சினிமா உலகத்தில் ஒரு சென்ட்டி மென்ட் ‘ரஜினி என்ட்ரி சாங் எஸ்பிபி பாடினால் படம் சூப்பர் ஹிட் ஆகும்.’
இந்த அடிப்படையில் எஸ்பிபி-யை ரஜினியின் லக்கி மஸ்கட் (Lucky Mascot) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Mascot என்றால் அதிர்ஷ்டம் கொண்டு வரும் பொருள் அல்லது மனிதன் என்று அர்த்தம். சினிமாவில் மட்டு மல்ல, தொழிலிலும் இத்தகைய முகங்களாக சில மஸ்கட்கள் இருக்கிறார்கள். பொசி ஷனிங்கில் இவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.
1940 காலகட்டம். பெஸ்டன்ஜி எடல்ஜி தலால் (Pestonji Edulji Dalal) என்பவர்தான் இந்தியாவின் பெரிய வெண்ணெய் வியாபாரி. இவருடைய செல்லப் பெயர் பாலி (Polly). இந்தப் பெயரின் அடிப்படையில், தன் தயாரிப்புக்கு பால்சன் (Polson) வெண்ணெய் என்று பெயர் வைத்தார்.
இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு இவர்தான் வெண்ணெய் சப்ளை. ஆகவே, அரசாங்கமும், இவருக்குப் போட்டியே வராதபடி சலுகைகள் தந்தார்கள். குஜராத் மாநிலத்தில் கிராம வீடுகளில் எருமை மாடுகள் வளர்ப்பார்கள். ஆகவே, ஏராளமான பால் உற்பத்தி. மாட்டு சொந்தக்காரர்களிடமிருந்து ஏஜென்டுகள் மூலம் அடிமாட்டு விலைக்கு பாலை வாங்கினார் பாலி.
இந்த அநியாயத்தை ஒழிக்க, சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தில் பால் தயாரிப்பாளர்கள் கூட்டுறவுச் சங்கம் தொடங்க ஊக்கம் கொடுத்தார். 1946 - இல் Kaira District Milk Co-operative Milk Producers Union Limited தொடங்கியது. இது, Gujarat Co-operative Milk Marketing Federation என்னும் மாநிலம் முழுக்கக் கிளைகள் கொண்ட அமைப்பாக வளர்ந்தது.
தயாரிப்புப் பொருட்களுக்கு அமுல் (AMUL) என்னும் பெயர் வைத்தார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் - கூட்டுறவுச் சங்கங்களில் ஒரு அங்கமான Anand Milk Union Limited ன் பெயரில் முதல் எழுத்துகளைச் சேர்த்தால் AMUL என்று வரும், இரண்டாவது காரணம், அமுல் என்றால் சமஸ்கிருத மொழியில் பெரு மதிப்புள்ளது என்று அர்த்தம்.
அமுல் குழந்தை
1946 முதல் அமுல் வெண்ணெய் விற்பனை தொடங்கியது. சந்தையில் கால் ஊன்றிவிட்ட பால்சனோடு அமுல் போட்டி போடத் திணறியது. 1966 - இல் வெண்ணெய் விற்பனை சில லட்சங்களே. அமுல் கம்பெனித் தலைவர் வர்கீஸ் குரியன் (Verghese Kurien) பால்சன் விற்பனையை முந்துவதற்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டார்.
தன் விளம்பர ஏஜென்சியான அட்வர்ட்டைசிங் அண்ட் ஸேல்ஸ் புரமோஷன் கம்பெனி உயர் அதிகாரிகளோடு ஆலோசனைகள் நடத்தினார். ஒரே ஒரு சிக்கல். பால்சன் பணபலம் கொண்டவர். கூட்டுறவு நிறுவனமான அமுல் கம்பெனியிடம் பணவசதி குறைவு. குறைந்த செலவில் மக்கள் மனங்களில் அமுல் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்.
அமுல்,விளம்பர ஏஜென்சி இருவரும் வித்தியாசமாகச் சிந்தித்தார்கள். பொசிஷனிங்கை இரண்டு விதங்களில் உருவாக்கத் திட்டமிட்டார்கள்.
முதல் வியூகம், ஒரு மாஸ்கட். துறுதுறு முட்டைக் கண்கள், குறும்புப் பார்வை, கொழு மொழு கன்னம், மூஞ்சி நிறையக் குறும்பு, வெண்ணெய் திருடும் கண்ணன் மாறுவேடப் போட்டியில் இந்தக் காலப் பெண் குழந்தை வேஷம் போட்டால் இப்படித்தான் இருந்திருப்பான். பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா, பேசும் பொற்சித்திரமே என்று பாசத்தோடு கட்டி அணைத்துக் கொள்ளத் தூண்டும் ஈர்ப்பு. அன்றும், இன்றும், என்றும் நான்கு வயதான இந்தப் பெண்ணுக்குத் தனிப் பெயர் கிடையாது. அமுல் குழந்தை (Amul Moppet) என்றே அழைக்கப் படுகிறாள்.
1966 இல் பிறந்த அமுல் பாப்பாவின் பெற்றோர் - அட்வர்ட்டைசிங் அண்ட் ஸேல்ஸ் புரமோஷன் கம்பெனியின் இயக்குநர் ஸில்வெஸ்ட்டர் டக்குனா (Sylvester DaCunha), ஆர்ட் டைரக்டர் யூஸ்டஸ் ஃபெர்னாண்டஸ் (Eustace Fernandez) ஆகிய இருவரும்.
அமுல் பாப்பாவை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அமுல் வெண்ணெய் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அமுல் தங்களின் இரண்டாம் பொசிஷனிங் வியூகத்தைக் களம் இறக்கினார்கள்.
வித்தியாசமான விளம்பரம்
1967. மும்பையின் சர்னி ரோடு (Charni Road) பகுதி. காலை நேரம். ரோட்டில் ஒரே கூட்டம். ஒரே சப்தம். குடும்பத் தலைவி ஷீலா மானே வெளியே எட்டிப் பார்க்கிறார். அங்கே ஒரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை (Hording) அமுல் விளம்பரம்!
48 வருடங்கள் ஓடிவிட்டன. அமுல் விளம்பரப் பலகைகளின் வெற்றிப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எப்படித் தெரியுமா? பல காரணங்கள்:
மக்களின் நாடித் துடிப்பை முழுக்க முழுக்க உணர்ந்து, நாட்டு நடப்பில் அவர்கள் கவனத்தைக் கொக்கி போடும் தலைப்புச் செய்தியை எப்போதும் கண்டுபிடிக்கும் லாவகம்
செய்திகளின் சூடு கொஞ்சமும் குறையும் முன்னால் பொருத்தமான விளம்பரம் உருவாக்கும் அற்புத டைமிங். யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவைக் குறும்பு செய்தியோடு அமுல் வெண்ணெயை எப்படியோ இணைக்கும் அசகாயக் கற்பனை.
நாயகன்
சில விளம்பரங்களைப் பாருங்கள். அவற்றின் வீரியத்தை உணர்வீர்கள்.
1987-இல் நாயகன் படம் ரிலீஸ் ஆனவுடன் வந்த விளம்பரம். (எழுத்துப் பிழையை மன்னிப்போம்!) 2009. ரஹ்மான். ஆஸ்கர் ஜெயஹோ. சாய்னா நேவால் அண்மையில் உலக பாட்மின்டன் நம்பர் 1 ஆனவுடன்...
புதுமையான உத்தி
இந்த விளம்பரப் பலகைகள் மூலம் அமுல் இன்னொரு புதுமை, இல்லை, இல்லை,. உலக விளம்பர வரலாற்றில் பெரும் புரட்சி செய்திருக்கிறது. விளம்பரப் பலகைகள் எப்போதுமே துணிக் கடைகள், ஹோட்டல்கள், பொருட்காட்சிகள், சினிமாக்கள் போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளை லோக்கல் மக்களுக்குத் தெரிவிக்க மட்டுமே பயன்பட்டுவந்தன.
நாடு முழுக்க விற்பனையாகும் தயாரிப் புப் பொருட்களுக்கு நாளிதழ்கள், பத்திரிகைகள், ரேடியோ, தொலைக் காட்சி ஆகிய ஊடகங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்தப் பொருட்களுக்கு விளம்பரப் பலகை கள் எப்போதாவது உபயோகப் படுத்தப்பட்டாலும், ஒப்புக்குச் சப்பாக, பிற ஊடகங்களோடு கருவேப்பிலை யாகத்தான் பயன்பட்டன.
தேசிய விளம்பரத்துக்கு விளம்பரப் பலகைகள் தகுதி இல்லாதவை என்பது விளம்பர மேதைகளின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை உடைத்தெறிந்த பெருமை அமுலுக்குத்தான். இதில் அனுகூலம் என்ன தெரியுமா? ஒரு தொலைக்காட்சி விளம்பரம் போடுகிற செலவில் நூறு விளம்பரப் பலகை கள் வைக்கலாம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறீர்களா? தயாரிப்புப் பொருளுக்குப் பொருத்தமான மாடல் வேண்டும். விளம்பரம் பிளாக் அண்ட் ஒயிட்டில் வந்தால் யாரும் சீந்த மாட்டார்கள். கலர் விளம்பரம். செலவு எங்கோ....போய் விடும்.
அந்தச் செலவில் எத்தனை எத்தனையோ விளம்பரப் பலகைகள் வைக்கலாம். செலவுக்குச் செலவு மிச்சம். அமுலின் அனுபவத்துக்குப் பிறகுதான் விளம்பரப் பலகைகளின் மவுசு கூடியது.
பால், பால் பவுடர், தயிர், மோர், வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட் என வகை வகையான பால் தயாரிப்புகள். ஆண்டு விற்பனை 14,000 கோடியை எட்டுகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணங்கள்? நான் சொல்லவேண்டாம். உங்களுக்கே தெரியும்.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago