சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவன மான இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனியாக தனது வர்த்தகத்தை தொடங்கவுள்ளது. டெல்லி, மும்பை, குர்கானை தொடர்ந்து பெங்களூருவில் தனது விற்பனையகத்தை தொடங்க வுள்ள டுகாட்டி நிறுவனம் விரைவில் சென்னையிலும் விற்பனை யகத்தைத் தொடங்க உள்ளது.
சூப்பர் பைக்குகளை விரும்பும் இளைஞர்கள், பலருக்கு டுகாட்டி வண்டிகளில் ரேஸ் விட வேண்டும் என்பது நெடுங்கால ஆசை. ஏனைய சூப்பர் பைக்குகளை போல் கனமாக இல்லாமல், காற்றுக்கு என்ஜின் கட்டியது மாதிரியான வடிவங்களை கொண்ட இத்தாலியின் டுகாட்டி யை, இளைஞர்கள் விரும்புவதில் ஆச்சரியமில்லை.
டுகாட்டியின் வரலாற்றை எடுத்து பார்த்தால், அதன் ஆரம்ப கால வர்த்தக முறையும் தற்போதைய வர்த்தக முறையும் நிறைய வித்தியாசப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இத்தாலியின் ஆண்டனியோ கவாலியரி டுகாட்டி என்பவர் தனது மூன்று மகன்களுடன், ‘சொசைட்டா சைண்டிபிக்கா ரேடியோ ப்ரெவெட்டி டுகாட்டி’ என்னும் ரேடியோ தயாரிப்பு நிறுவனத்தை தான் நடத்தினார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் ரேடியோக் களில் பயன்படுத்தப்படுகிற வெற்று குழாய்கள் (vaccum tubes) மற்றும் மின் தேக்கிகளை (condenser) மட்டுமே தயாரித்தனர்.
இதையடுத்து அடுத்தக் கட்டமாக இத்தாலியில் 1936-ம் ஆண்டு ரேடியோ தயாரிப்பு சாதனங்களை தயாரிக்கிற நிறுவனமாக இருந்த டுகாட்டி, இரண்டாம் உலகப்போர் நேரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு கிடைத்த வரவேற்பை உணர்ந்து அவற்றை தயாரிக்க ஆரம்பித்தது. இப்படித் தான் டுகாட்டி மோட்டார்ஸ் தனது வாகன உலகில் அடியெடுத்து வைத்தது. இந்த நிறுவனம் தற்போது ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனத்தின் இத்தாலிய துணை நிறுவனமான லம்போகினியின் கீழ் இயங்கி வருகிறது.
உலகம் முழுவதும் இயங்கி வரும் இந்நிறுவனம், இந்தியா வுக்குள் பிரசிசன்ஸ் மோட்டார்ஸ் துணையுடன் கடந்த 2009-ம் ஆண்டு அடியெடுத்து வைத்தது. இந்தக் கூட்டு ஒப்பந்தம் கடந் தாண்டு ஜனவரி மாதம் முறிந்தது. இதனால் இந்தியாவில் தனித்து இயங்க முடிவு செய்திருந்த இந்நிறுவனம், தற்போது அதற்கான அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
டுகாட்டி மோட்டார்ஸின் துணை நிறுவனமாக டுகாட்டி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கவுள்ளது. டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய இடங்களில் தனது விற்பனை மையத்தை டுகாட்டி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு திறந்துள்ளது. மேலும் விரை விலேயே பெங்களூருவிலும் டுகாட்டி தனது விற்பனை மையத் தை தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக டுகாட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ரவி அவலுர் கூறுகையில், “இந்தியாவில் டுகாட்டியின் தனிப்பட்ட விற்பனை மற்றும் சேவை மையத்தை தொடங்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணமாக இருந்தது. அதற்காக நாங்கள் தயாராக வேண்டிய சூழலும் இருந்தது.
இந்நிலையில் உலக அரங்கில் உள்ள டுகாட்டி விற்பனை மற்றும் சேவை மையங்களுக்கு நிகராக, டுகாட்டி இந்தியா பிரைவேட் நிறுவனமும் தனது சேவையை வழங்கும். உலகளவில் டுகாட்டி சாதித்ததை இந்தியாவிலும் சாதிப்போம்” என்றார்.
இப்படி இந்தியாவில் தனியாக களமிறங்கும் டுகாட்டி, சென்னைக்கு வருமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் பிரசிசன்ஸ் மோட்டார்ஸுடன் இணைந்து டுகாட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்த ‘டுகாட்டி சென்னை’ விற்பனை நிலையத்தின் மூத்த மோட்டார் ஆலோசகர் ராம் கூறியதாவது:
டுகாட்டி மோட்டார் நிறுவ னத்தின் தயாரிப்புகளை இளை ஞர்கள் மட்டுமே வாங்கு வதில்லை. இளைஞர்கள் அதிக ளவில் வாங்கினாலும், 40 வயதானவர்களுக்கு ஏற்பவும் டுகாட்டி வண்டிகள் உள்ளன. எனவே இருபது முதல் நாற்பது வயதை கடந்தவர்கள் பயன்படுத்தும் வண்டி என்று டுகாட்டியை கூறலாம். டுகாட்டிக்கு சென்னையில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வண்டியை பிரசிசன்ஸ் மோட்டார்ஸ் நிறுவ னத்தின் மூலம் தான் டுகாட்டி இந்தியாவில் விற்பனை செய்து வந்தது.
எனவே நாங்கள் பிரசிசன்ஸ் மோட்டார்ஸிடம் இருந்து வண்டிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது டுகாட்டியே தனியாக விற்பனையை மேற் கொள்ளவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மும்பை, டெல்லியை போல் சென்னையிலும் ஏராளமான அளவில் டுகாட்டி பிரியர்கள் உள்ளனர். சென்னையில் உள்ள இளைஞர்கள் பலர் மல்டிஸ்ட்ரேடா மற்றும் மான்செஸ்டார் வகை வண்டிகளை ரொம்பவே விரும்பி வாங்குகிறார்கள்.
எனவே, சென்னையில் உள்ள சாதகமான சூழ்நிலையை உணர்ந்து டுகாட்டி சென்னையிலும் தனது விற்பனையகம் மற்றும் டீலர்களை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
எனவே, பெங்களூருக்கு பிறகு சென்னையிலும் டுகாட்டி விரைவில் தனது ஷோரூமை திறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சர்வீசிங் வசதியும் எங்களிடமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டுகாட்டி சூப்பர் பைக்குகள் இந்தியாவில் மீண்டும் தனித்து விற்பனையாகவுள்ளது குறித்து மோட்டார் ரேஸில் பங்கேற்று வரும் ஆனந்த் என்னும் இளைஞர் கூறுகையில், “டுகாட்டி மோட்டார்ஸின் இந்திய வருகை ரொம்பவே மகிழ்ச்சியை அளிக்கிறது.
டுகாட்டி சூப்பர் பைக்குகளில் ரொம்பவே வித்தியாசமானது. எளிதாக கையாளக்கூடிய மாடல்களில் ஆரம்பித்து புல்லட், யமஹாவுக்கு இணையான கனமான வண்டிகளை டுகாட்டியும் தயாரித்து வருகிறது.
வட இந்தியாவில் மட்டுமன்றி, விரைவிலேயே சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் டுகாட்டி, தனது விற்பனை மையங்களை ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.
வெவ்வேறு வகையான சக்தியுடன் கிடைக்கும் இதன் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை உள்ளது.
manikandan.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago