நமக்கு தோல்வியை பற்றிய பயம் அதிகம்- ஜென்சார் டெக்னாலஜீஸ் கணேஷ் நடராஜன் பேட்டி

By வாசு கார்த்தி

மென்பொருள் கூட்டமைப்பான நாஸ்காமின் முன்னாள் தலைவர், ஜென்சார் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டெக்னாலஜி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதும் எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் கணேஷ் நடராஜன்.

அவரது வாழ்க்கை, எதிர்காலத்திட்டம், மென்பொருள் துறையின் எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து ஜென்சார் நிறுவனத்தின் தலைமையிடமான புனேவில் சந்தித்துப் பேசினோம். அந்த பேட்டியிலிருந்து..

நீங்கள் தமிழராக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்தது போல தெரியவில்லையே?

அப்பா கன்னியாகுமரியில் பிறந்தவர். 14 குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் முதலாவது ஆளாக பிறந்தார். திருச்சியில் படித்தவுடன் கொல்கத்தாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். ஆரம்பத்தில் சில காலம் கொல்கத்தாவில் படித்தேன். அதன் பிறகு அப்பாவுக்கு வேலை மாறுதல் கிடைத்ததால் ராஞ்சிக்கு சென்றோம்.

பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். படித்த பிறகு மேனேஜ்மெண்ட் டிரெய்னியாக கிராம்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு கொல்கத்தாவைச் சேர்ந்த டி.பி.எஸ் நிறுவனம் மும்பையில் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற வாய்ப்பு வந்தது. அங்கு சென்றேன்.

கிராம்டன் கிரீவ்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்த பிறகு எதற்காக சிறிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தீர்கள்?

அங்கே இருந்தால் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கூட ஆகி இருக்கலாம். ஆனால் புதிய வாய்ப்புகள் வரும்போது கொஞ்சம் ரிஸ்க் எடுத்துப் பார்ப்பது எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்கும். அதைவிட நல்ல படிப்பு இருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கூட படிப்பு, வேலை அனுபவத்தை வைத்து இன்னொரு வேலை வாங்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் அந்த ரிஸ்க்கை எடுத்தேன்.

அங்கு சில வருடங்கள் இருந்த பிறகு என்.ஐ.ஐ.டியில் சேர்ந்தேன். அங்கு சில வருடங்கள் இருந்த பிறகு ஆப்டெக் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வர முடியுமா என்று கேட்டாரகள். அப்போது 34 வயது என்பதால் இன்னொரு ரிஸ்க் எடுத்தேன். 2001-ம் ஆண்டு வரை ஆப்டெக்-ல் இருந்தேன். அதன்பிறகு ஜென்சார்.

இதற்கிடையில் நீங்கள் பி.ஹெச்.டி. படித்தீர்கள். 8 புத்தகங்கள், நிறைய கட்டுரைகள் எப்படி சாத்தியமானது?

இதற்கிடையில் பஜாஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்டில் அவ்வப்போது வகுப்பு எடுப்பேன். சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றால் படிக்க வேண்டும். அதில் ஆர்வம் ஏற்படும் பி.ஹெச்.டி. முடித்தேன். இதற்கிடையே கம்ப்யூட்டர் சம்பந்தமான பத்திரிக்கையான டேட்டா குயிஸ்ட்-ல் 20 வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறேன். இதை தவிர நிறைய பத்திரிக்கைகளில் எழுதி இருக்கிறேன்.

மாதத்தில் பாதி நாட்களுக்கு மேல் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் நிறைய நேரம் கிடைக்கும். இந்த இடைவெளியில் நிறைய படித்தேன். படித்ததால் எழுத ஆரம்பித்தேன். கட்டுரைகள் எழுதுவது எளிதாக இருக்கும். ஆனால் புத்தகம் எழுதுவதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருக்கும். இதைவிட எனக்கு எழுதுவது பிடிக்கும்.

உங்களுடைய இலக்கு என்ன?

2020-ம் ஆண்டு முடிவுக்குள் 1 பில்லியன் டாலர் கம்பெனியாக மாறவேண்டும். இப்போதைய நிலைமையில் இரண்டரை மடங்கு வளரவேண்டும்.

வேலை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு வருடத்துக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐ.டி. துறையை நம்பி படிக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தாலும் அதிகபட்சமாக 1.5 லட்சம் மாணவர்களுக்குத்தான் ஐ.டி.துறையால் வேலை கொடுக்க முடியும். அப்படியானால் 10-ல் இருவருக்குத்தான் வேலை என்பதால் மாணவர்கள் தங்களது தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எதோ ஐ.டி. கோர்ஸ் முடித்தால் வேலை கிடைக்கும் என்ற நினைக்க வேண்டாம். முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வேண்டும். We Hire for attitude not skills. அவர்களுக்கு தேவையான அறிவினை நாங்கள் கொடுப்போம்.

ஆனால் ஐ.டி. துறையின் வளர்ச்சி முடிந்துவிட்டது வேலை வாய்ப்புகள் இனி அதிகமாக இருக்காது என்பதை பற்றி..

இப்போதைக்கு ஐ.டி. ஏற்றுமதி 100 பில்லியன் டாலராக இருக்கிறது. அடுத்த 20 வருடங்களில் வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆண்டுக்கு 15 சதவீதம் வரை வளர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் இங்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கம் மற்ற துறைகளை விட அதிகமாகவே இருக்கும். இளைஞர்கள் நல்ல எதிர்காலம், சர்வதேச அளவில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஐ.டி. துறை தான் சிறந்தது.

ஐ.டி. துறையால் மன உளைச்சலுக்கு நிறைய பேர் ஆளாகி இருப்பதாகவும், அதனால் 40 வயதிலே ஓய்வு பெறம் எண்ணத்தில் நிறைய ஐ.டி. பணியாளர்கள் இருப்பதாகவும் செய்திகள் இருக்கிறதே?

40 வயதில் வேலையை விடுவது என்ற எண்ணம் எப்படி பார்த்தாலும் தவறு. அமெரிக்காவில் முடிந்த வரைக்கும் வேலை செய்கிறார்கள். வாழ்வதற்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. கடனே என்று வேலை செய்பவர்களுக்கு இந்த எண்ணம் வரலாம். ஆர்வத்தோடும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்பவர்களுக்கும் இந்த எண்ணம் எப்படி வரும்?

புதிய அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்?

ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவில் விநியோக முறையை மாற்றி அமைக்க வேண்டும். அடுத்து ஊழலை ஒழிக்க வேண்டும். கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும். இதைவிட அரசிடம் ஒரு நிலைத்தன்மை இருக்க வேண்டும்.

ஐ.டி. துறைக்கு என்ன எதிர் எதிர்பார்க்கிறீர்கள்?

அடுத்த கட்ட ஐ.டி. நகரங்களை உருவாக்க வேண்டும். 15 வருடங்களுக்கு முன்பு புனேவில் 2,000 ஐ.டி. பணியாளர்கள் மட்டுமே இருந்தார்கள், இப்போது 2 லட்சத்துக்கு மேலான பணியாளர்கள் இருக்கிறார்கள். இதற்கான கட்டுமானத்தை 40 நகரங்களில் உருவாக்க வேண்டும். அப்போது அங்கிருந்து தொழில்முனைவோர்கள் வருவார்கள். அங்கிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ஆனால் பல ஐ.டி. பார்க்குகள் காலியாக இருப்பதாக பேச்சு இருக்கிறதே.?

நீங்கள் சீனாவுக்கு சென்றால் 70 சதவீத கட்டங்கள் காலியாகத்தான் இருக்கும். கட்டுமானத்தை உருவாக்கினால் மட்டுமே நிறுவனங்கள் அங்கு செல்லும். இப்போதைக்கு 95 சதவீத ஐ.டி. பணி இந்தியாவில் 7 நகரங்களில் மட்டுமே இருக்கிறது.

நாஸ்காம் தலைவராக இருந்தபோது செய்தது என்ன?

இரண்டு விஷயங்கள் செய்தோம். 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை வந்தபோது சிறிய நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டன. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும்? என்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டோம்.

ஐ.டி. துறையை அடுத்து எந்த சிறிய நகரங்களுக்கு கொண்டு செல்லலாம் என்பதை கண்டுபிடித்தோம். பணியாளர்கள், வசதிகள் உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையை தயார் செய்தோம்.

ஐ.டி. துறையில் தொழில்முனைவு எப்படி இருக்கிறது?

இன்னும் சிறப்பாக கூட இருக்க முடியும். தொழில்முனைவோர்களை உருவாக்க நாஸ்காம் 10000 ஸ்டார்ட் அப் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இப்போது பணத்துக்கு பிரச்சினை இல்லை. வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றன. புதிய ஐடியாக்கள் வேண்டும், ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.

நீங்கள் நிறைய நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள். அங்கிருக்கும் தொழில்முனைவோர்களுக்கும் நம்மவர்களுக்கு என்ன வித்தியாசம்?

நமக்கு தோல்வியை பற்றிய பயம் அதிகம். சிலிகான் வேலியில் ஒரு நிறுவனம் வெற்றி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு மூன்று தோல்வியை சந்தித்த பிறகுதான் வெற்றியை ருசித்திருப்பார்கள்.

அமெரிக்காவில் ஒரு பிஸினஸ் தோற்கப்போகிறது, வாய்ப்பு இல்லை என்று தெரிந்துவிட்டால், சீக்கிரம் மூடி விட்டு அடுத்த வாய்ப்பை பார்க்க ஆரம்பிப்பார்கள். ஆனால் நாம் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருப்போம். நம்மை நம்பி நிறைய பேர் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று அதிலேயே இருப்போம். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாது என்று தெரிந்தபிறகு இது போதும் என்ற மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

இரண்டு விதமான சி.இ.ஓ.க்கள் இருக்கிறார்கள். புரமோட்டர்கள், வேலை செய்பவர்கள்? உங்களது முடிவு எடுக்கும் திறன், ரிஸ்க் எடுக்கும் திறன் பற்றி?

பெரிய வித்தியாசம் இல்லை. இயக்குநர் குழுதான் முடிவு எடுக்கும். ஒரு வேளை சி.இ.ஓ. ஒரு முடிவெடுத்து விட்டால், இயக்குநர் குழுவை சமாதானப்படுத்த வேண்டும். அங்கு இருக்கும் ரிஸ்க், என்ன லாபம் என்ன என்பதை இயக்குநர் குழுவிடம் விளக்க வேண்டும். ஒருவேளை அவர் தோற்றுவிட்டால் investment banker தான்.

சி.இ.ஓ.களின் சம்பளம் குறித்த சர்ச்சை நிலவுகிறதே. உங்களின் கருத்து என்ன?

சி.இ.ஓ.களின் சம்பளத்தின் பெரும் பகுதி, வேலையில் செயல்பாடுகள், வெற்றியை பொறுத்துதான் இருக்க வேண்டும். நிர்வாகத்துக்கு வெற்றியை கொடுப்பதுதான் சி.இ.ஓ-வின் வேலை. அதனால் அவர்களுக்கு variable pay அதிகமாக இருப்பது நல்லது.

மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற புராடக்ட் கம்பெனிகள் இந்தியாவில் இருந்து வரவில்லையே?

சில கம்பெனிகள் இருக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முதல் 20 வருடங்களில் நடந்தது. அடுத்து வரும் 10 வருடங்களில் இது நடக்கும். இஸ்ரேலில் 400க்கும் மேற்பட்ட புராடக்ட் நிறுவனங்கள்தான் இருக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவிலும் நடக்கும்.

பொதுவாக ஐ.டி. நிறுவனங்களில் வேலை மாறுபவர்களின் விகிதம் அதிகமாக இருக்கும். உங்கள் நிறுவனத்தில்?

எங்களது நிறுவனத்தில் மிக குறைவு. 9 சதவீதம்தான். அதுவும் முக்கியமான 700 நபர்களில் வெறும் 4 பேர் மட்டுமே கடந்த ஆண்டில் வெளியேறி இருக்கிறார்கள்.

சி.இ.ஓ. ஆனவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?

சி.இ.ஓ. ஆன பிறகு இனி நான் சொல்வதை கேள் என்ற எண்ணம் வேண்டாம். பேசுவதை விட மக்களின் கருத்தை கேட்க வேண்டும். அதன் பிறகு முடிவெடுக்கலாம்.

கார்ப்பரேட் வாழ்க்கை முடிந்த பிறகு அரசிலுக்கு வருகிறார்கள் இல்லை வென்ச்சர் கேப்பிடல் ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்.?

இது இரண்டுமே கிடையாது. இதுவரை நான் என்ன கற்றுக் கொண்டேனோ அதை முடிந்தவரை கற்றுக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன்.

தொடர்புக்கு- karthikeyan.v@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்