முன் குறிப்பு: இந்த நிகழ்ச்சி, அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம். இங்கிதம் கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப் பட்டுள்ளன.
Global Transcribes கம்பெனி சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கஸ்டமர்கள். அவர்களுக்குக் கம்பெனி அளிக்கும் சேவை Medical Transcription.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளின் நேரங்கள் இந்திய நேரத்திலிருந்து வித்தியாசமானவை. இந்தியாவில் காலை மணி ஆறு ஆகும்போது,
ஆஸ்திரேலியாவில் காலை மணி 10.30
இங்கிலாந்தில் அதிகாலை 1.30
அமெரிக்காவில் (முந்தைய நாள்) மாலை 5.30.
குளோபலில் மொத்தம் நான்கு டீம்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா என்று மூன்று தனித்தனி டீம்கள், ஒரு ஜெனரல் டீம். இந்த நான்கு டீம்களின் வேலை நேரங்களும் கஸ்டமர்கள் தொடர்புகொள்ள வசதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியா டீம் காலை 430 முதல் மதியம் 1230 வரை.
இங்கிலாந்து டீம் மதியம் 1230 முதல் இரவு 830 வரை.
அமெரிக்கா டீம் இரவு 830 முதல் அதிகாலை 430 வரை.
ஜெனரல் டீம் காலை 9 முதல் மாலை 5 வரை.
குளோபல் கம்பெனியில் ஜெனரல் டீமில் தேன்மொழி வேலை பார்க்கிறார். சென்னை கோயம்பேடு அருகே வீடு. வயது 28. காலை 8 மணிக்குக் கிளம்புவார். வீடு திரும்பும்போது மணி ஆறரை ஆகும்.
கணவர் செந்தில் பெரும்புதூரில் இருக்கும் கார் கம்பனியில் சூப்பர்வைசர். காலை ஆறுமணிக்கு வேலைக்குப் போவார், மாலை மூன்று மணிக்குத் திரும்பி வருவார்.
மூன்று வயதில் ஒரே குழந்தை கவிதா. ப்ரீ கேஜி படிக்கிறாள். காலை பத்து மணிக்குள் கொண்டு போய்விடவேண்டும். மாலை மூன்று மணிக்குச் செந்தில் அழைத்து வருவார்.
தேன்மொழியின் அம்மா அவர்களோடு இருந்தார். வீட்டு சமையல், கவிதாவைக் கவனித்துக்கொள்வது அவர் பொறுப்பு. இரண்டு வாரங்களுக்கு முன்னால், தென்காசியில் தேன்மொழியின் அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை. அங்கே போயிருக்கிறார். இரண்டு மாதம் அங்கே இருக்கவேண்டிய கட்டாயம்.
வீடு தலைகீழ் ஆனது. காலையில் எழுந்து, செந்தில் புறப்பட உதவிசெய்து, கவிதாவை டிரெஸ் பண்ணி, சாப்பாடு கொடுத்து, ஸ்கூலில் விட்டு, ஆட்டோ பிடித்து ஒன்பது மணிக்கு ஆபீஸ் போய்ச் சேருவதற்குள் தேன்மொழிக்குத் தாவு வாங்கியது. அவளுக்கும் செந்திலுக்கும் நீண்ட லீவு எடுக்கவே முடியாது. திணறினார்கள். டென்ஷன் எகிறியது. வீட்டில் தினமும் சண்டை.
”சோதனைமேல் சோதனை போதுமடா சாமி” என்று தேன்மொழிக்கு இப்போது இன்னும் ஒரு புது டென்ஷன். அவள் வேலையில் அதி சாமர்த்தியசாலி. ட்ரான்ஸ்க்ரைபர் ஆவதற்கு முன், லாப் டெக்னீஷியன் (Laboratory Technician) படிப்பு முடித்தவர். நோய்களைக் கண்டுபிடிக்கும் பரிசோ தனைச் சாலையில் (Diagnostic Laboratory) இரண்டு வருடம் வேலை பார்த்திருக் கிறார். இந்த அறிவால், அனுபவத்தால், தன் வேலையை விரைவாக, செம்மை யாக முடித்து விடுவார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சம்பள உயர்வு விவரங்களைத் தெரிவித்தார்கள். தேன்மொழிக்கு எக்கச்சக்க ஏமாற்றம். அவர் 20 சதவிகித உயர்வு எதிர்பார்த்தார். கிடைத்ததோ 10 சதவிகிதம் மட்டுமே!
மனசு கொதித்தது. மேனேஜர் ராஜியிடம் கொந்தளிப்பைக் கொட்ட முடிவெடுத்தார். ராஜி ஊழியர்களிடம் அன்போடு பழகுவார். பிரச்சினைக்குப் பரிகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, அவரிடம் மனம் திறந்து பேசினால், டென்ஷன் குறையும்.
மதியம் 3 மணி. தேன்மொழி ராஜியின் அறைக்குள் நுழைந்தார்.
”வா தேன்மொழி, உட்காரு.”
மணியை அழுத்தினார். டீ வந்தது.
”டீ சாப்பிடு.”
இருவரும் டீ அருந்தினார்கள்.
”என்ன விஷயம் சொல்லு தேன்மொழி?”
”மேடம், மேடம்.......”
தேன்மொழிக்குப் பேச்சு வரவில்லை, அழுகைதான் வந்தது.
”ரிலாக்ஸ் தேன்மொழி, கொஞ்ச நாளா நான் உன்னைக் கவனிச்சுக்கிட்டிருக்கேன் நீ எப்பவும்போலக் கலகலப்பா இல்லே. மூஞ்சீலே டென்ஷன். தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனையா இருந்தா, நான் தலையிடறது நாகரிகமில்லே. அதனாலே சும்மா இருந்தேன். நீயே வந்திருக்கே. உன் அக்காமாதிரி என்னை நினைச்சுக்கோ. தைரியமாச் சொல்லு.”
தேன்மொழி மனம் திறந்தார். யாரிடமுமே சொல்லாமல் அடக்கி வைத்திருந்த மனக் குமுறல்கள், ஆதங்கங்கள், அடிமனச் சோகங்கள், எட்டு மணிக்குள் வேலைகளை முடிக்கத் தடுமாறும் மன அழுத்தம், குழந்தை கவிதாவைச் சரியாகக் கவனிக்காமல் ஸ்கூலில் தள்ளும் குற்ற உணர்ச்சி, அத்தனையும் வார்த்தைகளாக, அழுகையாக வெளிவந்தன. தனக்குப் பத்து சதவிகிதச் சம்பள உயர்வு மட்டுமே கிடைத்திருக்கிறது, உயிரைக் கொடுத்து உழைத்தும் கம்பெனி தன் திறமையையும், அர்ப்பணிப்பையும் மதிக்கவில்லை என்கிற வருத்தமான ஆத்திரத்தையும் தயங்காமல் சொன்னார்.
ராஜிக்குத் தேன்மொழியின் வருத்தமும் கோபமும் புரிந்தது. அவர் ஆலோசித்தார், ”தேன்மொழியின் சேவை குளோபலுக்குத் தேவை. அதே சமயம் தேன்மொழிக்கும் குளோபல் வேலை தேவை.” இருவரையும் திருப்திப்படுத்த என்ன செய்யலாம்?
ராஜி எழுந்துவந்தார். தேன்மொழியின் தோளின்மேல் கைவைத்து ஆதரவாக அழுத்தினார்.
”தேன்மொழி, நான் சொல்றதைக் கவனமாக் கேளு. உன் பிரச்சனைகள் எல்லாத்துக்கும் நீ எதிர்பார்க்கிற தீர்வுகள் நான் தர முடியாது. என் நிலைமையை ஓப்பனாச் சொல்லிடறேன். நல்லா திங்க் பண்ணிப் பாரு.
நீ 20 சதவிகிதத்துக்கு முழுக்க முழுக்கத் தகுதியானவள் என்பதில் சந்தேகமே கிடையாது. உனக்குப் பத்து சதவிகிதம்தான் சம்பள உயர்வு தந்திருக்கோம். ஏன் குறைச்சல்ன்னு உனக்கே தெரியும். போன வருஷம் நம்ம அமெரிக்கக் கஸ்டமர்கள் சிலர் பிலிப்பைன்ஸ் கம்பெனிகளுக்கு அவுட்ஸோர்ஸ் பண்ணிட்டாங்க. நம்ம பிஸினஸ் கம்மியாயிடுச்சு. நிறையப் பேருக்கு அஞ்சு சதவிகித இன்க்ரிமென்ட்தான் குடுத்திருக்கோம். பத்து சதவிகிதம் கொடுத்த ரொம்பக் கொஞ்சப் பேர்லே நீ ஒருத்தி. இந்த வருஷம் பிஸினஸ் நல்லா இருக்கு. நல்ல உயர்வு எதிர்பார்க்கலாம்.
உன் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஒரு வழி சொல்றேன். காலையிலே எட்டு மணிக்குக் கிளம்பறதுதான் உன் அடிப்படைப் பிரச்சனை. உன்னை இங்கிலாந்து டீமுக்கு மாத்திடறேன். 1230 மணிக்குத்தான் ஷிஃப்ட். நீ சாவகாசமா வீட்டு வேலை பாத்துட்டு, கவிதாவோடு விளையாடிட்டு, 10 மணிக்கு அவளை ஸ்கூல்லே விட்டாப்போதும். சாயந்தரம் உன் கணவர் அவளை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம். நீ ராத்திரி வீடு போறதுவரை அவர் பாத்துக்கலாம். அப்புறம், இங்கிலாந்து டீமில் சூப்பர்வைசர் ராமு ரெண்டு, மூணு மாசத்தில் வேலையை ரிஸைன் பண்றார். அந்தப் போஸ்ட் உனக்குக் கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கு. நல்லா ஆலோசிச்சுச் சொல்லு.”
”தாங்க்யூ ஸோ மச் மேடம். செந்தில்கிட்டே கேட்டுட்டு நாளைக்கே பதில் சொல்றேன்.”
வெகுநாட்களுக்குப் பின் தேன்மொழி முகத்தில் சிரிப்பு!
பரஸ்பர நம்பிக்கை இருந்தால், எந்தப் பேச்சு வார்த்தையிலும், எல்லோருக்கும் வெற்றிதான், Win-Win தான்!
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
35 mins ago
வணிகம்
6 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago