தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் தொழில் தொடங்குவதே சிரமமாக இருக்கும் இந்தக் காலத்தில் லைசென்ஸ் ராஜ் இருந்தபோது தொழில் முனைவோராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் ராமசாமி. ஆரம்பத்தில் ஹார்ன் தயாரிப்பில் இருந்த இவரது நிறுவனம் பல விதமான தொழில்களில் இறங்கி இருக்கிறது. ஆரம்பகட்ட தொழில் வாழ்க்கை, ஓய்வு, புதிய அரசிடம் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு என பல விஷயங்களை பற்றி கோவையில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். அந்த உரையாடலிலிருந்து...
உங்களை பற்றி?
இதே ஊர்தான்(கோவை, கணபதி). விவசாய குடும்பம். அப்பா சுதந்திரா கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். இங்கேதான் படித்தேன். எனக்கு ஆட்டோமொபைலில் ஆர்வம் அதிகம். அப்பாவின் காரை சர்வீஸ் செய்வது, ஆட்டோ துறை சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பது என பள்ளியில் இருக்கும் போதே ஆர்வம். இதற்கு என் அப்பாவும் காரணம். அவர் அதிக பயணம் செய்வார்.
ஹார்ன் மீது உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?
அப்பாதான் காரணம். இந்திய காரை வாங்குவார். ஆனால், ஹார்ன் மட்டும் ஜெர்மனியில் (போஷ் நிறுவனம்) இருந்து இறக்குமதி செய்வார். அவரிடம் கேட்ட போது, இந்திய ஹார்ன்கள் நிறைய இருந்தாலும், அவற்றை அடிக்கடி சர்வீசுக்கு விட வேண்டி இருந்தது. அவருக்கு இருந்த வேலையில் அது சாத்தியம் இல்லை. அதனால், ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்தார். அப்போது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வந்த ஆர்வம்தான். ஏன் தரமான ஹார்ன் தயாரிக்க முடியாதா என்று யோசித்தேன். படிக்கும் போது, வொர்க் ஷாப்புக்குச் சென்று, அங்கிருக்கும் பழைய ஹார்ன்களை எடுத்து ஆராய்ந்து கொண்டிருப்பேன்.
அதன் பிறகு கோவை சி.ஐ.டி. மெக்கானிகல் சான்விட்ச் (பாதி நேரம் படிப்பு, பாதி நேரம் வேலை செய்ய வேண்டும்) பாலிடெக்னிக் சேர்ந்தேன். ஆனால் இதை பள்ளியில் படித்தேன். மேலும் வேலை செய்தது, கற்றுக்கொண்டது எல்லாவற்றையும் பார்க்கும் போது படித்ததையே மீண்டும் படிப்பது போல ஒரு எண்ணம். அதனால் இரண்டு வருடத்திலே பாதியில் விட்டுவிட்டு நியுஜெர்சியில் இருக்கும் Lincoln Technical Institute-ல் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் சேர்ந்தேன். என்னுடைய திட்டம் எலெக்ட்ரிக் ஹார்ன் மற்றும் பவர் பிரேக் தயாரிக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.
வெளிநாடு சென்று படிப்பது இப்போது எளிதாக இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்தில் அமெரிக்காவில் ஒரு இன்ஸ்டிடியூட் இருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்.?
ஆட்டோமொபைல் சார்ந்த வெளிநாட்டு பத்திரிகைகளான ஆட்டோகார், பாப்புலர் சயின்ஸ், பாப்புலர் மெக்கானிக்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளை படிப்பேன். அதில் இப்படி இன்ஸ்டிடியூட் இருப்பது தெரியவந்தது. அப்பாவிடம் சொன்ன போது, இப்போது வேண்டாம் இன்னும் சில காலத்துக்குப் பிறகு செல்லாம் என்றார். இங்கே இருந்து நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை. போய்விட்டுத் திரும்ப வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். இப்போது போல எளிதாக செல்ல முடியாது. ரிசர்வ் வங்கியிடம் அனுமதி வாங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதுவரை விமானத்தில் பயணித்ததே இல்லை. முதல் பயணமே வெளிநாட்டுக்குத்தான். அது தனிக்கதை.
அங்கு படிக்கும் போது பகுதி நேரமாக வேலை செய்தேன். learn as well as to earn. படித்துவிட்டு ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் ஆறு மாதம் வேலை செய்தேன். அதன் பிறகு தொழிற்சாலை தொடங்க இந்தியாவுக்கு வந்துவிட்டேன்.
22 வயதில் இந்தியாவுக்கு வந்துவிட்டீர்கள், அப்போது லைசென்ஸ்ராஜ் இருந்தது, எப்படி தொழில் தொடங்க தைரியம் வந்தது? வீட்டில் என்ன சொன்னார்கள்?
அப்பா நிறைய பரிசோதனை முயற்சியில் ஈடுபடுவார். நிறைய சம்பாதிக்கவும் செய்தார், நிறைய இழக்கவும் செய்தார். அதனால் இதற்கு எதுவும் சொல்லவில்லை. எடுத்த உடனேயே தொழிற்சாலை ஆரம்பிக்காமல் ஆட்டோமொபைல் துறையில் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, பகுதி நேரமாக எலெக்ட்ரிக் ஹார்ன் டெவலப்மென்ட் வேலையில் ஈடுபடலாம் என்பதுதான் என் திட்டம். ஆனால் என் அப்பாவின் நண்பர் ஒருவர் இது வேண்டாம். உன் அப்பா இங்கு பிரபலமான நபர். அதனால் சேவைத் துறையில் ஈடுபட்டால், பணத்தை வாங்குவது கஷ்டம் என்றார்.
எலெக்ட்ரிக் ஹார்ன் தயார் செய்வது அவ்வளவு கஷ்டமா?
சத்தம் வரப்போகிறது இதற்கு என்ன ஆராய்ச்சி என்று நினைக்க தோன்றும். ஆனால் நான் நினைத்த தரத்தில் ஹார்ன் தயாரிக்க முடியவில்லை. மேலும், இப்போது போல ஒரு பொருள் அவ்வளவு எளிதில் கிடைக்காது. வெளிநாட்டுக்கு எழுதி போட்டு அவர்கள் இருக்கு, இல்லை, முடியும், முடியாது என்று சொல்வதற்கே ஒரு மாதம் ஆகிவிடும். இப்படியே 3 வருடம் ஓடிவிட்டது.
இதற்கு மேலும் இதைத் தொடர்ந்து செய்வதை விட வேறு எதையாவது செய்ய வேண்டும். என்று டிராக்டர் ஏஜென்சி எடுத்தேன்.
கூடவே பவர் பிரேக் தயாரித்தேன். சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில் 1973-ம் ஆண்டு பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 1.50 ரூபாயில் இருந்து 3 ரூபாய்க்கு உயர்ந்தது. அப்போது மிகப்பெரிய நஷ்டம்.
சரி எலெக்ட்ரிக் ஹார்ன் தயாரிப்பை விட்டு விட்டு, ஏர் ஹார்ன் தயாரிக்கலாம் என்று சந்தையில் கொண்டு சென்றால் சந்தையில் ஏகப்பட்ட போட்டி. விற்க முடியவில்லை.
சந்தையில் எதையாவது புதிதாக செய்யாவிட்டால் நம்முடைய பொருளை யாரும் வாங்க மாட்டார்கள் என்று முடிவெடுத்து electrically operated air horn தயாரித்து விற்கும்போது சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
முதல் வெற்றியை அடைய எவ்வளவு காலம் ஆகியது?
என்னுடைய திட்டம் எலெக்ட்ரிக் ஹார்ன் தயாரிப்பதுதான். ஆனால் இப்போது electrically operated air horn தான் தயாரித்திருக்கிறேன். 1971-ல் ஆரம்பித்து 1975-ம் ஆண்டு ஆகிவிட்டது. 1982-ம் ஆண்டுதான் நான் நினைத்த எலெக்ட்ரிக் ஹார்னை தயாரிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 11 வருஷம்.
லைசென்ஸ்ராஜுக்கும் இப்போதைய நிலைமைக்கும் என்ன வித்தியாசம்?
லைசென்ஸ்ராஜ் இருக்கும்போது, ஒரு பிஸினஸ் ஆரம்பிப்பது கஷ்டம். ஆனால் தொழில் ஆரம்பித்துவிட்டால் பாதுகாப்புதான். ஆனால் இப்போது தொழில் ஆரம்பிப்பது எளிது, ஆனால் தொழிலைத் தொடர்ந்து நடத்துவது சிரமம். அதனால்தான் 1991-ம் ஆண்டு தாராளமயமாக்கல் வந்தபோது, இந்தியாவுக்கு நிறைய பொருட்கள் வந்தது. அதனால் ஏற்றுமதி செய்யாமல் நிலைக்க முடியாது என்று முடிவெடுத்து நாங்களும் ஏற்றுமதி செய்தோம்.
ஏற்றுமதி செய்வது எளிதாக இருந்ததா?
ஆரம்பத்தில் மிகுந்த சவாலாக இருந்தது. 1982-ம் ஆண்டிலே முயற்சி எடுத்தேன். அதன் பிறகு 92-ம் ஆண்டு பிராங்பர்ட் கண்காட்சிக்கு சென்றேன். எங்களது பொருட்கள் நன்றாக இருந்தாலும், வெளிநாட்டு பொருட்களுடன் ஒப்பிடும்போது எங்களது ஹார்ன்கள் விலை 25 சதவீதம் அதிகமாக இருந்தது. காரணம் இங்கு இறக்குமதி வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காரணமாக விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு மீண்டும் இங்கு வந்து எங்களது பொருட்களை குறைந்த விலையில் எப்படி தயாரிக்கலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். 30 சதவீத அளவுக்கு குறைந்த விலையில் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு 94-ம் ஆண்டு சென்றால் அப்போதும் அவர்கள் பொருட்களின் விலை குறைந்திருந்தது. இருந்தாலும் நாங்கள் 30 சதவீதம் என்ற இலக்கை நிர்ணயம் செய்ததால் அவர்களுடன் போட்டி போடமுடிந்தது. முதலில் ஜப்பானுக்குத்தான் ஏற்றுமதி செய்தோம். அது சவாலாக இருந்தது. இருந்தாலும் நிறைய கற்றுக்கொண்டோம். இப்போதைக்கு உற்பத்தியில் 40 சதவீதம் ஏற்றுமதி செய்கிறோம்.
நடுத்தர மக்களின் வருமானம் அதிகரித்ததன் காரணமாக ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. ஆனால் இப்போது 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி இருக்கும். ஆனால் முன்பு இருந்ததைப் போல இருக்காது. 0.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
புதிதாக வர இருக்கும் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
முதலில் நிலையான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு முடிவை எடுத்து அதன் பிறகு அதை மாற்றுவது. அதுமட்டுமல்லாமல் முன் தேதியிட்டு கொள்கை முடிவுகளை மாற்றுவது என இருக்காமல் நிலையான கொள்கை முடிவு எடுத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.
அடுத்து, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். நிறைய இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாகவும், வேலை செய்ய தயங்குபவர்களாகவும் அரசுகள் மாற்றி இருக்கின்றன. இதனால் விவசாயம் மற்றும் தொழில்துறையில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. அதற்காக இலவசமே வேண்டாம் என்று சொல்லவில்லை. வயதானவர்களுக்கு, முடியாதவர்களுக்குக் கொடுக்கலாம். வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். தேசிய திறன் மேம்பாட்டு மையம் செயல்பட்டால் கூட வேலை செய்ய ஆட்கள் வேண்டுமே. ஏகப்பட்ட வரி விதிப்பு முறைகள் இருக்கின்றன. அதைக் குறைக்க வேண்டும். நடுத்தர மக்கள் செலவழிக்காமல் வரி செலுத்துவதிலேயே அவர்களது வருமானம் போய்விடுகிறது. நடுத்தர மக்கள் செலவழித்தால் பொருளாதாரம் வளரும்.
இருக்கும் துறைகளிலே ஆட்டோமொபைல் துறையில் நடைபெறும் 'லாபி' தான் அதிகம் என்று சொல்லுவார்கள். இதை பற்றி?
இந்த லாபிகள் தங்களது சொந்த நலனுக்காகவே நடக்கிறது. மேலும் உலக பொருளாதாரத்தையும் இந்த லாபி பாதிக்கிறது. உதாரணத்துக்கு அமெரிக்காவில் இந்த லாபி அதிகம். இதனால்தான் அமெரிக்காவில் பொதுப்போக்குவரத்து மிகவும் குறைவு. அனைவரும் கார்களை பயன்படுத்தும் போது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட உலக இயற்கை வளத்தை அழிக்கிறோம்.
அரசாங்கம் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்கும்போது, தேவைப்படுபவர்கள் மட்டுமே வாகனங்களை வாங்குவார்கள். உங்களுக்கு 65 வயதாகிறது. இன்னும் ஏன் ஓய்வு பெறாமல் நீங்களே நிறுவனத்தை நடத்துகிறீர்கள். கார்ப்பரேட் முறையில் நடத்தாமல் இன்னும் நீங்களே தலைவராக இருக்கிறீர்களே.?
நிறுவனத்தை புரபெஷனல்கள்தான் நடத்துகிறார்கள். நான் தலைமை வகிக்கிறேன். மேலும், ஆர் அண்ட் டி உள்ளிட்ட விஷயங்களில்தான் நான் கவனம் செலுத்துகிறேன். இப்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. எவ்வளவு நாள் வேலை செய்ய முடியுமோ அவ்வளவு நாள் வேலை செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.
உங்கள் நிறுவனத்தை ஏன் பட்டியலிடவில்லை?
நான் பட்டியலிடும்போது முதலீட்டாளர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டி இருக்கும். ஒவ்வொரு காலாண்டுக்கும் லாபத்தைக் காண்பிக்க வேண்டி இருக்கும். சில காலாண்டுகள் நல்ல முடிவு இருக்கும். சமயங்களில் எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் பட்டியலிட்டால் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை காண்பிக்க வேண்டி இருக்கும்.
இளம் தொழில்முனைவோர்கள், தொழில் முனைவு எண்ணம் இருப்பவர்களுக்கு ஒரு மென்ட்ராக நீங்கள் சொல்ல விரும்புவது?
முதலில் இப்போதைய இளைஞர்கள் நிறைய படிக்கிறார்கள். சந்தோஷமான விஷயம். ஆனால் படித்துவிட்டதாலேயே உடல் உழைப்பு சம்பந்தமான வேலையை செய்ய மாட்டேன் என்று சொல்வது எப்படி சரியாகும். அந்த எண்ணம் மாறவேண்டும். முதலில் வேலை செய்து ஒரு அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தோல்விகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும். ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், அதை எப்படி சரி செய்வது என்ற நிதி திட்டம் வைத்திருக்க வேண்டும்.
அடுத்தது பணம் சம்பாதிப்பதற்காக தொழிலுக்கு வர வேண்டாம். பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும்போது, அது உங்களை தவறான பாதையில் கொண்டு சேர்த்துவிடும். உங்களது ஐடியா புதிதாக இருக்க வேண்டும். மேலும் தொழிலும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்து, உங்களால் முடிந்ததை செய்யும் பட்சத்தில் பணம் தானாக வரும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago