போட்டி நெருக்கி நெம்பித் தள்ளும் பிசினஸ் உலகில் பெரிய போட்டியை சமாளிக்க ஜூடோவின் ஆதார தத்துவங்கள் பயன் தரும் விதத்தைப் போன வாரம் பார்த்தோம்.
ஜூடோ உத்தி மூலம் சின்னக் கம்பெனிகள் கூட சிறப்பாய் வளரலாம், ஸ்மார்ட்டாக செயல்பட்டால் பெரிய கம்பெனிகளை ஓரங்கட்டலாம். சமயோஜிதமாய் முயற்சித்து பெரிய பிராண்டுகளை லாடங்கட்டலாம்.
முடியுமா என்று மலைக்காதீர்கள்
எதிராளி தன் முழு பலத்தை பிரயோகிக்கவிடாமல் செய்து அதன் மூலம் வெற்றி பெறுவதே ஜூடோ உத்தி என்கிறார்கள் ‘டேவிட் யோஃபி’ மற்றும் ‘மேரி க்வாக்’.
‘பிசினஸ் ஸ்ட்ரேடஜி’ ஜர்னலில் ‘ஜூடோ உத்தி’ என்ற கட்டுரையில் பெரிய கம்பெனிகளை வெல்ல உதவும் ஜூடோ டெக்னிக்குகளை விளக்கியிருக்கிறார்கள்.
சந்து கிடைக்குமா? சிந்தியுங்கள்
ஜூடோவில், பிசினஸில் வெற்றி பெறுவது ஒரு புறம். அதற்கு முன் குறைந்தபட்சம் அவுட் ஆகாமல் ஆட்டத்தில் இருக்கவேண்டும். பெரிய போட்டியாளரோடு மோதும் போது நேருக்கு நேர் மோதாமல் ஏதாவது சந்து கிடைக்குமா, அந்த சந்தில் சிந்து பாய முடியுமா என்று பார்ப்பது சின்ன கம்பெனிகளுக்கு பயன் தரும். பெரும் வெற்றி பெற்று மார்க்கெட்டை ஆள முடியாவிட்டாலும் சின்னதாய், சிறப்பாய் வாழ முடியும்.
ஷாம்பு மார்க்கெட்டில் இருப்பவை பெரும்பாலும் பெரிய கம்பெனிகள், பன்னாட்டு நிறுவனங்கள், படா சைஸ் பிராண்டுகள். இவர்களோடு நேருக்கு நேர் போட்டியிட்டால் நம்மையே குளிப்பாட்டி நடுவீட்டில் கிடத்திவிடுவார்கள் என்று புரிந்துகொண்ட
‘மெடிகேர்’ ஷாம்பு அதுவரை யாரும் கூறாத பேன் நீக்கும் ஷாம்புவாக தன்னை அறிமுகப்படுத்தியது. சின்ன பேன் சைஸில் சிறிய மார்க்கெட், அதில் ஒரு சின்ன பயல் நுழைந்திருக்கிறான், பிழைத்துப் போகட்டும் என்று படா பிராண்டுகள் சொன்னது ‘டோண்ட் கேர்’. அந்த கேப்பில் புகுந்து, பிழைத்து, தழைத்தது மெடிகேர்!
போர்க்களத்தை நிர்ணயுங்கள்
பெரிய பிராண்டோடு மோதினால் அடிபடும்; அதன் பலத்தோடு நேரடியாக மோதினால் அகால மரணம்தான். அதற்காக புறமுதுகு காட்டி பின்னங்கால் பிடறியில் பட ஓடவேண்டியதில்லை. பெரிய பிராண்டின் பலவீனத்தை தேடிப் பிடித்து அட்டாக் செய்தால் போதும். போட்டியிட நினைக்கும் பொருள் பிரிவின் விஸ்தாரத்தில் போரிட நீங்கள் எந்த இடத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியம்.
சுளுக்கெடுப்பதில் சூப்பர் கிங்கான ‘ஐயோடக்ஸ்’ஸை நேரடியாக மோதினால் நமக்கே சுளுக்கிவிடும் என்பதை புரிந்து கொண்டது ‘மூவ்’. அதனால் ஐயோடெக்ஸ் போல் அழுக்கு பழுப்பில்லாத க்ரீம் கலரில் தன்னை உருவாக்கி ‘மற்றவைகளைப் போல் துணிகளை கரையாக்காது’ என்று ஒரு போடு போட்டது. வெற்றி பெற்று மார்க்கெட்டில் ஒரு ரோடே போட்டது!
ஃபாலோ அப் அவசியம்
கிடைத்த கேப்பில் புகுந்து இடத்தை பிடிப்பது முதல் படி; அங்கு படுக்க பாய் தேடி பெப்பரப்பே என்று பரப்பி செட்டிலாவது அடுத்த படி.
சின்னதாக நுழைவதோடு நில்லாமல் சிறப்பாக வளர ஃபாலோ அப் நடவடிக்கைகள் அவசியம். இல்லையேல் பெரிய பிராண்டுகள் சுதாரித்து உங்களுக்கு சுத்தமாய் சுளுக்கெடுத்துவிடுவார்கள்.
ஷாம்பு பிராண்டுகள் பாட்டில் வடிவில் மட்டுமே இருந்து விலை அதிகமாக, வாங்க வழியில்லாத காலத்தில் சாஷே வடிவில் வந்த ’வெல்வெட்’ ஷாம்பு தன் குறைந்த விலையால் வெற்றி பெற்றது. ஆனால் ஃபாலோ அப் செய்து கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளத் தவறியது.
பெரிய பிராண்டுகளும் சாஷே வடிவில் வரத் துவங்க வெல்வெட் தன் வித்தியாசத்தை தொலைத்து விற்பனையையும் சேர்த்து தொைலத்தது. வெல்வெட்டிற்குப் பின் வந்த ‘சிக்’ ஷாம்பு கிடைத்த முதல் வெற்றி கொடுத்த கிக்கில் கிறங்காமல் நாடெங்கும் விஸ்தரித்து, திறம்பட மார்க்கெட்டிங் செய்து இன்று வரை சிக்கென்று சிறப்பாய் திகழ்கிறது.
எளிதாக வெல்ல...
சில சமயங்களில் போட்டியாளரோடு போரிடாமல் இருப்பது இருவருக்குமே லாபம் என்ற நிலை வரும்.
அப்பொழுது எதிராளியோடு போரிடாமல் பார்ட்னராக முடியுமா என்று பாருங்கள். இந்த டெக்னிக் ‘போட்டியாளரோடு போரிடாமல் எளிதாக வெல்ல மட்டுமல்ல. மார்க்கெட்டில் உங்கள் இடத்தை பாதுகாக்க; கிடைத்த கேப்பில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பலத்தை பெருக்கிக்கொள்ள.
விளையாட்டு டிவி சேனல்கள் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ மற்றும் ‘இஎஸ்பிஎன்’ இரண்டும் போட்டி யிட்டால் விளையாட்டு வினையாகி விடும் என்பதற்காக ஒன்றோடு ஒன்று போட்டியிடாமல் பார்ட்னர்களாக சேர்ந்தே நெடுங்காலம் செயல்பட்டது.
தன்னை மெதுவாக மார்க்கெட்டில் நிலைநிறுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பின் இஎஸ்பிஎன் சேனலை கழட்டிவிட்டு அதுவும் பத்தாது என்று பத்து சேனல்களை அறிமுகப்படுத்தி மார்க் கெட்டையே தன் பிடியில் கொண்டு வந்துவிட்டது. இஎஸ்பிஎன் தன் சேனலை மூடி சொந்த ஊர் போய் சேர்ந்தது!
வளைந்து கொடுங்கள்
ஜூடோவில் பேலன்ஸ் முக்கியம் என்று போன வாரம் பார்த்தோம். போட்டியில் பேலன்ஸ்ஸை இழக்காமல் இருக்க சில சமயங்களில் எதிராளி இழுத்த இழுப்புக்கு ஈடுகொடுக்க வேண்டும். அவன் நம்மை இழுக்க நாம் அதை தடுக்காமல் அவனையே இழுத்தால் அவனல்லவா தலைகுப்புற விழுவான்!
வட மாநிலங்களில் குளிர் காலத்தில் காயும் சருமத்தை ஈரப்பாதமாக்க ‘வேசலீன்’ பயன்படுத்துவார்கள். ஆனால் வேசலீன் பிசுபிசுப்பானது. இதை போட்டியாளர்கள் குத்திக் காட்டினர்.
இதனால் வேசலீன் தன் பிசுபிசுப்புத்தனத்தை நீக்கியிருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. ‘ஆம், எங்கள் பிசுபிசுப்புத்தனத்தால் குறைந்த அளவு உபயோகித்தாலே போதுமானது’ என்று வேசலீன் பதிலடி கொடுக்க மக்கள் வேசலீன் தான் கொடுத்த காசுக்கு மதிப்பு என்று அதற்குத் தாவ வேசலீனின் விற்பனை பின்னியெடுத்தது. போட்டியாளர்களின் விற்பனை தான் பிசுபிசுத்தது!
போட்டியாளரை பலவீனமாக்குங்கள்
போட்டியாளர் எப்பேர்பட்ட பிஸ்தாவாக இருந்தாலும், பலம் கொண்டவரானாலும் அந்த பலத்தையே பலவீனமாக்க முடியுமா என்று பாருங்கள்.
எதைத் தொட்டாலும் எரிந்து சாம்பலாகும் வரம் பெற்று பலம் வாய்ந்த பஸ்மாஸ்வரனை அவன் கையை அவன் தலையில் வைத்து தானே பஸ்பம் ஆன கதையை புராணத்தில் படித்திருப்பீர்கள்.
பகவான் விஷ்ணு அன்று உபயோகித்தது சாட்சாத் ஜூடோ டெக்னிக் தான். அது போல் உங்கள் போட்டியாளரை பஸ்பமாக்கும் வழியைத் தேடுங்கள்.
பெரும் செலவில் நாடெங்கும் கடை திறந்து, கோடிக்கணக்கில் இண்டீரியர் டெகரேஷன் செய்து மக்களை கவர்ந்தது ‘பீட்ஸா ஹட்’. அப்படி செலவழித்து போட்டியிடுவது கடினம்; அப்படி செய்தாலும் பீட்ஸா ஹட் தன்னையே ஹாலபினோ பெப்பர் போட்டு தின்றுவிடும் என்று புரிந்து கொண்டது ‘டாமினோஸ்’.
பீட்ஸா ஹட்டின் பலத்தையே பலவீனமாக்குவோம் என்று சிந்தித்து உட்கார்ந்து சாப்பிடும்படி தன்னை அமைக்காமல் ‘ஹோம் டெலிவரி’ முறையை முன்னிறுத்தியது.
உட்கார்ந்து சாப்பிடும்படி தன்னை கோடிக்கணக்கில் செலவழித்து அமைத்துகொண்ட பீட்ஸா ஹட்டால் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க முடியவில்லை. ஹோம் டெலிவரியில் இன்று டாமினோஸ் தான் டாமினேட்டிங் பிராண்ட்!
இனியும் என்னுடயது சின்ன கம்பெனி, சின்ன பிராண்ட் என்று சால்ஜாப்பு சொல்லாதீர்கள். வெற்றி பெற சிறிய சைஸ் தடையில்லை. தெளிவாய் தெரிந்து, சரியாய் ஜூடோ உத்தியைப் பிரயோகித்தால் பெரிய கம்பெனியை கூட புரட்டிப் போடலாம். படா பிராண்டைக் கூட ஜகா வாங்க வைக்கலாம். ஜோராய் ஜெயிக்க உதவும் ஜூடோ உத்தியை பிரயோகித்தால்!
satheeshkrishnamurthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
36 mins ago
வணிகம்
6 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago