40 ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதுதான் விஜிபி கோல்டன் பீச். ஆனால் இப்போது மக்களின் பொழுதுபோக்குக்கு பல இடங்கள் வந்துவிட்டதால், மக்களின் ரசனையை ஈடுசெய்யும் வகையில் புதுப்பிக்கும் நடவடிக்கையில் இருக்கிறது விஜிபி குழுமம். இந்த நிலையில் போட்டி, அந்த குழுமத்தின் மற்ற தொழில் செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸிடம் பேசினோம். அவருடனான விரிவான பேட்டியிலிருந்து...
பள்ளியில் படிக்கும் போதே, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர். 1980களில் இயக்குநராக இணைந்தார். 1996-ம் ஆண்டு விஜிபி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.
உங்கள் குழுமத்தில் மூன்று பிஸினஸ் இருப்பதால் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக பேசலாம். முதலில் தீம் பார்க். 10, 15 வருடங்களுக்கு முன்பு கோல்டன் பீச் போன்ற தீம் பார்க்குகளுக்கு தேவை இருந்தது. ஆனால் இப்போது ஷாப்பிங் மால், இணையம் போன்ற பல விஷயங்கள் இருக்கிறது. இந்த மறைமுக போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?
நிச்சயம் இது சவால்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு பொழுதுபோக்குக்கும் ஒருவித அனுபவம் இருக்கிறது. உதாரணத்துக்கு சினிமாவுக்கு செல்லும்போது மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கு வரும்போது கிடைக்கும் அனுபவமே தனி. அது பிடித்துவிட்டால் தொடர்ந்து வருவார்கள். அவர்கள் நண்பர்
களுக்கும் பரிந்துரை செய்வர்கள். மேலும் இங்கு வரும் போது தனியாக வர முடியாது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வருவார்கள். அதனால் அவர்களுடனான பிணைப்பு அதிகரிக்கும். அதற்காவும் வருவார்கள். மேலும் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் இரண்டு புதிய விளையாட்டுகளைச் சேர்க்கிறோம். அதனால் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவம் கிடைப்பது போல பார்த்துக்கொள்கிறோம்.
சனி, ஞாயிறுகளில் கூட்டம் வரும். மற்ற நாட்களில் எப்படி?
மற்ற நாட்களில் வெளி ஊர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். உதாரணத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த பலர் குடும்பத்துடன் இங்கு தங்கி இருக்கிறார்கள். அவர்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வருவார்கள்.
உங்களுக்கு பிறகு தீம் பார்க் ஆரம்பித்தவர்கள், மற்ற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்கிறார்கள். தீம் பார்க் ஆரம்பித்தவர்களில் முன்னோடியான நீங்கள் ஏன் அதை செய்ய வில்லை?
1988-ம் ஆண்டு வட சென்னையில் 1,500 ஏக்கர் நிலத்தை வாங்கி தீம் பார்க் ஆரம்பிக்க முயற்சித்தோம். ஆனால் சில காரணங்களால் அதை தொடர முடியவில்லை. அதில் நிறைய பணமும், நேரமும் செலவு செய்து விட்டோம். அது முடியாததால், அதன் பிறகு அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. மேலும் எங்களது முக்கிய பிஸினஸ் ரியல் எஸ்டேட் என்பதால் அதில் கவனம் செலுத்தினோம். எங்களுக்கு பெங்களூருவில் இடம் இருக்கிறது. புதுச்சேரி, இலங்கை ஆகிய இடங்களில் எங்களை தீம் பார்க் ஆரம்பிக்க சொல்லி கேட்கிறார்கள். வருங்காலத்தில் பார்ப்போம்.
கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ரீடெய்ல் பிரிவில் நீங்கள்தான் முன்னோடி. ஆனால் உங்களுக்கு பிறகு ஆரம்பித்தவர்களின் பெருமளவு சந்தையை வைத்திருக்கிறார்கள். அதில் ஏன் நீங்கள் விரிவாக்கம் செய்யவில்லை?
10 வருடங்களுக்கு முன்பு 8,000 ரூபாய்க்கு குளிர்சாதன பெட்டி விற்றால் 200 ரூபாய் கிடைக்கும். இந்த பிஸினஸில் கிடைக்கும் லாப வரம்பு குறைவு என்பதால் இதில் விரிவாக்கம் செய்யவில்லை. போட்டி அதிகமானதால் சமயங்களில் நஷ்டம் கூட வரலாம். மேலும் இப்போது ஆன்லைன் நிறுவனங்களும் வந்துவிட்டதால் இதுபோன்ற நிறுவனங்களில் இனிமேலும் சிறப்பாக செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. லாபத்துக்குதான் தொழில் செய்ய முடியும்.
தவணை முறையில் பொருள் கொடுப்பதில் நீங்கள் முன்னோடி. உங்களிடம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். இதை வைத்து ரீடெய்ல் துறையில் இன்னும் பெரிதாக வளர்ந்திருக்கலாமே?
அப்போது, வாடிக்கையாளர்கள் எங்களிடம் பணம் கொடுப்பார்கள். 12 மாதத்துக்கு பிறகு எங்களிடம் பொருட்கள் வாங்குவார்கள். ஆனால் வங்கிகள்/நிதி நிறுவனங்கள் இதற்கு நிதி கொடுக்க ஆரம்பித்த பிறகு பொருட்கள் வாங்கிக்கொண்டு கடனை செலுத்த ஆரம்பித்தார்கள். தொழில் வடிவம் மொத்தமும் மாறிவிட்டது. அதன் பிறகு எங்களது தவணை முறைக்கு வேலை இல்லை. எங்களிடம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக வங்கி செய்யும் வேலையையும் எங்களால் செய்ய முடியாது.
ரீடெய்ல் ஷோரூம் இருக்கும் அனைத்தும் உங்களுடைய சொந்த கடைகளே. அப்படியானால் குறைந்த லாபம் கொடுக்கும் இந்த பிஸினஸை செய்வதை விட அந்த இடத்தை வேறு வழியில் பயன்படுத்தலாமே?
வாடிக்கையாளர்களுடன் உறவு இருக்க வேண்டும் என்பதற்காக சில கடைகள் வைத்திருக்கிறோம். வருங்காலத்தில் இவற்றை எப்படி பயன்படுத்த முடியும் என்று பார்ப்போம்.
ரியல் எஸ்டேட்தான் உங்களது முக்கிய பிஸினஸ் என்று சொன்னீர்கள். இப்போது நிலைமை எப்படி இருக்கிறது. ஒரு லே அவுட் முழுவதும் விற்க எவ்வளவு காலம் ஆகும்?
2006 முதல் 2009 முதல் மந்தமாக இருந்தது. ஆனால் இப்போது நல்ல நிலங்களுக்கு தேவை இருக்கிறது. மேலும் ஒரு லே அவுட்டை முழுவதும் விற்க நினைக்க மாட்டோம். பகுதி பகுதியாகதான் விற்போம். 50 சதவீத வீட்டுமனைகள் வேகமாக விற்போம். எப்படி இருந்தாலும் ஒரு வருடத்துக்கு 10 சதவீதம் வரை விலை உயர்கிறது. 1990களில் போட்ட லே அவுட்களில் இப்போது கூட எங்களுக்கு நிலம் இருக்கிறது.
வீடு கட்டும் பணியையும் நீங்களே செய்தால் என்ன?
1995களில் இதை செய்தோம். அப்போது வீடுகளுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. அதனால் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டு இந்தியர்களை தேடி விற்றோம். அதில் சில சிரமங்கள் இருந்தது. அதனால் நிலங்களை விற்பதில் மட்டும் கவனம் செலுத்தினோம்.
30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் இப்போது பல மடங்கு வளர்ந்திருக்கின்றன. உங்களின் வளர்ச்சி போதுமானது என்று நினைக்கிறீர்களா?
இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம். ஆனாலும், எங்களின் ஆரம்ப கட்ட நிலையை விட இப்போது வளர்ந்திருக்கிறோம். எங்களுடைய வளர்ச்சியில் எங்களுக்கு மகிழ்ச்சியே. மேலும் நாங்கள் சீராக வளரவே விரும்புகிறோம்.
விஜிபி என்ற பிராண்ட் மக்களிடையே பிரபலமாக இருக்கிறது. இந்த பெயரை வைத்து வருங்காலத்தில் என்ன செய்ய போகிறீர்கள்?
அதற்கான திட்டங்களை தீட்டி வருகிறோம். அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில் இது குறித்து முறையாக அறிவிப்போம்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago