விளம்பரங்களுக்கு நாங்கள் செலவு செய்வதில்லை: ஹாட் சிப்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.வாசுதேவன் பேட்டி

By வாசு கார்த்தி

38 வயது வணிகவியல் உதவி பேராசிரியர் தன்னுடைய 6,500 ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு 1990களி்ல் ஆரம்பத்தில் உணவு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். இன்று இந்த நிறுவனம் 65 கோடி ரூபாய் அளவுக்கு ஆண்டுக்கு வருமானம் கொடுக்கும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அந்த உதவி பேராசிரியர் ஆர்.வாசுதேவன். அவர் உருவாக் கிய நிறுவனம் ஹாட் சிப்ஸ்.

சென்னையில் 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஹாட்சிப்ஸ் நிர்வாக இயக்குநரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து.

உங்களுடைய வெற்றி கதை அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நீங்கள் செய்த தவறு எதையாவது பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஆரம்பத்தில் சிப்ஸ்/சாட் நிறுவனம் நடத்தி வந்தோம், அது வெற்றி. அடுத்து ஓட்டல் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தோம். இது என்ன என்பதே தெரியாது.

அனுபவம் இல்லை. நாங்கள் திட்டமிடவில்லை, சரியான இடத்தை தேர்வு செய்யவில்லை. மேலும் அந்த இடம் சிறியது. ஆகிய காரணங்களால் 11 மாதங்களில் அந்த ஓட்டலை மூடிவிட்டோம். அதன் பிறகு 4 வருடங்களில் மீண்டும் திட்டமிட்டு பாஸ்ட்புட் ஆரம்பித்தோம்.

இன்னும் ஏன் பிரான்ஸைசி கொடுக்கவில்லை?

சிப்ஸ், சாட் இருக்கும்போது திருச்சி உள்ளிட்ட இடங்களில் பிரான்ஸைசி கொடுத்தோம். ஆனால் அது அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. அதனால் நிறுத்திவிட்டோம். இப்போது இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் கூட பிரான்ஸைசி கேட்கிறார்கள். நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் போது பிரான்ஸைஸியா அல்லது வேறு வழிகளில் விரிவாக்கம் செய்யலாமா என்பதை அப்போது முடிவு செய்வோம்.

ஹோம் டெலிவரி / ஆன்லைன் விற்பனை செய்யும் திட்டம் இருக்கிறதா?

விரைவில் ஹோம் டெலிவரி ஆரம்பிக்கபோகிறோம். ஆனால் ஆன்லைன் இப்போதைக்கு இல்லை. ஆன்லைன் மூலம் விற்கும் போது டெலிவரி செய்யும் இடம் எங்கேயாவது இருக்கும். அதற்கு ஏற்ப பேக்கேஜ் செய்ய வேண்டும். அனைத்து வகையான சட்னி, சாம்பார் பேக்கேஜ் செய்யவேண்டும். உணவு கட்டணத்தை விட பேக்கேஜ் கட்டணம் அதிகமாகிவிடும். அதனால் ஆன்லைன் மூலம் விற்பனை கிடையாது.

உணவு தயாரிப்புக்கு எப்படி திட்டமிடுவீர்கள்? எவ்வளவு பொருட்கள் வீணாகும்? எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள்?

எங்களுடைய அனுபவத்தை வைத்து முடிவெடுக்கிறோம். சனி, ஞாயிறுகளில் இரு மடங்கு உற்பத்தி செய்வோம். புத்தாண்டு உள்ளிட்ட விழாக்களில் உற்பத்தி மூன்று மடங்கு இருக்கும். இருந்தாலும் உணவு பொருள் வீணாகாமல் பிஸினஸ் செய்யமுடியாது. உற்பத்தியில் 5 சதவீதம் வரை வீணாகும். இதை முடிந்தவரை குறைக்கப்பார்க்கிறோம்.

இந்த துறைக்கு பணியாளர்கள் தான் முக்கியம். ஆனால் வேலை மாறுபவர்கள் இங்குதான் அதிகம். எப்படி சமாளிக்கிறீர்கள்?

சம்பளத்தை சரியான தேதியில் கொடுப்பது, வருட போனஸ், ஆண்டு சம்பள உயர்வு, பி.எப். உள்ளிட்ட விஷயங்களை சரியாக கொடுக்கும் போது 75 சதவீத ஆட்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். தவிர அவர்கள் விரும்புவது வார சம்பளம் என்பதால் அதையும் கொடுக்கிறோம்.

ஆனாலும் இந்த துறையில் கற்றுக்கொள்வது எளிது. அதனால் கற்றுக்கொண்டு வெளியே செல்லப்பார்ப்பார்கள். அதேபோல வெளியில் இருந்தும் ஆட்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள்.

வார சம்பளத்துக்கு பதில் மாத சம்பளம் கொடுக்கும் போது வெளியேறுவோரை தடுக்க முடியுமா?

மாத சம்பளம் கொடுத்தாலும் குறையும் என்று நினைக்க வில்லை. ஆரம்பத்தில் மாத சம்பளம்தான் கொடுத்தோம். ஆனால் மாத கடைசியில் பலர் அட்வான்ஸ் கேட்பதால், அந்த கணக்கை பராமரிப்பதற்கு பதில் வாரச்சம்பளம் கொடுக்க முடிவு செய்தோம்.

முறை சாரா நிறுவனங்களின் போட்டி எப்படி இருக்கிறது?

அவர்கள் எங்களுக்கு போட்டி இல்லை. எங்கள் இலக்கு நடுத்தர மக்கள்தான். ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிவிட்டதால், அவர்கள் அதுபோன்ற கடைகளுக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு இடத்துக்கும் எங்களை போன்றே நடுத்தர மக்களுக்காக நடத்தப்படும் ஓட்டல்கள் அதிகமாகிவிட்டன.

விளம்பரங்களுக்கு நீங்கள் செலவு செய்வதுபோல தெரியவில்லையே?

கிட்டத்தட்ட எங்களது விளம்பர செலவுகள் புஜ்ஜியம். மேலும் எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. எங்களது உணவுகள் விலை குறைவாக இருக்கும். மேலும், நாங்கள் குறைவான லாப வரம்பில் செயல்படுகிறோம். விளம்பரங்களுக்கு செலவிடும் போது, அதனை உணவு பொருளின் விலையில்தான் ஏற்றியாகவேண்டும். மேலும் ஒரு முறை விளம்பரம் மூலம் வாடிக்கையாளரைக் கொண்டுவரலாம் ஆனால் அடுத்த முறை..? தரமாக இருந்தால் மட்டும்தான் வருவார்கள். தவிர ஒரு முறை விளம்பரங்களுக்கு செலவு செய்துவிட்டால், புலிவால் பிடித்த கதைதான். ஒவ்வொரு வருடமும் விளம்பரத்துக்கு பட்ஜெட் ஒதுக்கியாக வேண்டும்.

மேலும், குரோம்பேட்டையில் இருந்து தி. நகர் வந்து யாரும் சாப்பிட மாட்டார்கள். அதனால் புதிதாக ஒரு கடை ஆரம்பிக்கும் போது அந்த பகுதியில் விளம்பரம் செய்வோம். அவ்வளவுதான்.

மேலும் சைவ உணவகத்தில் சராசரியாக ஒரு பில் தொகை 50 ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும். அதனால் இப்போதைக்கு விளம்பரம் தேவை இல்லை. வாய்வழியாக கிடைக்கும் விளம்பரம் போதும். விளம்பரத்துக்கு செய்யும் ஒரு ரூபாயை, பொருட்களின் விலையைக் குறைக்கும்பட்சத்தில் அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

ஆனால், தமிழகம் முழுவதும் கிளைகள் ஆரம்பிக்கும் போது விளம்பரத்துக்கு தொகை வேண்டி இருக்கும் என்பதை மறுக்கவில்லை.

உங்களது பிராண்ட் லோகோவில் எப்படி கருப்பு வண்ணத்தை பயன்படுத்தினீர்கள்?

சர்வதேச அளவில் கருப்பு பலவகையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம்தான் பயன்படுத்தவில்லை. கருப்பு - சிவப்பு, கருப்பு - மஞ்சள், கருப்பு -வெள்ளை மூன்று வகைகளில் எழுதிபார்த்து மஞ்சள் சிறப்பாக இருந்ததால் மஞ்சளை தேர்ந்தெடுத்தோம். இப்போது இந்த காம்பினேஷனைதான் அனைத்து வடிவங்களிலும் பயன்படுத்துகிறோம்.

backward integration மூலமாக மற்ற துறைகளில் ஈடுபடும் திட்டம் இருக்கிறதா?

ஒரு ஓட்டலுக்கு 250 வகையாக பொருட்கள் தேவைப்படுகின்றன. அதாவது அவ்வளவு துறைகளில் இறங்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை. நாங்கள் இருவரும் ஆசிரியர் என்பதால் ஓட்டல் நிர்வாக படிப்பு கல்லூரி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது.

உங்கள் நிறுவனத்தில் வென்ச்சர் கேபிடல் முதலீடு இருக்கிறதா? வேறு நிறுவனத்தால் உங்களை கையகப்படுத்த நினைத்தார்களா?

இதுவரை யாரும் எங்களை வாங்கவேண்டும் என்று வரவில்லை. (இருந்தால் அழைத்துவாருங்களேன் என்றார் சிரித்தபடி.)

வங்கி மூலமாகதான் பிஸினஸ் நடத்திவருகிறோம். சென்னை மற்றும் மும்பையில் இருக்கும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருந்தார்கள். இருந்தாலும் இப்போதைய நிலைமையில் அதனைத் தவிர்த்துவிட்டோம். இப்போது வரை இது குடும்ப நிறுவனமாகத்தான் இருக்கிறது.

500 கோடி விற்பனை வரும் போது அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்கலாம். பிரான்ஸைசி அல்லது பிரைவேட் ஈக்விட்டி. இதில் அடுத்த தலைமுறை என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்