உங்கள் மனதில் தோன்றுகிறது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று கண் மூடித்தனமாய் இருக்காதீர்கள். முடிவெடுக்க தேவையான அனைத்து செய்திகளையும் சேகரிக்கிறீர்களா என்று பாருங்கள். உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் செய்திகளுக்கு மட்டுமே இடம் கொடுக்காதீர்கள்.
முடிவெடுக்கும் போது நடக்கும் தவறுகள் குறித்து மூன்றாவது வாரமாகத் தொடர்கிறோம். முடிவுகளில் தவறுகள் ஏற்படுவது பெரும்பாலும் முடிவெடுப்பவர் மனதில்தான் என்கிறார்கள் ’ஜான் ஹேமண்ட்’, ‘ரால்ஃப் கீனி’ மற்றும் ‘ஹோவர்ட் ரைஃபா’. ’ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘The hidden traps in decision making’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் நிர்வாகங்கள் தவறான முடிவெடுப்பதிலுள்ள உளவியல் ரீதியான புதைகுழிகளை பட்டியலிடுகின்றனர். அதில் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம்.
கன்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப் (Confirming-evidence trap)
தாம் நினைத்ததே சரி, தாம் நினைத் ததையே மற்றவர் சொல்லவேண்டும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். மாற்று கருத்து சரியானதாக இருந்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். மனதில் இருப்பதை உறுதி (கன்ஃபர்ம்) செய்யும் சாட்சிகளை (Evidence) மட்டுமே நாடுவதால் இதற்கு கம்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப் என்று பெயர்.
மணி பத்திருக்கும் என்று நினைக் கிறோம். வாட்ச் இல்லை. அருகிலுள்ள நண்பரிடமும் வாட்ச் இல்லை. அவரிடம் ‘மணி பத்திருக்கும் இல்ல’ என்று கேட்கிறோம். அவர் ‘சே இருக்காது’ என்கிறார். ‘அட போய்யா கண்டிப்பா பத்திருக்கும்’ என்று அடித்துக் கூறுகி றோம். கூறியது ஞாபகம் வருகிறதா!
அமெரிக்க ஆராய்ச்சி ஒன்றில் தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஒரு அணியையும் அதை எதிர்க்கும் ஒரு அணியையும் அழைத்து அவர்களிடம் இரண்டு ஆராய்ச்சி அறிக்கைகள் தரப்பட்டன. ஒரு அறிக்கை அறிவியல் பூர்வமாக தூக்கு தண்டனை சரியே என்று விளக்கும் அறிக்கை. இன்னொரு அறிக்கை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து தூக்கு தண்டனை தவறு என்று விளக்கும் அறிக்கை. இரண்டு அறிக்கைகளையும் இரு குழுக்களும் படித்தபின் அவர்களிடம் அந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று ஆராயப்பட்டது. இரு குழுக்களும் தங்கள் எண்ணத்தை பிரதிபலித்த அறிக்கையிலுள்ள காரணங்களை மட்டுமே கணக்கிலெடுத்து ‘பார் நாங்கள் சொல்வதைத் தான் கூறியிருக்கிறார்கள்’ என்று சாதித்தது. என்னதான் அறிவியல் பூர்வமாக ஆதாரங்களும், மாற்றுக் கருத்தும் அளிக்கப்பட்டாலும் தங்கள் எண்ணத்தை கைவிட இரு குழுக்களும் தயாராக இல்லை.
நிர்வாகங்களிலும் இதே கதைதான். எக்ஸ்போர்ட் கம்பெனி உரிமையாளர் ரூபாயின் மதிப்பு அடுத்த சில மாதங் களில் குறையும் என்று நினைக்கிறார். அதைக் கொண்டு உத்தி அமைக்க வேண்டும் என்பதால் இதைப் பற்றி ஏற்றுமதித் துறையில் உள்ள தன் நண் பரிடம் கேட்கிறார். அவர் ‘இல்லையப்பா, ரூபாயின் மதிப்பு கூடுமே ஒழிய குறையாது’ என்கிறார். ஏற்றுமதி நிறுவன உரிமையாளரோ கம்பெனி ஓனரோ ‘இந்தாளுக்கு என்ன தெரியும்’ என்று தான் நினைத்தபடி ரூபாய் மதிப்பு குறையும் என்றே உத்தி அமைக்கிறார். கன்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப்பில் தொபுக்கடீர் என்று விழுகிறார்!
கண்மூடித்தனம் வேண்டாம்
உங்கள் மனதிற்கு சரியென்று பட்டதை, பட்டென்று தோன்றுவதை செய்யக்கூடாது என்றில்லை. பல சமயங்களில் உங்கள் அனுபவத்தின் காரணமாக அது சரியாகவே இருக்கலாம். உங்கள் மனதில் தோன்றுகிறது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று கண் மூடித்தனமாய் இருக்காதீர்கள். முடிவெடுக்க தேவையான அனைத்து செய்திகளையும் சேகரிக்கிறீர்களா என்று பாருங்கள். உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் செய்திகளுக்கு மட்டுமே இடம் கொடுக்காதீர்கள்.
ஆலோசகர் அவசியம்
நீங்கள் எடுக்கும் முடிவில் தவறு இருந்தால் அதை உங்களிடம் கூற உங்கள் ஊழியர்கள் தயங்குவார்கள். படியளப்பவரிடம் பயம் இருக்காதா. இதற்கும், பொதுவாகவே உங்கள் மனசாட்சியாய் திகழ்வதற்கும் நல்ல நிர்வாக ஆலோசகரை நியமியுங்கள். உங்களுக்கு ஆமாம் போடும் ஆசாமியாய் இல்லாமல் நீங்கள் தவறான முடிவெடுக்கும் போது தட்டிக்கேட்கும் திறன் உள்ளவரை தேர்ந்தெடுங்கள்.
ஓவர் கான்ஃபிடன்ஸ் ட்ராப் (Over-confidence trap)
பல நேரங்களில் முடிவெடுக்கையில் ஓரளவேனும் வருங்காலத்தை கணித்து முடிவெடுக்க வேண்டியிருக்கும். நம் கணிப்புகள் அனைத்துமே சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பல நேரங்களில் நம் கணிப்புகள் தவறாக அமைந்து அதனால் முடிவுகளும் தவறாகிப் போவதுண்டு. இது தெரிந்தும் பலர் வருங்காலத்தை கணிப்பதில் தான் கில்லாடி கிருஷ்ணன் என்று தங்களுக்கு தாங்களே கூறிக்கொண்டு தங்கள் கணிப்பில் அபரிமிதமான நம்பிக்கை வைத்து முடிவெடுக்கின்றனர். இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது. கம்பெனிக்கும் ஆகாது. சமயங்களில் கணிப்புகள் தவறாகிப் போய் முடிவுகள் அநியாயத்திற்கு தவறாகி கம்பெனியையே பாதித்துவிடுகின்றன. ‘நம்பியவன் கழுத்தறுத்தான்’ என்று கேள்விப்பட்டிருப்போம். தன்னையே ஓவராய் நம்பி கழுத்தறுபடுவது இந்த வகை!
அன்றாட வாழ்க்கையில் ஓவர் கான்ஃபிடன்ஸ் ட்ராப்பில் எத்தனை தரம் விழுகிறோம் என்று நினைத்துப்பாருங்கள். வண்டி ஓட்டும் போது டிராஃபிக்கில் கிடைத்த கேப்பில் புகுந்து போய்விடலாம் என்று மற்றவர்கள் செல்லும் வேகத்தை குறைவாய் கணித்து நம் திறமை மீது ஓவர் கான்ஃபிடன்ஸ் வைத்து புகுந்து செல்ல முயற்சிக்கிறோம். சின்னதாய் இடித்து பெரியதாய் சண்டையில் இறங்குகிறோம்.
ரீகாலபிலிடி ட்ராப் (Recallability trap)
வருங்காலத்தையோ, நடக்க இருப்பதையோ கணிக்கும் போது நம்மையும் அறியாமல் கடந்த காலத்தில் அதை சார்ந்த, நம்மை மிகவும் பாதித்த விஷயத்தை கொண்டு கணிக்கிறோம். வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்து (ரீகால்) அதன் தாக்கத்தில் முடிவெடுப்பதால் இதற்கு ரீகாலபிலிடி ட்ராப் என்று பெயர்.
நம்மில் பலர் உடற்பயிற்சி, வாக்கிங் செய்வதில்லை. சேனலை எழுந்து மாற்றச் சோம்பேறித்தனப்பட்டு ரிமோட்டோடு டீவி பார்க்க உட்காரும் கேஸ் தான் பலரும். ஆனால் நமக்கு மிகவும் நெருங்கியவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் மல்லாக்க மூக்கில் குழாயுடன் மூச்சை தவணை முறையில் விடுவதை பார்த்தால் போதும், அடுத்த நாள் முதல் அலாரத்தை நாமே எழுப்பி, அதுவரை வாழ்க்கையில் நடந்ததே கிடையாது என்பது போல் நடக்கிறோம். வீட்டிலுள்ளவர்கள் துரத்தி வந்து ‘போதுங்க, ப்ளீஸ் வீட்டுக்கு வந்திடுங்க’ என்று காலை பிடித்து கெஞ்சும் வரை அசுர வேகத்தில் வாக்கிங் போவோம். சிரிக்காதீர்கள், உண்டா இல்லையா!
கணிப்புகள், பாதிப்புகள்
மனதை பாதிக்கும் நிகழ்வுகள் அதைச் சார்ந்த வருங்கால கணிப்புகளை பாதிக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு ஆராய்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெயர்கள் கொண்ட லிஸ்டுகள் தயாரிக்கப்பட்டன. எல்லா லிஸ்டுகளிலும் சரிசமமான பெயர்கள் இருந்தாலும் சில லிஸ்ட்டுகளில் பிரபலமான ஆண்களின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தது. வேறு சில லிஸ்ட்டுகளில் பிரபலமான பெண்களின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தது. லிஸ்டில் உள்ள பெயர்கள் படிக்கப்பட்டு ஆண்கள் பெயர் அதிகமா, பெண்கள் பெயர் அதிகமா என்று மக்களிடம் கேட்கப்பட்டது. எல்லா லிஸ்டிலும் ஆண்கள், பெண்கள் பெயர்கள் சம அளவில் இருந்தாலும் பிரபலமான ஆண்கள் பெயர் அதிகமிருந்த லிஸ்ட்டை படிக்கக் கேட்டவர்கள் அந்த லிஸ்ட்டில் ஆண்களின் பெயர் அதிகம் இருப்பதாய் கூறினர். பிரபல பெண்கள் பெயர் அதிகம் இருந்த லிஸ்ட்டை கேட்டவர்கள் பெண்கள் பெயரே அதிகம் என்றனர். நம் மனமே நம்மை எப்படி ஏமாற்றுகிறது பார்த்தீர்களா?
நிர்வாக முடிவெடுக்கும் போது ரீகாலபிலிடி ட்ராப்பில் விழாமல் இருக்க ஒரே வழி முடிவெடுக்க தேவையான செய்திகளில் நம் பழைய நினைவுகளின் தாக்கம் அதிகம் இருக்கிறதா என்று சரிபார்த்து முடிந்த வரை முடிவெடுக்க சேகரித்த செய்திகளின் உண்மைத் தனத்தை உறுதி செய்வது தான்.
முடிவெடுக்கும் போது நம்மை முட்டித் தள்ள முயற்சிக்கும் புதைகுழி களில் விழாமல் இருப்பது எளிதல்ல. எடுத்தவுடன் எல்லாருக்கும் இது வந்து விடாது. பிரம்மப் பிரயத்தனப்பட வேண்டும். பாடுபடவேண்டும். இல்லை, இத்தனை கஷ்டப்பட முடியாதென்றால் இருக்கவே இருக்கிறது பல்லாங்குழி போல் புதைகுழிகள். அதில் விழுவது ரொம்பவே ஈசி!
சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!
satheeshkrishnamurthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
49 mins ago
வணிகம்
6 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago