமுதலீட்டாளர்களுக்கு சொல்லமுடியுமா?

பங்குச்சந்தையில் ரிஸ்க்கை முழுவதுமாக குறைக்க முடியாது. ஆனால் எந்தளவுக்கு ரிஸ்க்கை குறைந்து, முடிந்த அளவுக்கு வருமானத்தை அதிகப்படுத்த முடியுமோ அதுதான் என்னுடைய முதலீட்டு திட்டம். தரமான பங்குகளை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்ய வேண்டும். 10,20 வருடங்களுக்கு அந்த பிஸினஸுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும், லாபம் நன்றாக இருக்க வேண்டும், நிர்வாகம் நன்றாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் ஐரோப்பா குரோத் ஃபண்ட் ஒன்றினை நீங்கள் ஆரம்பித்திருக்கிறீர்கள். ஐரோப்பா தடுமாறிக்கொண்டிருக்கும்போது இந்த ஃபண்டினை ஆரம்பிக்க காரணம் என்ன?

பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் எதிர்பார்ப்பு இல்லாத சூழ்நிலையில் ஒரு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். ஐரோப்பாவில் தரமான நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும் சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சார்ந்த ஃபண்ட் ஆரம்பித்தோம். அப்போது அமெரிக்கா மீது எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அந்த ஃபண்ட் நல்ல வருமானத்தை கொடுத்தது. மேலும் இது அனைவருக்குமான ஃபண்ட் கிடையாது. பல முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான திட்டம் இது.

முதலீட்டாளர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலீடு செய்ய வேண்டாம். அதற்காக குறைவான எதிர்பார்ப்போடு வாருங்கள் என்று சொல்லவில்லை. அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். அடுத்து பொறுமையுடன் இருங்கள். நீண்டகால நோக்கத்துடன் முதலீடு செய்யுங்கள். உங்கள் வீட்டின் விலை விவரம் தினமும் வெளியாவதில்லை. அதனால் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

ஆனால் இங்கு தினமும் என்.ஏ.வி., பங்கு விலை வெளியாகிறது என்பதற்காக தினமும் அதை பார்த்துக்கொண்டே பொறுமை இழக்க வேண்டாம். 2007-ம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் வந்தது உண்மைதான். அதன் காரணமாக பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளே வேண்டாம் என்று முடிவுக்கு வரவேண்டாம். பங்குச்சந்தை சார்ந்த நீண்ட கால முதலீட்டில் வரி கிடையாது. ஆனால் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் வரி நீங்கலாக கிடைப்பது குறைவுதான். கொஞ்சம் பங்குச்சந்தை சார்ந்த முதலீடு வைத்துக்கொள்வது நல்லது.

புதிய அரசிடம் எதிர்ப்பார்ப்பது?

இப்போதைக்கு பெரிய பெரிய சீர்திருத்தங்களைத் தாண்டி, சிறப்பான நிர்வாகம் வேண்டும்.

karthikeyan.v@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்